ஹிந்து தர்மத்தில் கோவில்களின் அமைப்பு வலுவானது. தடையற்ற சம்பிரதாய பரம்பரை கொண்டு தேசத்தையும் தர்மத்தையும் பாதுகாத்து வருகிறது.
அதனால் நம் நாட்டு தர்மங்களை அழிக்க நினைத்த துஷ்டர்கள் ஆயிரக்கணக்கான கோவில்களை துவம்சம் செய்தார்கள். அப்படி அழிந்தவை போக மீதி உள்ளவற்றை கவனித்தாலே ஆச்சர்யப்படும்படியான எத்தனையோ அம்சங்களோடு மகோனந்தமான சனாதன தர்மத்தின் வைபவத்தை எடுத்துரைப்பதை அறிய முடியும்.
பாரத தேசம் விடுதலையடைந்த பின் சீர்குலைக்கப்பட்ட கோவில்களை புனர்நிர்மாணித்துக் கொள்ளாமல் விட்டு விட்டோம் என்பது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தின் கைகளில் சிக்கிப் பரிதவிக்கும் நிலையில் இருக்கும் ஆலயங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் நிலையில் தற்போதும் இருகிறோம் என்பது வருத்தத்திற்குரியது.
லௌகீகவாத அரசுகள் ஹிந்து கோவில்கள் மீது மட்டுமே அதிகாரம் செலுத்துவது ஏன்? அதிலும் பிற மதங்களின் பிரார்த்தனை மையங்களை சுதந்திரமாக அவர்களின் மத அதிகாரிகளுக்கே விட்டு விட்டு, அவற்றின் வரவு செலவுகளைப் பற்றி கேள்வி கேட்காமல் வரி கூட விதிக்காமல் இருக்கும் அரசாங்கங்கள் நம் கோவில்களுக்கு மட்டும் வந்து நாட்டாண்மை செய்வது எந்த வகையில் நியாயம்?
கோவில் வரலாறு, அவற்றின் ஆகம வழிமுறைகள், சம்பிரதாயம், பரம்பரை இவை பற்றி எதுவுமே தெரியாத அதிகாரிகள் இந்து ஆலயங்களில் அமர்ந்து கொண்டு இஷ்டம் வந்தாற்போல் நடந்து கொள்வது, மனம் போன போக்கில் ஊழலில் ஈடுபடுவது எல்லாம் அனைவரும் அறிந்ததே.
அரசியல் செல்வாக்கால் தர்மகர்த்தா கமிட்டியில் பதவிகளை வாங்கிக் கொண்டு அதற்கேற்ப லாபங்களை ஈட்ட வேண்டுமென்று முயற்சிப்பது, பிற மதத்தவரை கோயில் ஊழியர்களாகச் சேர்த்து அவர்களின் மத பிரசாரங்களுக்கு அனுகூலம் ஏற்படுத்திக் கொடுப்பது…. இவை எல்லாம் தெரிய வந்தாலும் ஊடகங்களோ, பொறுப்புள்ள பெரியவர்களோ வாயே திறப்பதில்லை.
சமீபத்தில் சில சட்ட நிபுணர்களும் தார்மீக பிரமுகர்களும் தங்கள் குரலை வெளிப்படுத்தியுள்ளார்கள். மகிழ்ச்சி. இது பெரிய புரட்சியாக வளர வேண்டிய தேவை உள்ளது.
பிற மத விஷயங்கள் மீது கை வைக்காத நீதி மன்றங்கள் அநியாயமாக ஹிந்து கோவில்களின் விஷயத்தில் எதிர்மறையாக தீர்ப்பளிக்கின்றன. உண்மையில் ஹிந்து மதத்தோடு தொடர்பற்ற பிற மதத்தினரும் நாஸ்திகர்களும் போட்ட வழக்குகளை ஓட்டு வங்கி அரசியல் அழுத்தத்தால் உடனுக்குடன் பரிசீலித்து சம்பிரதாயத்துக்கு எதிராக தீர்ப்பளித்து வருகிறார்கள்.
அந்த தீர்ப்பளித்த நீதிபதிகள் ஆரம்பத்திலிருந்து ஹிந்து சம்பிரதாயத்தையும் ஆலய சொரூபங்களையும் அறியாத மேற்கத்திய பாணி கல்வி பயின்ற அறிஞர்கள். பிற மத பிரார்த்தனை ஆலயங்களைப் போல் நம் கோயில்கள் ஒரே வழிபாட்டு முறைமை கொண்டவை அல்ல.
பல்வேறு தெய்வங்கள், பல வித ஆகமங்கள், பலப் பல சிற்ப வகை நிர்மாணங்கள். ஒரு இடத்து நியமங்களுக்கும் மற்றோரிடத்து நியமங்களுக்கும் வேறுபாடுகளிருக்கும். அதுவே தர்மத்தின் சொரூபம். இந்த ஆழ் அறிவு இல்லாமல் சமுதாயப் பார்வையால் தர்ம அமைப்புகளைப் பார்ப்பது நியாயமன்று. மந்திர, யந்திர, ஆகம முறைகள் ஒவ்வொரு கோயிலுக்கும் வேறு வேறாக இருக்கும்.
