தமிழகத்திற்கு போதுமான அளவு மழை இல்லாத காரணத்தால், மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் விநோதமாகப் பார்க்கப் பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் பொது நல மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தார். அதில், தென்மேற்குப் பருவ மழை இந்தியா முழுவதும் பெய்தாலும், தமிழகத்துக்கு அந்த மழையால் எந்தப் பலனும் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் மேற்குத் தொடர்ச்சி மலை தான்.
தென்மேற்குப் பருவ மழைக்கான மேகங்களை, தமிழகத்துக்குள் நுழைய விடாமல் மேற்குத் தொடர்ச்சி மலை தடுக்கின்றது. இதனால் மற்ற மாநிலங்களைப் போல தென் மேற்குப் பருவமழை தமிழகத்துக்கு அதிகம் கிடைப்பதில்லை.
மேகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால், தென்மேற்குப் பருவ மழை கேரளாவுக்கு அதிக மழைப் பொழிவைக் கொடுப்பதுடன், 3000 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலக்கிறது. எனவே இதற்குக் காரணமான மேற்குத் தொடர்ச்சி மலையை வெட்டி அதன் உயரத்தை குறைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தை குறைத்தால், தென் மேற்குப் பருவமழை தமிழகத்துக்கும் நல்ல பலனைக் கொடுக்கும். இதனால் தமிழகம் தண்ணீருக்காக பிற மாநிலங்களை எதிர் பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது – என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மழைக்காக என்று கூறி, ஒரு மலையையே வெட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் விநோதமான மனு தாக்கல் செய்யப்பட்ட சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக, காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயல் போன்றவற்றால்தான், இதுபோன்ற மழைப் பொழிவுகள் தமிழகத்தில் கிடைக்கும். ஆனால், மேற்குத் தொடர்ச்சி மலை, மரங்கள் அதிகம் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதி. இந்த மரங்களாலும் குளிர்ந்த தன்மையாலும்தான், பருவ காலங்களில் மேகங்கள் உற்பத்தி ஆகின்றன. மலையின் உயரத்துக்கும் பருவ மழைக் கால மேகங்கள் தடுக்கப் படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தமிழகத்தில் இயற்கை வளங்கள் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பெரிதும் அழிக்கப் பட்டு விட்டன. மண் குவாரி என ஆறுகள் மலடாக்கப் பட்டுள்ளன. ஆற்றின் கரைகள் சுருக்கப் பட்டு, ஆக்கிரமிப்புகள் மேலோங்கி, பிளாட்டுகள் அதிகரித்துள்ளன. பெரும்பாலான விவசாய விளை நிலங்கள் மலடாக்கப்பட்டு, பிளாட்டுகள் ஆகியுள்ளன. குளங்களில் தண்ணீர் தேங்க விடுவதில்லை. ஏரிகள் ஆக்கிரமிக்கப் பட்டு, அதனுள்ளும் வீடு கட்டி, வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடக் கூடாது என ஏரிகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.
நீர் மேலாண்மை, நீர் சேமிப்பு வழிமுறைகளை எவரும் மதிப்பதில்லை. அதுபோல், மலைகளை வெட்டி கபளீகரம் செய்து, குவாரிகளால் நிரப்பி, சல்லி கற்களையும் பாறைகளையும் வெட்டி எடுத்து, அந்தப் பகுதிகளை மேலும் வறட்சியான பகுதியாக்கி விடுகின்றனர். சிறு சிறு குன்றுகள் இன்று இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டு விட்டன.
தமிழகத்தில் விவசாய நிலங்கள் பெருமளவு அழிய இலவச வீட்டு மனை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த திமுக., மேற்கொண்ட சதி வேலைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இப்படி ஒரு சூழலில், இது சாத்தியமற்ற வெற்று கற்பனை என்று புறந்தள்ளினாலும், மழை என்ற காரணத்தைக் கூறி, மேற்குத் தொடர்ச்சி மலையையும் கல் குவாரிகளால் நிரம்பியதாக்க சதி வலை பின்னப்படுகிறது என்று பலரும் விவாதிக்கின்றனர்.