சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி தபால் நிலையத்தில் குடிபோதையில் தூங்கிய ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதிகளில் கிராமப்புற தபால் நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் அருள்வாடி கிராமப்புற தபால் நிலையத்தில் ஊழியராக ராஜேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார்.
இவர் குடிபோதையில் பணியில் இருப்பதாகவும் மேலும் அருள்வாடி பகுதியிலுள்ள மல்லன்குழி, கும்பாரகுண்டி, கொங்கனபுரம் பகுதிக்கு வரும் விரைவு தபால்கள், பதிவு தபால்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு கடிதங்கள் உரிய நேரத்தில் வினியோகிக்கப் படுவதில்லை என்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தபால் துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிபோதையில் தபால் நிலையத்திற்கு வந்து அங்கு உள்ள நாற்காலியில் போதையில் அமர்ந்து தூங்கியுள்ளார்.
இந்த காட்சியை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும், இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.