Dolo 650 மாத்திரையை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து பிரபல டாக்டர் சில எச்சரிக்கை தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கொரோனா காலகட்டத்தில் தொற்று பாதிப்பு உள்ளவர்கள், லேசான அறிகுறி தென்படுபவர்கள் என அனைவரும் வாங்கிய மாத்திரை எதுவென்றால் டோலோ 650 தான்.
மருத்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்க முடியும் என்பதால், பொதுமக்கள் பலரும் இதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் இந்த கொரோனா காலகட்டத்தில் மருத்துவர் பரிந்துரை இன்றி பலரும் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்பது குறித்து டாக்டர். செங்கோட்டையன் ஜோன்ஸ் கூறியுள்ளார். அதாவது, சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் முக்கிய மாத்திரை இது.
பல்வேறு பாராசிட்டமால் மாத்திரைகளில் Dolo-வும் ஒன்று. காய்ச்சலில் இருந்து வெளி வருவதற்கு இது உதவுகிறது என்றாலும் அதிகமாக பயன்படுத்தினால் கல்லீரலில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
அதுபோல கல்லீரலில் ஏற்கனவே பாதிப்பு இருப்பவர்கள் Dolo என்ற இந்த பாராசிட்டமாலை அதிகமாக சாப்பிடுவதால் கல்லீரல் எளிதில் பாதிப்பு அடையும். இது காய்ச்சலை தற்காலிகமாக குறைக்கிறதே தவிர முழுமையாக குணப்படுத்துவதில்லை.
கல்லீரல் பிரச்சினைகளை மட்டுமின்றி ரத்தசோகை, மஞ்சள் காமாலை, உடல் வீக்கம், சருமப் பிரச்சினைகள், தடிப்புகள், டயேரியா போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையின் படி எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.