48 வருடங்களாக 48 லட்சம் கி.மீ. தொடர்ந்து கார் ஓட்டுபவர்

 

 
மதுரையிலிருந்து சென்னை வரை காரை ஓட்டி திரும்பிவந்தாலே நமக்கெல்லாம் நாக்கு தள்ளிவிடுகிறது. இங்கே ஒரு மனுஷன் விடாம 48 வருஷமா தொடர்ந்து கார் ஓட்டுகிறார். 
 
தனது ‘வால்வோ’வுடன் இர்வ் கோர்டன்
பயணம் செய்வது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம்தான். அதிலும் தனக்கு சொந்தமான காரில் தானே ஓட்டிச் செல்வது அற்புதமான அனுபவம். இப்படி தனது ‘வால்வோ’ காரில் உலகையே சுற்றி வந்திருக்கிறார் ஒருவர். அவர் பெயர் இர்வ் கோர்டன். நியூயார்க் நகரைச் சேர்ந்த ’75 வயது இளைஞர்’. 
 
வால்வோ கார்களின் அறிவிக்கப்படாத விளம்பர தூதுவர் இவர். தனது 1966 மாடல் காரில் தான் எல்லா பயணத்தையும் நடத்தி வருகிறார். இதுவரை இவர் பயணம் செய்து கடந்த தூரம் கொஞ்சம்தான். அதாவது 48 லட்சம் கி.மீ.கள். 
 
 
கடந்த 48 வருடங்களாக விடாமல் இந்த காரை ஓட்டும் கோர்டன், வாரம் ஒரு முறை 10 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கி காரை கூர்ந்து பார்த்து அதிலுள்ள பிரச்சனைகளை தெரிந்து கொள்கிறார். “இன்னும் பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடுவதற்கும் என் வால்வோ ரெடி. ஆனால், எனக்கு தான் வயதாகிவிட்டது.” என்று கூலாக சொல்கிறார். 
 
தனது 45 லட்சம் கிலோ மீட்டர் சாதனைக்காக கோர்டன் தேர்ந்தெடுத்தது, அலாஸ்கா. அவர் உலகில் போகாத இடமாக அலாஸ்கா மட்டுமே இருந்தது. அதனால், அவர் தனது முதல் பயணத்தை அங்கிருந்தே தொடங்கினார். 
 
 
இதுவரை 18 நாடுகளில் தனது காரை ஒட்டியுள்ள கோர்டன், தனக்கு மிகவும் பிடித்த நாடாக ஸ்வீடனை சொல்கிறார். 20 லட்சம் மைல்களை கடந்த போதே கொர்டனின் பெயர் கின்னஸ்சில் பதிவாகிவிட்டது. அப்போதே வால்வோ நிறுவனமும் தன் பங்குக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் காரை கோர்டனுக்கு பரிசளித்து பெருமைபடுத்தியது. 
 
இப்போது வரை கோர்டன் தனது காரில் கடந்துள்ள தூரம் உலகத்தை 120 முறை சுற்றி வருவதற்கு சமமான தூரம். இதைப் பற்றி கோர்டனிடம்  கேட்டால், “எவ்வளவு தூரம் கடந்திருக்கிறேன் என்பது முக்கியமல்ல. 
ஒவ்வொரு பயணமும் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன என்பதுதான் முக்கியம். என் வால்வோ எனக்கு வாழ்க்கையை வாழ கற்றுக்கொடுத்திருக்கிறது. இன்னும் போக வேண்டிய தூரமும் கற்க வேண்டிய பாடமும் நிறைய இருக்கிறது” என்கிறார். 
 
 
பயணம் எப்போதும் அப்படிதான், நமக்கு புது புதுப் பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.