
இன்று தமிழகம் வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சொல்லி, சென்னை மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அவரது வேண்டுகோளுக்கு உள்ளர்த்தம் கற்பித்து சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள் சிலர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், இன்று வியாழக்கிழமை. குருவாரம். இது குரு பகவானுக்கு உரிய நாள். இந்துக்கள் மிகப் புனிதமாகக் கருதும் மஞ்சள் வண்ணத்தை அணிந்து கொண்டு, மங்கலகரமாக நாளைத் தொடங்கும் நாள்.
மங்களம் அருளும் குரு பகவானுக்கு உரிய வண்ணம் மஞ்சள் வண்ணம். கருப்பு என்பது சனி பகவானுக்கு உரிய வண்ணம். மங்கலம் அருளும் வியாழக் கிழமையில் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று தட்சிணாமூர்த்தி பெருமானை வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டு முறை. குரு பகவானுக்கு விருப்பமில்லாத கருப்பு ஆடையை இன்று அணிந்தால், மங்கல நிகழ்வுகள் வாழ்க்கையில் நடக்காது. எனவே இன்று கருப்பு துண்டு, கறுப்பு பட்டை என எதையாவது அணிந்து கொண்டு வெளியில் வந்தால், அந்த நிறத்தின் பாதிப்பு நமக்கு அமங்கலங்களையே கொண்டு சேர்க்கும்.
நம் தோல் கருப்பாக இருப்பது இயல்பு. ஆனால் வலிய நாம் கருப்பு அணிந்து வீட்டில் இருந்து கிளம்பும் போது, குரு பகவானின் பாராமுகத்துக்கு ஆளாவோம் என்று எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள்.



