
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் மதுரைக்கு இன்று வருகிறார் இன்று முதல் அடுத்து நான்கு நாட்களுக்கு சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் அவரது வருகையை ஒட்டி மதுரை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை மதுரை எம்பி வெங்கடேசன் பொதுவெளியில் தனது ட்விட்டர் பதிவில் பகிர்ந்து அரசியலை செய்திருக்கிறார்.
அரசியல்வாதி என்றால் அரசியல் தான் செய்ய முடியும் அவியலா செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியவர்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் மதுரை எம்.பி., சு. வெங்கடேசனும் தன் பங்குக்கு ஒரு மோசமான அரசியலை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆர்எஸ்எஸ்., தலைவர் வருகையை முன்னிட்டு சாலைகளை சீராகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது அதை பொது வெளியில் பகிரங்கமாக பகிர்ந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது வரம்பை மீறி இருக்கிறார்.
மதுரையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொள்ள உள்ள நிகழ்ச்சிக்காக அவர் செல்லும் வழித் தடங்களில் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியது அந்த சுற்றறிக்கையை மாநகராட்சி பணியில் உள்ள யாரோ ஒரு ஊழியர் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருக்கிறார் அந்த ஊழியர் யார் அவர் யாருக்காக ஊழியம் செய்கிறார் என்பதை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும்

இந்த சுற்றறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட மதுரை எம்பி வெங்கடேசன், “அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மதுரை மாநகராட்சி ஆணையர், “உச்சக்கட்ட பாதுகாப்பு உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு எப்போதும் செய்யக் கூடிய பணிதான்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இந்த சுற்றறிக்கையை அனுப்பிய உதவி ஆணையர், பழி வாங்கப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, செய்யத்தகாத குற்றம் செய்திருப்பது போல் தமிழக அரசால் பழிவாங்கப் பட்டிருக்கிறார் என்பதே நிஜம். இதற்குக் காரணமாக அமைந்து இருப்பது, ஓர் அப்பாவி அதிகாரியின் பணிக்கு தொந்தரவு செய்ததாக அமைந்திருப்பது அரைகுறை அறிவுடன் கூடிய, அல்லது வன்மம் மனத்தில் புரையோடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு மட்டுமே என்பது பளிச்செனத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் மேலும் சில கேள்விகள் எழுகின்றன.
எத்தனையோ முறை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சென்னைக்கு வந்திருக்கிறார். இன்னும் கோவை உள்ளிட்ட ஊர்களுக்கும் வந்திருக்கிறார். பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இருக்கும் ஒருவரின் பாதுகாப்பு, குறிப்பாக, இசட் பிளஸ் பிரிவு என்ற வகையில் இருக்கும் முக்கியப் பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு என்று வரும்போது அந்த அந்தப் பகுதி காவல் துறையும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளும். இதற்காக எத்தனையோ துறைகள் வேலை செய்கின்றன!
ஆனால், இதுவரை இப்படி எந்த உத்தரவுகளும் பொது வெளியில் வந்ததில்லை. வழக்கமாக நடைபெறும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை எந்த அடிப்படை அறிவும் உணர்வும் உள்ள அலுவலக ஊழியரும், அதிகாரியும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினரும் பொது வெளியில் பகிர மாட்டார்கள். ஆனால் உள் நோக்கத்துடன் போர் அலுவலக ஊழியம் பார்ப்பவரும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் பொதுவெளியில் பகிரங்கப் படுத்தியிருக்கிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினருக்கும் கூட்டணிக் கட்சியான ஆளும் திமுகவுக்கும் இருக்கும் ஒரே உள்நோக்கம் ஆர்.எஸ்.எஸ்., என்றால் இதுதான் நடக்கும் என்ற ஒரு சமிக்ஞையை வெளி உலகத்துக்கு கொடுக்க முயன்று வேலை செய்வதுதான்!
