
சனாதன ஒழிப்பு மாநாட்டில், ஆளும் தமிழக திமுக., அரசின் அமைச்சராகக் கலந்து கொண்டு, சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பி.ராமநாதன், தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீது அவருக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.
அவரது புகார்க் கடிதம்…
பி. ராமநாதன்
சமூக ஆர்வலர்
திருமலையப்பபுரம்,
பொட்டல்புதூர் அஞ்சல்,
தென்காசி மாவட்டம் 627423.
செல்: 97914 65876
தேதி: 14-09-2023
திரு. காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,
தென்காசி.
பொருள்: தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டிவிடும் தமிழக அமைச்சர்உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளல்.
பெருமதிப்பிற்குரியீர் வணக்கம்,
தமிழக அமைச்சர் உதயநிதி அவர்கள் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியிருக்கிறார். (முரசொலி நாளிதழ் 04.09.2023)
ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதத்தில் தாங்கள் காண்பதாகத் தோன்றும் குறைபாடுகளை எதிர்ப்பது என்பது வேறு. அது அவர்கள் உரிமை. ஆனால் ஒரு மதத்தைச் சேர்ந்தவர் பிற மதத்தில் தாங்கள் காண்பதாகத் தோன்றும் குறைபாடுகளை எதிர்ப்பது என்பது வேறு இது அத்துமீறல் மட்டுமல்ல தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.
உதயநிதி ஸ்டாலின் ஒரு இந்துவாக இருந்து சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியிருந்தால் அது அவருடைய உரிமை ஆனால் உதயநிதி ஸ்டாலின் இப்போது இந்து அல்ல, கிறிஸ்தவர்.
“மக்களைச் சாதிகளாக்ப பிரித்து தனித்தனியாக இருக்க வேண்டும் என்று சொன்னதுதான் சனாதனம்” என்று சனாதனத்தைச் சாடியிருக்கிறார். கிறிஸ்தவ மதத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் சாதிப்பாகுபாடுகள் இல்லாமல் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒரே சாதி என்ற நிலைமை இருக்குமேயானால் அவர் சனாதனத்தை தாக்குவதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால் இந்து மதத்தில் தாழ்ந்த சாதியினராக இருப்பவர்கள் உதயநிதியின் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகும் கூட தாழ்ந்த சாதியினராகவே நீடிக்கிறார்களே, உதயநிதியின் மதம் அவர்களை உயர்ந்த சாதியினராக மாற்றிவிடவில்லையே!
கிறிஸ்தவர் உதயநிதி இதனை எதிர்த்தும் போராடியிருக்கிறாரா? போராடுவாரா? இந்நிலையில் அவர் இந்து மதத்திலுள்ள சாதிப்பாகுபாடுகள் பற்றி விமர்சிப்பது இந்துக்களைக் கலவரம் செய்யத்தூண்டும் செயல்தானே. இது தொடர்பாக ஒரு விஷயத்தைக் கூறவேண்டும்.
தமிழ்த்திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உதயநிதியைப்போல் பகுத்தறிவுப் பரம்பரையைச் சேர்ந்தவர் அல்ல. பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்பவரும் அல்ல. ஆயினும், கூட அவர் தன்னுடைய “அலைகள் ஓய்வதில்லை” என்னும் திரைப்படத்தில் ஒரு முற்போக்கான கருத்தைக் கூறியிருப்பார்.
அந்த திரைப்படத்தில் ஒரு இந்து இளைஞனும், ஒரு கிறிஸ்தவ இளம்பெண்ணும் காதலிப்பார்கள். அவர்கள் இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுடைய காதலுக்குப் பலத்த எதிர்ப்பு ஏற்படுகிறது. எனவே அவர்கள் தங்கள் காதலுக்காகத் தங்கள் மதங்களையே அவர்கள் துறந்து விடுகிறார்கள்.
