
— ஆர். வி. ஆர்
ஜெயலலிதாவைக் களங்கப் படுத்தி பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பேட்டியில் பேசினார் என்று சொல்லி, அதிமுக-வின் மாவட்டச் செயலாளர்கள் இப்போது அண்ணாமலையைக் கண்டித்துத் தீர்மானம் போட்டிருக்கின்றனர். அதை அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு வாசித்துக் காட்டி இருக்கிறார். அதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தமிழகம் வந்த மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, அண்ணாமலையைத் தனது ‘இளைய சகோதரர்’ என்று நெருக்கத்துடன் குறிப்பிட்டார்.
சில வரங்கள் முன்பு பேசிய அண்ணாமலை, ‘2024 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அதிமுக தலைவர்களின் சொத்துப் பட்டியலையும் வெளியிடுவேன்’ என்ற அர்த்தத்தில் வார்த்தைகள் சொன்னார். இது, பலரும் எதிர்பாராத அசாத்தியத் துணிவு, அசாதாரண அரசியல் நேர்மை. அவர் பேசியதன் பொருள்: திமுக-வோடு சேர்த்து அதிமுக-வையும் பாஜக எதிர்க்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.
அதிமுக இப்படித்தான் நினைக்கிறது: ‘பொதுவெளியில் ஊழலுக்காக, ஆட்சி முறைகேடுகளுக்காக, திமுக-வைக் கடுமையாக எதிர்க்கும் அண்ணாமலை, அதிமுக-வை ஒரு முழுத் தூய்மையான கட்சியாக எண்ணி அனுசரித்து நடக்க வேண்டும். வேண்டுமானால் தேர்தலின் போது ஒன்றிரண்டு எம்.பி சீட்டுக்கள், சில எம்.எல். ஏ சீட்டுக்கள் பாஜக-விற்குக் கூடுதலாகத் தரலாம். மற்றபடி, தமிழக அரசியலில் சமர்த்தாகப் பின்னால் வரும் ஜூனியர் கூட்டணிக் கட்சியாக பாஜக இருக்க வேண்டும்.’
தமிழக பாஜக-வின் மீதான அதிமுக வின் எதிர்பார்ப்பும், அதிமுக-வின் தூய்மை பற்றிய அண்ணாமலையின் எண்ணமும், மற்ற தரப்பினருக்குத் துளியும் ஏற்புடையதாக இல்லை, உரசலை வளர்க்கும்படிதான் இருக்கிறது.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு? திமுக தலைவர்கள் அவ்வப்போது இந்து மதத்தை இகழ்வார்கள். தப்பாட்சி செய்து தன்னலம் வளர்ப்பார்கள். அதிமுக தலைவர்கள் விபூதி குங்குமம் இட்டுக் கொள்வார்கள். மற்றபடி ஆட்சி செய்வதிலும் செழிப்பதிலும் அவர்களும் திமுக-வினர் மாதிரித்தான். மக்கள் நலன் என்பது அந்த இரு கட்சிகளுக்குமே பெரும் பாசாங்கு. இது போக, திமுக-வைத் தடுத்துவிட்டு, தனது கட்சி மாநில ஆட்சிக்கு வருவதற்காக பாஜக-வுடன் தேர்தல் கூட்டு வைக்க அதிமுக விரும்பும், அந்த அளவுக்கு மட்டும் அது பாஜக-வை சகிக்கும்.
பாஜக மக்கள் செல்வாக்கைப் பெரிதளவில் நேரடியாகப் பெற முடியவில்லை என்றால், அந்தக் கட்சி அதிமுக-வுடன் கூட்டு வைத்து முதலில் திமுக-வைத் தோற்கடிக்க வேண்டும், பிறகு படிப்படியாக அதிமுக-வையும் எதிர்த்துத் தேர்தலில் வெல்ல வேண்டும் – அவ்வாறு தமிழகத்தில் திராவிடக் கட்சிகளே தலை தூக்காத ஆட்சியை அமைக்க வேண்டும் – என்ற தொடர் நிகழ்வுகள் சாத்தியமா? அவை சாத்தியம் என்று பேராசையுடன் எண்ணிப் பார்த்தாலும் அதற்கு முப்பது நாற்பது ஆண்டுகள் ஆகுமே? அரசியலில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கே துளியும் மாறாத திட்டங்கள் இல்லை. ஆகையால் முதலில் அதிமுக-வின் துணையுடன் திமுக-வை வென்று ஒதுக்கி வைத்துவிட்டுப் பின்னர் பாஜக தனியாக அதிமுக-வையும் தோற்கடிப்பது என்பது வெறும் கனவு.
