
பேஸ்புக் சமூக ஊடகத்தில் தனியுரிமை குறித்த அச்சுறுத்தல் காரணமாக முக்கிய வசதியை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ‘ஃபேஸ்புக்கை, உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக செயலிகளையும் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது.
இந்த மூன்று செயலிகளையும் நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என்று அண்மையில் மாற்றப்பட்டது. எனினும் செயலியின் பெயர் ஃபேஸ்புக் என்றே தொடர்கிறது.
ஃபேஸ்புக் செயலியால் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல ஆண்டுகாலமாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஃபேஸ்புக்கில் முக அங்கீகாரம் (facial recognition) என்னும் வசதி உள்ளது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்களில் உள்ள உங்கள் முகத்தை தானாகவே ஃபேஸ்புக் அங்கீகரித்துவிடும்.
பின்னர், உங்கள் முக ரேகை கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டால் இது குறித்த தகவல்களை உங்களுக்கும் வழங்கும். ஃபேஸ்புக்கின் இந்த ஆட்டோமெட்டிக் முக அங்கீகார வசதியால் தனியுரிமை பாதிக்கப்படுவதாக பலரும் கூறிவந்தனர்.
இதேபோல், ஃபேஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான Frances Haugen, ஃபேஸ்புக் குறித்த பல்வேறு தகவல்களை வெளியீட்டார். அதில், தங்களது செயலியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் அறிந்தும் அதனை சரி செய்யாமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்து.
இந்நிலையில்தான், ஃபேஸ்புக்கில் இருந்து இந்த வசதியை நீக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. கோடிக் கணக்கான முகரேகைகளையும் அழிக்கப் போவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது