
வைர சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட வைரத்தில் இருந்து உலகில் இதுவரை பார்த்திராத கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது
அந்த கனிமத்துக்கு Davemaoite என பெயரிடப்பட்டுள்ளது.
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே பூமி மட்டுமே மனிதர்கள் வசிக்கும் தகுதி பெற்றிருக்கும் நிலையில், மனித வாழ்வியலுக்கு தகுதி வாய்ந்த வேறு ஏதேனும் கோள்கள் உள்ளனவா எனவும் நிலவில் தண்ணீர் குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் நம் பூமியை பற்றியே இன்னமும் புரிந்து கொள்ள முடியாத பல ஆச்சரியங்கள் நிரம்பி இருப்பது அவ்வப்போது நடைபெறும் கண்டுபிடிப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
பூமியில் உள்ள கனிமங்கள் அனைத்தும் வகைப்படுத்தப்பட்டு விட்டதாக கருதிய நிலையில் புதிய கனிமம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அறிவியல் பத்ரிகையான சயின்ஸில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், வைர சுரங்கத்தினுள் மிக ஆழத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரத்தினுள், உலகத்தில் இதுவரை கண்டறியப்படாத கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கனிமத்துக்குக்கு பிரபல புவி இயற்பியலாளர் Ho-kwang (Dave) Maoவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Davemaoite பூமியின் மேலடுக்கில் ஒரு முக்கிய புவி வேதியியல் பாத்திரத்தை வகிப்பதாக நம்பப்படுகிறது. கதிரியக்கச் சிதைவு மூலம் வெப்பத்தை வெளியிடும் யுரேனியம் மற்றும் தோரியம் உள்ளிட்ட பிற சுவடு கூறுகளும் இக்கனிமத்தில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே, பூமியின் மைய பகுதியை அடுத்தடுத்திருக்கும் அடுக்குகளில் கணிசமான அளவு வெப்பத்தை உருவாக்க davemaoite உதவும்.
davemaoiteன் கண்டுபிடிப்பு, முன்பு நினைத்ததை விட பூமி அடுக்குகளில் வைரங்கள் மிகக் கீழே உருவாகலாம் என்பதைக் காட்டுகிறது, மேலும் பூமி அடுக்குகளில் இருந்து அதிக புதிய கனிமங்களைத் தேடுவதற்கான சிறந்த இடமாக அப்பகுதி இருக்கலாம் என்று அது அறிவுறுத்துகிறது.
மேலும், இது ஒரு படிக அமைப்பைக் கொண்டுள்ளது, இது அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலை நிலைமைகளின் கீழ் உருவாகிறது, இது மையத்திற்கும் (Core) மேலோட்டத்திற்கும் (Mantle) இடையில் சிக்கியுள்ள பூமியின் அடுக்கின் ஆழத்தில் மட்டுமே காணப்படுகிறது.
முக்கியமாக பூமியின் அடிப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்படும் கனிமங்கள், மேல் பரப்புக்கு கொண்டுவரப்படும் போது அவற்றின் பண்புகளை இழந்துவிடும், ஆனால் davemaoite அதனுடைய பண்பை இழக்காமல் இருப்பது அறிவியல் உலகத்துக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்