ஒன்றைத் தெளிவு படுத்திக் கொள்ளலாம். ‘திராவிடக் கட்சிகள்’ என்று குறிப்பிட்டால் ஏதோ தமிழையும் தமிழர் பண்பாட்டையும் அவர்கள் நலனையும் முதன்மையாகப் பேணும் கட்சிகள் என்று அர்த்தமல்ல. அந்த மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, தமிழகத்தைத் தனிமைப் படுத்தி, நமது இந்திய முகத்தை மறைத்து, பதவியில் அமர்ந்து, பூகோள விஞ்ஞான முறைகேடுகள் புரிந்து, உச்சபட்ச சுயநலம் வளர்க்கச் செயல்படும் தமிழகக் கட்சிகள் அவை என்று அர்த்தம். பாஜக தமிழகத்தில் ஒரு திராவிடக் கட்சி இல்லை என்றாலும் தமிழ், தமிழகம், தமிழர்கள் என்பதை மனதில் வைத்துப் போற்றி, இந்தியாவையும் வணங்கி நிற்கும் ஒரு கட்சி.
2024 லோக் சபா தேர்தலில், அதிமுக-வுடன் அணி சேருவதால் கிடைக்கும் தமிழக எம்.பி-க்கள் எண்ணிக்கை (பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி-க்கள்) மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க மிக அவசியம், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரு சேர எதிர்த்தால் தமிழகத்தில் போதிய எம்.பி-க்கள் எண்ணிக்கை பாஜக-விற்குக் கிடைக்காது, அதனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க முடியாமால் போகலாம் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அதன் படித்தான், பாஜக இப்போது அதிமுக ஆட்சி முறைகேடுகளைப் பற்றி ஒன்றும் பேசாமல் பூசி மெழுகி, அதிமுக-வோடு உறவும் கூட்டும் வைத்து, திமுக-வை மட்டும் எதிர்க்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளது. இப்படியான கணக்கு சிக்கலானது, இது தப்பாகப் போவதும் அதிக சாத்தியம்.
2024 தேர்தலில் பாஜக-விற்கு, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு, மற்ற மாநிலங்களில் கிடைக்கும் எம்.பி-க்களே மத்தியில் ஆட்சி அமைக்கப் போதுமானது என்ற வலுவான கணக்கும் சேர்ந்து இருந்தால், அண்ணாமலையின் தலைமையில் பாஜக தமிழகத்தில் அதிமுக-வையும் எதிர்க்கலாம். பயனற்ற ஆட்சிக்கு, ஊழலுக்கு, ஆட்சி முறைகேடுகளுக்கு மாற்றாக பாஜக-வை ஆதரிக்க நினைக்கும் சாதாரண மக்கள், திமுக தரப்பில் இருந்து மட்டும் இன்றி, அதிமுக தரப்பில் இருந்தும் வரலாமே?
திமுக-வை முன்பு ஆதரித்த சாதாரண மக்களில் பலர், கருணாநிதியின் மகன் ஸ்டாலின் இப்போது முதல் அமைச்சராக இருக்கும் போதே அண்ணாமலையால் பாஜக-விற்கு ஈர்க்கப் படலாம். அது சாத்தியம் என்றால், ஜெயலலிதா இல்லாத அதிமுக-வின் பொம்மைத் தலைவர்களிடம் இருந்து சாதாரண மக்கள் பலர் விலகி வந்து, உயிர்ப்பான அண்ணாமலையின் பாஜக-விற்கு ஓட்டளிக்க வாய்ப்பும் அதிகம்.
