
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது கூறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது: தலைமைச் செயலகத்திலும் சோதனை நடத்துவோம் என்று காட்டவோ, அல்லது அதனைக் காட்டி மிரட்டவோ விரும்புகிறார்களா எனத் தெரியவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்திற்கு வந்து சென்ற நிலையில் உடனடியாக இதுபோன்ற காரியங்கள் நடக்கிறது என்றால் என்ன பொருள்?
ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமை செயலகத்துக்குள் அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல் சட்ட மாண்பைக் காப்பதா? மிகத் தவறான முன்னுதாரணங்களை தொடர்ந்து பாஜக., உருவாக்கி வருகிறது. பாஜக.,வின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்த பார்க்கும் பாஜக.,வின் அரசியல் செல்லுபடியாகாது. அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினின் 2016ம் ஆண்டு ஆசை இன்று நிறைவேறியுள்ளது என்று அண்ணாமலை டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
2016 ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற திமுக., தேர்தல் பொதுக்கூட்டத்தில் கரூரின் நிலை குறித்துப் பேசிய மு.க. ஸ்டாலின், அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து குற்றப் புகார் பட்டியலை வாசித்தார். எனினும், அவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தும் செந்தில் பாலாஜியை கடந்த தேர்தலின் போது திமுக.,வில் சேர்த்து, இந்த அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் ஸ்டாலின்.
இது குறித்த வீடியோக்கள் அவ்வப்போது சமூக தளங்களில் உலாவரும். தற்போது, அந்த வீடியோவை அண்ணாமலையும் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 2016 ஏப்.18ல் ஸ்டாலின் ஆசைப்பட்டது, இப்போது 2023 ஜூன்13ல் நிறைவேறியுள்ளது என்று குறிப்பிட்டு, அமலாக்கதுறை சோதனை குறித்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும்,செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்ணாமலையின் டிவீட்….
தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது.
தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திரு செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்!