தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் பள்ளிக் கல்வித் துறையின் மெத்தனம்: அண்ணாமலை கண்டனம்!

Published:

annamalai k - 2026

தமிழக பள்ளி மாணவர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் மெத்தனப் போக்குடன் இருக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் பாஜக., தமிழகத் தலைவர் கே.அண்ணாமலை. இது குறீத்து அவர் வெளியிட்ட அறிக்கைகளில்….

பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள். புதுச்சேரி சார்பாக தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்கும்போது, தமிழகப் பள்ளி மாணவர்கள் அணியைத் தேர்வு செய்யாத பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மாண்புமிகு பாரதப் பிரதமர் தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவாக இருப்பதால், சர்வதேச விளையாட்டு போட்டிகளில், முன்னெப்போதையும் விட அதிகமான பதக்கங்களை இந்தியா பெற்று வருகிறது. விளையாட்டுத் துறையில் நம் நாட்டை முன்னேற்ற, தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகம், கேலோ இந்தியா திட்டம், விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரமான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தவும் மாண்புமிகு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, விளையாட்டுத் துறைக்கென அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார். 2023-2024 ஆண்டுக்கு, ரூபாய் 3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் பொறுப்பற்ற இந்தச் செயலை, தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்… என்று குறிப்பிட்டார்.

முன்னதாக இது குறித்து சமூக வலைத்தளப் பதிவுகளில், இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே பொறுப்பு என்று குறிப்பிட்டிருந்தார். அதில்…

டெல்லியில் நடைபெறவிருக்கும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் சார்பாக அணியை தேர்வு செய்யாமல், தமிழக பள்ளிக் கல்வித் துறை தமிழக மாணவர்களைப் புறக்கணித்தது குறித்து, கடந்த ஐந்தாம் தேதி அன்று கேள்வி எழுப்பியிருந்தோம்.

அது குறித்து ஊடகங்களில் செய்தியாக வந்தும், தமிழக பாஜக, தமிழக அரசுக்கு இதுகுறித்து மீண்டும் நினைவூட்டிய பிறகும், இத்தனை நாட்களும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விட்டு, இன்று, முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து, தான் பணியில் இழைத்த தவறை மறைக்கப் பார்க்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் பொறுப்பின்மையை மறைக்க, அரசு அதிகாரிகளைப் பலிகடாவாக்கி, தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிரகாசிக்கும் கனவுடன் இருந்த பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா? பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்… என்று குறிப்பிட்டிருந்தார் கே.அண்ணாமலை.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img