
— முரளி சீதாராமன் –
அ.தி.மு.க NDA கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது! நல்லது! இனி களம் மாறும்! காட்சிகளும் மாறும்! நாம் விரும்பியதும், எதிர்பார்த்ததும் இதுதான்! இவை எல்லாம் நடக்க வாய்ப்பு உண்டு!
திமுக இப்போதைக்கு மிகவும் மகிழக் கூடும். ஆனால் அண்டாவில் போடப்பட்ட ஆமை, அடியில் அடுப்பு பற்றவைக்கப் படுவதை அறியாமல், அண்டா நீரில் ஆனந்தமாக நீச்சலடித்த கதைதான் திமுக நிலை! இப்போது குளிர்ச்சியாக இருக்கும் – ஆனால் தேர்தல் சூடு ஏறும்போது தான்தான் “ஆமைக்கறி” ஆவோம் என்பதை திமுக உணரும்!
முதலில் காங்கிரசுக்கு ரூட் க்ளியர் ஆகிவிட்டது! அது இனியும் திமுகவை தூக்கிச் சுமக்க விரும்பாது. தமிழகத்தில் திமுக தரும் 9 சீட்டுக்காக – பாண்டிச் சேரியை சேர்த்தால் 10 – திமுக சநாதன விரோத – ஹிந்து விரோதப் போக்குகளுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தால் மத்தியப் பிரதேசமும், ராஜஸ்தானும் நாறிப் போய்விடும் என்பதை காங்கிரஸ் தலைமை நன்கறியும்.
கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென்மாநிலங்களிலும் – வட மாநிலங்களிலும் மிக ஆழமாகவும் வலுவாகவும் ஓடும் HINDU SENTIMENTS என்ற சமூக உள் நீரோட்டத்தை (STRONG UNDER CURRENT) காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்துள்ளது.
ஆனானப்பட்ட ராகுலே குஜராத் போனால் -“நான் காஷ்மீர் கௌல் பிராமணன்”- என்று வேடம் போட்டாவது சொல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே திமுகவின் முரட்டுத் தனமான ஹிந்து மத (சநாதன) எதிர்ப்புக்கு முட்டுக் கொடுத்து தனக்கு மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் உள்ள கொஞ்ச நஞ்ச VOTE BASE ஐயும் இழக்க காங்கிரஸ் விரும்பாது.
மேலும் பாஜகவின் IT WING மிக வேகமாக செயல்பட்டு – பாமர மக்களுக்கும் புரியக் கூடிய எளிய ஹிந்தியில் – திமுகவின் ஹிந்துமத எதிர்ப்பு போக்கை மிகப் பரவலாக வட மாநிலங்களில் கொண்டு சென்றுள்ளதாகத் தகவல்!
மேலும் வருங்காலங்களில் திமுகவின் “ஹிந்தி தெரியாது போடா”- டி.சர்ட் வாசக முழக்கங்களையும் வீடியோ ஆதாரங்களுடன் பாஜக வட மாநிலக் களத்தில் இறக்கக் கூடும்.
இவர்களின் ஹிந்தி எதிர்ப்பு – இதர இ.ந்.தி.யா. கூட்டணித் தலைவர்களையும் – குறிப்பாக அகிலேஷ், நிதீஷ் போன்றவர்களுக்கும் திமுக மீது “ஒவ்வாமை” யை உண்டுபண்ணும்.
எனவே கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் தலையில் சுமக்கும் திமுக என்ற “பாவமூட்டை”யை இறக்கி வைக்க காங்கிரஸ் தயங்காது.
ராஜீவ் காந்தியை கொலையாளியை விடுவித்தது, முதல்வர் அவனோடு கட்டித் தழுவிப் படம் எடுத்தது போன்றவற்றிலேயே – வாயில் துணியைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தானே தமிழகக் காங்கிரசார்!
அதிமுகவோடு கூட்டணி என்பது காங்கிரசின் கடந்து போன பொற்காலக் கனவு! தலைவர்கள் கதர்ச் சட்டை மடிப்புக் கலையாமல் “காண்டஸா” காரில் வந்திறங்க – அதிமுக தொண்டன் சிங்கிள் டீயை குடித்துவிட்டு “கை” சின்னத்துக்கு வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்த காலங்கள் அவர்கள் கண் முன் ஓடும்!
MGR ஃபார்முலா என்ற ஏற்பாட்டின் படி நாடாளுமன்ற இடங்களில் 2/3 பங்கை காங்கிரஸ் எடுத்துக் கொள்ளும். சட்டமன்ற சீட்களில் 2/3 பங்கை அதிமுக எடுத்துக்கொண்டு 1/3 காங்கிரசுக்குத் தரும்!