அந்த இந்து இளைஞன் தனது மத அடையாளமான பூனூலை அறுத்து எறிந்து விடுகிறான். அந்த கிறிஸ்தவப் பெண் தனது கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையுடன் கூடிய தங்கச் சங்கிலியையே அறுத்து எறிந்து விடுகிறாள். அவர்கள் ஒன்றும் முற்போக்கு சிந்தனையாளர்களோ பகுத்தறிவுப் பரம்பரையைச் சேர்ந்தவர்களோ இல்லை.
இப்பொழுது கிறிஸ்தவராக இருக்கும் உதயநிதி பிறவியிலேயே இந்து, பகுத்தறிவுப் பரம்பரையைச் சேர்ந்தவர். அவர் இந்துவாக இருந்தபோது ஒரு கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்தார். அந்தப்பெண்ணும் இவரைக் காதலித்தாள். இந்நிலையில் மதம் என்ற சொல்லையே வெறுக்கும் பரம்பரையைச் சேர்ந்த உதயநிதி தன் காதலுக்காக தன் திருமணத்திற்காக தனது மதத்தை துறந்து அப்பெண்ணையும் தனது மதத்தைத் துறக்க செய்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் அவ்வாறு நடக்கவில்லையே, என்ன நடந்தது தெரியுமா?
பகுத்தறிவுக் குடுப்பத்தைச் சேர்ந்த மதத்தை வெறுக்கும் குடும்பத்தை சேர்ந்த- உதயநிதி கிறிஸ்தவ மதத்தைத் தழுவி விட்டார். அவரது காதலி மதம் மாறவில்லை, அதற்குப்பிள், பகுத்தறிவுக் குடும்பத்தைச் சேர்ந்த மதத்தை வெறுக்கும் குடும்பத்தை சேர்ந்த-உதயநிதி” நாள் கிறிஸ்தவளாக இருப்பதில் பெருமை அடைகிறேன்” என்றார்.
பொதுவாகவே ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்தை தழுவியவர்கள் தங்கள் பழைய மதத்தைவிட தங்கள் புதிய மதத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பார்கள். புதிய மதத்தின் மீது தங்கள் விசுவாசத்தைக் காட்டும் விதத்தில் பழைய மதத்தை மிகவும் சாடுவார்கள்.
இந்த அடிப்படையில்தான் உதயநிதி சனாதன மதத்தை மிகவும் சாடுகிறார். உதயநிதி சனாதனத்தை தாக்கிப் பேசிய அந்த மாநாடு அதோடு முடித்திருந்தால் அதனை யாரும் பெரிதாக எடுத்துச் கொள்ள மாட்டார்கள். இப்பிரச்னையை அத்தோடு விட்டிருப்பார்கள்.
ஆனால் அந்த மாநாட்டில் உதயநிதி தனது விருப்பத்தைச் சொல்கிறார். “இது மிக மிக அவசியமான மாநாடு. நீங்கள் இந்த மாநாட்டை ஆண்டு முழுவதும் எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் நடந்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்”.
அதாவது, இந்த மாநாடுகள் அடிக்கடி நடக்க வேண்டும். உதயநிதி அவற்றில் கலந்து கொண்டு சனாதனத்தை தாக்கிப் பேச வேண்டும். இதுதான் அவருடைய ஆசை. இவ்வாறு நடந்தால் கிறிஸ்தவர் உதயநிதி இந்து சனாதனத்தை தாக்கும் போதெல்லாம் இந்துக்கள் அவற்றை பொறுமையாக சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் மதக்கலவரங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.
தமிழகத்தில் மதநல்லிணக்கம் நிலவுகிறது. இங்கு மதக்கலவரங்கள் நடக்கக்கூடாது. எனவே அந்த மாநாட்டில் உதயநிதி பேசியதற்காகவும் இனிமேல் அவர் அவ்வாறு பேசாமலிருப்பதற்காகவும், அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இது பற்றி இந்தியப் பிரதமருக்கும், இந்திய குடியரசுத் தலைவருக்கும் கோரிக்கை விடுக்க உள்ளேன்.
மிக்க நன்றி
பி.ராமநாதன்