
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவரசக்கால ஒப்புதல் வழங்குவது குறித்து வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது கொரோனா வைரஸ் தான். கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப அனைத்து நாடுகளும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.
இருப்பினும், தற்போது வரை எந்தவொரு நாட்டினாலும் கொரோா பாதிப்பை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
ஊரடங்கு உள்ளிட்ட கடுமையாகக் கட்டுப்பாடுகள் மூலமும் எந்தவொரு நாட்டிலும் வைரஸ் பாதிப்பை முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
தற்போதைய சூழலில் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த கொரோனா வேக்சின் மட்டுமே ஒரே தீர்வாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் வேக்சின் போடும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளும் வேக்சின் போட்ட வெளிநாட்டினரை தங்கள் நாடுகளில் அனுமதிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்தியாவில் இப்போது கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா, ஜான்சன் என ஐந்து வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும்கூட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வேக்சிகனே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இதுவரை இந்தியாவில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரே கொரோனா வேக்சினாக உள்ளது.
இருப்பினும், தற்போது வரை கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் கோவாக்சின் எடுத்துக் கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற பாரத் பயோடெக் நிறுவனம் தொடர்ந்து முயன்று வருகிறது. இந்தச் சூழலில் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக இருந்ததாகாவும் வரும் செப்டம்பர் மாதம் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு முடிவெடுக்கும் என அந்த அமைப்பின் வேக்சின் பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் மரியங்கேலா சிமாவோ தெரிவித்துள்ளார்,
பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்சின் 78% வரை பலன் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் 2ஆம் அலையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனாவுக்கு எதிராகவும் கோவாக்சின் நல்ல பலன் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்சின் தவிர அனோஃபி பாஸ்டர் மற்றும் நோவாவாக்ஸ் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று டாக்டர் மரியங்கேலா சிமாவோ குறிப்பிட்டார்.