
2010ம் வருடம் – உச்ச நீதி மன்றத்தில் – சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் திருக்கோயில் வழக்கில் – கூடுதல் அஃபிடவிட் ஒன்றை தாக்கல் செய்து அன்றைய ஆணையர் Shampath சாமர்த்தியமாக செயல்படுவதாக நினைத்து ஒரு பெரிய தவறைச் செய்தார்.
“… நாங்கள் ஸ்ரீ சங்கராச்சாரியார் நிர்வகிக்கும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் திருக்கோயிலுக்கும், மதுரை ஆதீனம் நிர்வகிக்கும் கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலுக்கும் – செயல் அலுவலர்கள் நியமனம் செய்துள்ளோம். அதனால் (???)சிதம்பரம் கோயிலுக்கு செயல் அலுவலர் நியமனம் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது…” என்பதே அந்த முட்டாள்தனமான வாதம். இதைப் பார்த்த Dr சுப்ரமணியன் சுவாமி அவர்கள் இந்த இரு கோயில்களில் குறிப்பிடும் செயல் அலுவலர் நியமன உத்தரவுகளைத் தகவல் அறியும் சட்டம் மூலம் எடுக்க என்னைப் பணித்தார்.
அதன் பிறகுப் பார்க்க வேண்டுமே வேடிக்கையை – பல மனுக்கள், மேல் முறையீடுகள் செய்தும் இந்த அறம் அற்றத் துறை – உத்தரவு நகல்களை வழங்கவே இல்லை. ஒரே மழுப்பல் – உத்தரவு போட்டிருந்தால் தானே நகல் கொடுக்க முடியும். அதன் பிறகு இந்த நோக்கில் ஆராய்ச்சியை விரிவு செய்தேன். அறநிலையத்துறையில் இவர்கள் இல்லாத உத்தரவை வைத்துக்கொண்டு சென்னை ஸ்ரீ கபாலீஸ்வரர் முதல் இராமேச்சுரம் ஸ்ரீ இராமநாத ஸ்வாமி கோயில்கள் வரை மோசடியாக இருந்து வருவதை அறிந்து கொண்டேன்.
இந்துக் கோயில்களை விட்டு அரசு போய்விடக் கூடாது என்று கூக்குரல் இடும் இந்து விரோத அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள், நாஸ்திகர்கள், கிறிஸ்துவ கைக்கூலிகள் ஆகியோர் கோயில் விடுதலைக்கு உழைத்தவர்களைத் திட்டுவதாக இருந்தால் – அந்த நபர்
உச்ச நீதிமன்றத்தில் உளறிக் கொட்டிய Shampath – முன்னாள் ஆணையர் அவர்களைத் திட்டிக் கொள்ளட்டும். இந்தத் துறை ஒரு பெரும் மோசடித் துறை என்று எனக்குக் காட்டிக் கொடுத்தவர் அவர்தாம். நிற்க….
15.01.2021 அன்று அடியேன் அரசுச் செயலர் – அறநிலையங்கள், ஆணையர் – இந்து சமய அறநிலையத் துறை – ஆகியோர்க்கு ஒரு நோட்டிஸ் ஒன்று அனுப்பினேன். நோட்டிஸில் 32 கோயில்கள் பெயர்களைக் குறிப்பிட்டு – தகவல் அறியும் சட்டத்தில் இந்தக் கோயில்களில் முதன் முதலாக செயல் அலுவலர் நியமனம் செய்த உத்தரவு நகல்கள் கேட்டிருந்தேன். அந்தக் கோயில்கள் எல்லாம் அப்படி ஓர் உத்தரவு கிடைக்கப் பெறவில்லை அல்லது காணவில்லை என்று விடை அளித்திவிட்டார்கள்.
எனவே இந்தக் கோயில்களில் நியமன உத்தரவு இல்லாமலேயே செயல் அலுவலர்கள் மோசடியாகக் கோலோச்சுகின்றனர் என்பது தெளிவாகிறது. இஃது அரசியல் சட்டத்திற்கும், இந்து சமயத்துறைச் சட்டத்திற்கும் விரோதம் என குறிபிட்டு – இந்தக் கோயில்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும். யாரிடமிருந்து கோயில் நிர்வாகம் மோசடியாக மேற்கொள்ளப்பட்டதோ அவர்களிடம் – பரம்பரை அறங்காவலர் அல்லது நிர்வகித்து வந்த ஊரார் சமூகம் அல்லது ஸம்ப்ரதாயத்திடம் – நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன்.
பொதுவாக இத்தகைய நோட்டிசுக்கு அறநிலையத்துறை விடை அளிக்காது. அதிசயமாக அன்றைய தினத்தில் Dr பிரபாகர் IAS அவர்கள் ஆணையராக இருந்ததால் உடன் விடை அளித்தார்.
“… 30 வருடங்களுக்கு மேற்பட்ட செயல் அலுவலர் நியமனங்கள் இவை. இவற்றை எல்லாக் கோப்புகளிலும் பதிவறையில் தேடி வருகிறோம். கிடைத்தவுடன் வழங்குவோம் …” என விடை அனுப்பினார்.
அதன் பிறகு அவர் விடுமுறையில் சென்று, மாற்றலும் ஆகிவிட்டார். இடைப்பட்ட காலத்தில் – நான்கு மாதக் காலத்தில் இவர்களுக்கு ஒரு நியமன உத்தரவும் கிடைக்க வில்லை எனத் தெரிகிறது. தற்போது சில நாட்களுக்கு முன்பாக ஒரு செயல் திறன் மிக்க அரசு அதிகாரி ஆணையராக வந்துள்ளார்.
அவருக்கு, வழக்குத் தொடுப்பதற்கு முன்பாக, நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்புவது நலம் என்று நேற்று அ:.தை அனுப்பினேன். என்ன விடை வருகிறது என்பதைப் பார்க்க மேலும் பத்து நாட்கள் காத்திருப்பேன்.
என்ன, அவர்கள் இதுவரை 4 மாத காலம் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் இப்படி உத்தரவு இல்லாமல் செயல் அலுவலர் இருக்கும் பட்டியலில் – என்னிடம் உள்ள தகவல்கள், ஆவணங்கள் வைத்து தொகுத்ததில் – தற்போது 112 கோயில்கள் உள.
இனி – விரைவில் – அறநிலையத் துறை என்னும் புத்தகத்தில் – “நடுவில் பல பக்கங்கள் காணோம்” – என்ற செய்தி வரும். ஹரி ஓம் சிவ சிதம்பரம்
- டி.ஆர். ரமேஷ்