ஏற்கனவே திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் தேசிய உணர்வை மழுங்கச் செய்வதிலும் துண்டாக்குவதிலும் பெருமுயற்சி எடுத்து வந்திருக்கின்றன. ஆட்சியில் இருந்த அதிமுக., ஏற்கெனவே, இந்து இயக்கங்கள், பாஜக., தொடர்பு இயக்கங்களை நசுக்க பல வேலைகளைப் பார்த்திருக்கிறது.
திமுக., இப்போது பாஜக.,வின் மேலுள்ள பயத்தால்… வேண்டுமென்றே அரசியல் செய்து வருகிறது. இதுவரை மோகன் பாகவத்துக்கு இல்லாத வெளிச்சம் இப்போது ஏன்? நேற்றுவரை சர்வ சாதாரணமாக செயல்வீரர்களின் வீடுகளுக்குக் கூட வந்துவிட்டுப் போனவர் அவர். அப்போதெல்லாம் ஏன் இந்த சுற்றறிக்கை அரசியல் செய்யப் படவில்லை.
வழக்கமான நடைமுறையை வேண்டுமென்றே அரசியல் ஆக்கியதில்… யோசித்துப் பார்த்தால்.. திமுக.,வின் அவியல் அற்ற அரசியல் புரிகிறது!
வழக்கமாக ஒரு இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருக்கும் முக்கிய தலைவர் வரும்போது, அலுவலக உள்மட்ட அளவில், வாய்மொழி உத்தரவாக ‘பாதுகாப்பு நடவடிக்கைகள்’ மேற்கொள்ளச் சொல்லுவதும் இப்படி உள்-அறிவிக்கை – வெளியிடுவதும் உண்டு. இது சுகாதாரப் பணியாளர்கள், ஊழியர்கள் சம்பந்தப் பட்டது. இதில் அதிகார துஷ்பிரயோகமோ, அத்துமீறலோ இல்லை.
ஆனால், தங்களுக்கு ‘பிச்சை போட்ட’வர்களுக்காக ஊழியம் பார்க்கும் மாநகராட்சி அலுவலக ஊழியர், எம்பி.,க் குதிப்பவர், இதனை ஏதோ பெரிய அரசியல் சாதனையாக வெளம்பரப் படுத்தி அரசியல் செய்து, ஓர் அப்பாவி உதவிஆணையரை மூலையில் முடக்கி விட்டிருக்கிறார்கள். உதவாக்கரை வேலை பார்த்த எம்பிக் குதிப்பவர் கிறிப்டோ என்றால், உதயசந்திரன் டைரக்ட் ஊழியம் பார்ப்பவர் என்ற குற்றச்சாட்டும் இப்போது சமூகத் தளங்களில் முன் வைக்கப் பட்டிருக்கிறது!
பாஜக., மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, ஏதோ மூன்று மாவட்டத்துக்குள் மட்டும் சிறுபான்மையினரின் ஆதிக்கத்தில் திமுக தன் கட்சியை இழந்திருக்கிறது என்று கூறி நிறுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால், அது தலைமைச் செயலகத்தில் தன் தலையிலேயே அமர்ந்திருக்கிறது என்பதை இப்போது பிச்சை போட்டவர்களுக்காக வெளிப்படையாகக் காட்டியிருக்கிறது திமுக.,!

இதே ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மதுரை வருகைக்காக, மின் துறையிலும் இதே போன்ற சர்க்குலர் விடப் பட்டிருக்கிறது. மாநகராட்சியில், ‘பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தின் விவாதத்தில் சொல்லப் பட்ட அறிவுரையை உதவி ஆணையர் அறிவிக்கை என வெளியிட்டார். அவர் இப்போது பழி தீர்க்கப் பட்டிருக்கிறார். அப்படி எனில், ஏன் மின் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப் படவில்லை?! ஒருவேளை அது குறித்தும் மதுரை எம்பி டிவிட்டர் பதிவு வெளியிட வேண்டும் போலிருக்கிறது!