
ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுக்ரித் என்ற 4 வயது சிறுவன் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு வேகமாக பதில் அளித்து ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்திய மாநிலங்கள், மாதங்கள், நிறங்கள், பழங்கள், விலங்குகள், உலகத் தலைவர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் என்பன உள்ளிட்ட பொது அறிவு கேள்விகளுக்கு அதிவேகமாக பதில் அளிக்கும் திறமையைப் பெற்றுள்ளார்.
ராணிப்பேட்டை அடுத்த பாரத மிகுமின் (பெல் டவுன்ஷிப்) ஊரகக் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் தேவேந்திரன் – நிஷாந்தி தம்பதியின் மகன் சுக்ரீத் (4). தன்னுடைய அக்காவிற்கு, அம்மா பாடம் கற்பிக்கும்போது அதனை கூர்ந்து கவனித்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில் நிஷாந்தி தன் மகளிடம் கேட்கும் கேள்விகளுக்கு சுக்ரீத் தாமாக முன் உடனடியாக வந்து பதில் அளித்துள்ளார்.
இதனைக் கண்டு ஆச்சரியப்பட்ட பெற்றோர்கள், அவரது திறமையை ஊக்குவித்து பயிற்சி அளித்துள்ளனர். இதனால் தற்போது 4 வயது சிறுவனான சுக்ரீத், இந்திய மாநிலங்களின் பெயர்கள், மாதங்கள், நிறங்கள், விலங்குகள், பிரதமர், குடியரசுத் தலைவர் என்பது உள்ளிட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு கேள்வியை முடிக்கும் முன், நொடியில் பதிலளித்து அசத்துகிறார் சுக்ரீத்.
இந்தச் சிறுவனின் அசாத்திய நினைவாற்றலையும், அதிவேகத்தில் பதில் அளிக்கும் திறமையையும் அங்கீகரிக்கும் வகையில் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்து சான்றிதழ் அளித்துள்ளது.
இந்த சாதனைச் சிறுவனை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.கிளாட்சன் புஷ்பராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில், என் மகளுக்கு பாடங்களைக் கற்பிக்கும்போது, மகன் சுக்ரீத் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு பதில் அளிப்பதைப் பார்த்து, ஊக்குவித்ததன் காரணமாக சுக்ரீத் சாதனை படைத்துள்ளான்.
தொடர்ந்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற சுக்ரீத் விரைவில் லண்டனில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கத் தயாராகி வருவதாகவும் கூறினார்.