எந்தப் பெரிய காரியத்தைக் கையில் எடுப்பதற்கு முன்னும் வெற்றி நிச்சயம் என்றில்லை. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்ப்பது மிகப் பெரிய காரியம்தான். இந்தி புரியாத தமிழகத்தில் மோடியும் அமித் ஷாவும் மக்கள் செல்வாக்கை நேரடியாக அதிகம் பெறுவது நடக்காது. தமிழகத்தில் மோடியை முன்னிறுத்த (அதைவிட, பாஜக-வை சாதாரண மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு செல்ல) மோடியின் நம்பிக்கையைப் பெற்ற அண்ணாமலை மாதிரியான ஒரு ஒளிமிக்க தமிழகத் தலைவர் அவசியம்.
இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதற்கான காலம் இதுதான். அதற்கான தமிழக பாஜக தலைவர் கிடைத்திருப்பதும் இப்போதுதான். அந்தச் செயலை ஆதரிக்கக் கூடிய வலுமிக்க மத்தியத் தலைவர்கள் பாஜக-வில் இருப்பதும் இப்போதுதான் – இது போகப் போக நிச்சயமாகும். அண்ணாமலையின் வீரத் தலைமையில் – அவருக்கு இருக்கும் திறமையான அர்ப்பணிப்புள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களின் துணையோடு – இந்தப் பெரிய காரியம் இப்பொது முயற்சிக்கப் படாவிட்டால் பின்னால் சாத்தியம் ஆவது இன்னும் கடினம். நரேந்திர மோடி நல்ல ஆரோக்கியத்துடன் உச்சத்தில் இப்போது இருக்கும்போது, அண்ணாமலை இதை முயற்சிக்கவும் அதில் பலன் காணவும் வாய்ப்புகள் அதிகம். அதனால் காலம் தன்னைக் காதில் அழைப்பதாக அண்ணாமலை இப்போது உணர்கிறார்.
இந்த முயற்சி இன்று தோற்றாலும், அதற்கான உத்வேகமும் அடித்தளமும் தமிழகத்தில் வலுவாக அமைக்கப் படும் – அண்ணாமலையின் இந்த இளம் வயதிலேயே. மத்தியில் மோடியின் தலைமை பாஜக-விற்கும் நாட்டுக்கும் எவ்வளவு முக்கியம் வாயந்ததோ, அதற்கு ஈடானது அண்ணாமலையின் தலைமை தமிழ்நாட்டு பாஜக-விற்கும் தமிழ்நாட்டிற்கும்.
சரி, ஓரமாக ஒரு விஷயத்தையும் பார்க்கலாம். ‘நாம் தமிழர் கட்சி’த் தலைவர் சீமான் திமுக-வையும் அதிமுக-வையும் ஒரு சேரப் பொதுவெளியிலும் தேர்தல்களில் எதிர்க்கிறார். சென்ற 2021 தமிழக சட்டசபைத் தேர்தலில் அவர் கட்சி சுமார் 7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. அவர் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளைத் தொடர்ந்து எதிர்ப்பதற்கும், அண்ணாமலையின் தலைமையில் பாஜக அந்த இரு கட்சிகளையும் எதிர்த்து அரசியல் செய்யும் காட்சிக்கும் வேறுபாடு இருக்கிறதா? இருக்கிறது.
திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மூன்றுமே விரும்பத் தகாதவர்கள் என்பதை டக்கென்று எடுத்துக் காட்ட ஒரு உதாரணம் சொல்லலாம். இரண்டு நெடுநாள் கொள்ளைக் காரர்களை அம்பலப் படுத்த முனைபவர்கள் இரண்டு வகை. ஒருவர், அந்த இருவரைத் தாண்டி அவர்களின் இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கும் தந்திரமான மூன்றாவது கொள்ளைக் காரர். இரண்டாமவர், அந்த இருவரையும் அப்புறப் படுத்தி அமைதியை நிலைநாட்ட முனைபவர். அந்த இரண்டாமவர் அதற்குச் சரியான நபராக இருந்தாலும், அவர் துணிந்து முன்னுக்கு வந்து தனது முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டால்தான் மக்கள் அவரை அடையாளம் கொண்டு ஆதரிப்பார்கள். இல்லாவிட்டால் சோர்ந்து கிடக்கும் மக்களிடம் அந்த முதலாமவர் இன்னும் அதிக ஓட்டுக்கள் பெறுவார்.
அண்ணாமலையின் எண்ணம் முயற்சிக்கப் படுவது சரிதானே?
Author: R. Veera Raghavan, Advocate, Chennai