எம்.பி. தொகுதிகளில் மூன்றில் இரண்டு பங்கு என்றால் 26 சீட்களில் காங்கிரஸ் போட்டி! சட்ட மன்ற சீட்களில் 1/3 பங்கு என்றால் சுமார் 78 சீட்களில் காங்கிரஸ் போட்டி! பொற்காலங்கள் அவை!
மூப்பனார் கோஷ்டி, வாழப்பாடி கோஷ்டி, தங்கபாலு கோஷ்டி, சிவாஜி கணேசன் நண்பர்கள், ஆர்.வெங்கட்ராமன் (ஜனாதிபதி) QUOTA … என்று பல்வேறு அணிகளுக்கும் திருப்தியாக சீட்களை அள்ளி வழங்கி அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேர்தல்கள் காங்கிரஸ் கண்ணில் ஓடும்!
இப்போது அந்த அளவுக்கு அதிமுகவிடம் டிமாண்ட் பண்ண முடியாதுதான்! ஆனாலும் திமுகவிடம் 9 சீட்டுக்கு கை ஏந்தியபடி – இவர்களின் முரட்டு ஹிந்து விரோதத்துக்கும் முட்டுக் கொடுத்துக் கொண்டு – வட மாநிலங்களிலும் அடி வாங்க வேண்டுமா? – என்ற கேள்வி காங்கிரசில் எழும்!
எனவே முதல் அணிமாற்றம் திமுகவை காங்கிரஸ் கை கழுவுவதாக இருக்கலாம்! காங்கிரசின் பார்வையில் – எப்போது பாஜக கூட்டு இல்லையோ – அப்போதே அதிமுக மீது படிந்த “மதவாதக் கறை” நீங்கி – அது “செக்யூலர்”- புண்ய தீர்த்தம் தெளிக்கப்பட்டதாகி விடுகிறது.
இதே நிலைதான் மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுகளுக்கும்!
1977 ஐ நினைத்துப் பாருங்கள்!
நாடாளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் – ஸ்தாபன காங்கிரஸ் (பின்னாளில் ஜனதா) – திமுக கூட்டு!
சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது – எதிரணியில் அதிமுக – காங்கிரஸ் – CPI தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை முறிந்து போய் காங்கிரசும், CPI யும் ஓரணியாக நின்று, அதிமுகவை கழட்டிவிட்டார்கள்!
அடுத்த நாளே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி போய் அதிமுகவுடன் ஒட்டிக் கொண்டது. “எப்போது எமர்ஜென்சி கொண்டு வந்து ஜனநாயகத்தை முடக்கிய காங்கிரசை விட்டு விலகினார்களோ அப்போதே அதிமுக மீதிருந்த கறை நீங்கிவிட்டது”- என்று வியாக்யானம் கொடுத்தார்கள் மார்க்சிஸ்டு கட்சியினர்!
இப்போது அதே பாணியில் – “எப்போது பாஜக கூட்டணியை விட்டு விலகினார்களோ அப்போதே அதிமுக மீதிருந்த மதவாதக் கறை நீங்கிவிட்டது – அது செக்யூலர் நிலைக்கு வந்துவிட்டது”- என்று சொல்லி அணிமாற வாய்ப்புண்டு.
காரணம் மார்க்சிஸ்டு கட்சியின் (CPM) மூலபலம் தொழிற்சங்கம். ஏற்கனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அமைப்பு “ஜாக்டோ – ஜியோ” வும், போக்குவரத்துத் தொழிலாளர்களும் தங்களது எந்தக் கோரிக்கையும் நிறைவேறாமல் குமுறிக் கொண்டுள்ளனர்.
எத்தனை நாளைக்குதான் அவர்களை – “திமுகவை ஆதரிக்காவிட்டால் பாஜக உள்ளே வந்துவிடும் தோழர்!”- என்று சொல்லி எத்தனை நாள்தான் தொழிற்சங்கங்களை சமாளிப்பது?
எனவே திமுகவை கழற்றிவிட்டு – “இப்போது அதிமுகவை ஆதரித்தால்தான் பாஜகவை உள்ளே வர விடாமல் தடுக்க முடியும் தோழர்!”- என்று புது வியாக்யானம் கொடுத்துவிட்டு – அணி மாறிவிட இது தக்க தருணம்!
எனவே அதிமுக – பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியது பாஜகவுக்கு அல்ல – திமுகவுக்கே பலவீனமாக ஆவதற்கு வாய்ப்பு உண்டு. “அரசியலில் நிரந்தர நண்பர்களுமில்லை – நிரந்தர எதிரிகளுமில்லை!”- என்று திமுக ஒரு காலத்தில் பேசிய வசனத்தை அதுவே கேட்கும் நிலை (யும்) ஏற்படலாம்!