நம்பிக்கையை பௌதிகப் பார்வையோடு காண்பது பகுத்தறிவாகாது. எதெதற்கு எந்தெந்த நியமங்கள் உள்ளன என்பதற்கு சாஸ்திரப் பிரமாணங்கள் உளளன. அந்த சான்றுகளுக்குத் தகுந்த விதத்தில் கோயில்களின் அமைப்பு உள்ளதா இல்லையா என்று கவனிப்பதற்கு அந்தந்த சாஸ்திரங்களில் வல்லுனர்களான ஆகம சிற்ப சாஸ்திர நிபுணர்களின் குழு தலைமை வகிக்க வேண்டும். அப்படியின்றி அவை எதையும் அறியாத அரசாங்க சிப்பந்திகளைக் கொண்டு எதனை சாதிக்க இயலும்?
அரசாங்கத்தின் தலையீடில்லாத சில கோயில்கள் வட இந்திய மாநிலங்களில் உள்ளன. தென்னிந்தியாவில் சில இடங்களில் பீடங்களின் பொறுப்பில் இருக்கும் கோயில்களும் உள்ளன. அதே சமயம் அரசாங்கத்தின் கபந்தக் கரங்களில் இருக்கும் அனைத்து ஹிந்து கோவில்களையும் விடுவித்துக் கொள்ள ஹிந்துக்கள் முயற்சிக்க வேண்டும்.
எந்தெந்த கோயில்கள் எந்தெந்த ஆகமங்களால் நிர்மாணிக்கப்பட்டு வழிபாடு செய்யப் படுகின்றனவோ அவற்றை அந்தந்த ஆகமத்தோடு தொடர்புடைய பீடங்களின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். அந்த பீடங்களும் பரம்பரையாக அந்தந்த சாஸ்திர நிபுணர்களின் குழுவைக் கொண்டு நிர்வாகம் செய்விக்க வேண்டும். கோயில் கைங்கர்யங்கள் குறைவின்றி நடக்கின்றனவா இல்லையா என்று கவனித்து பரம்பரை அர்ச்சகர்களாக இருந்தாலும் அவர்களின் அறிவையும் திறமையையும் தேர்வு செய்வது, பொருளாதார விஷயங்களில் அதற்குத் தகுந்த நிபுணர்களை நியமிப்பது போன்றவற்றை அந்தந்த பீடங்கள் மட்டுமே பொறுப்பேற்று செயல்படுத்த வேண்டும்.
சைவ வைணவ பேதமின்றி அவரவர் கோயில்களை அவரவர் பரம்பரையை அனுசரித்து சமரச ஒப்பிசைவோடு நடத்தும்படியான திடமான அமைப்பு இருக்க வேண்டும்.
ஹிந்துக்கள் தம் கோயில்கள் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகின்றன என்பதை கவனிப்பதே இல்லை. ஆயிரக்கணக்கில் நிலங்கள் சொந்தமாக இருக்கும் ஆலயங்கள் தீபம் கூட ஏற்றும் வழியின்று இருண்டு கிடக்கும் நிலையில் உள்ளன. அந்த சொத்துக்களைத் தின்று தீர்க்கும் திருட்டு அரசியல்வாதிகள் எத்தனை பேரோ!
நம் நாட்டில் ஹிந்து தர்மம் அழிய வேண்டுமென்பது பிற மதங்களின் பிடிவாதம். அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அரசியல் தலைவர்கள் இஷ்டம் வந்தது போல் நடந்து கொள்கிறார்கள்.
இத்தகைய பின்னணியில் இவற்றைத் திருத்தி அமைப்பை வலிமைப்படுத்துவதென்பது அத்தனை எளிதான செயல் அல்ல என்பது விவாதத்திற்கிடமில்லாத உண்மை. மதத்தோடு தொடர்பில்லாத இடது சாரித் தலைவர்கள் இடையில் புகுந்து குழப்பமும் கூச்சலும் விளைவிப்பதற்கு தயாராக இருப்பார்கள்.
அவர்களைக் காரணம் காட்டி பிறரும், ஊழல் தலைவர்களும் நல்ல அமைப்பு எற்படுத்துவதற்கு குறுக்கே நிற்பார்கள். ஆயினும் உற்சாகத்தை இழக்காமல் கோயில்களை தரிசிக்கும் பக்தர்களனைவரும் அநியாயத்தைக் கண்டறித்து தட்டிக் கேட்கும் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து போராட வேண்டும். இந்த விஷயத்தில் ஹிந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்ற வேண்டும்.
நல்ல ஆதாயம் உள்ள ஆலயங்கள் பக்தர்களின் காணிக்கைகளுக்கு பொறுப்பெடுத்துக் கொண்டு ஆதாயங்களை ஆலய அபிவிருத்திக்கு செலவழிக்க வேண்டும். மிக அதிகம் ஆதாயம் வரும் ஆலயங்கள் சின்னச்சின்ன கோயில்களை சீர்படுத்தி அபிவிருத்தி செய்வதில் செலவிட வேண்டும். அந்தந்த கோயில்களில் தார்மீக சேவைச் செயல்கள் செய்வதில் பக்தர்கள் ஈடுபட வேண்டும்.
இதர பிற மத நிலையங்களின் ஆதாயத்தின் மேல் கை வைக்காமல் அவர்களுக்காக அரசாங்க நிதியையே அளித்து வழிபாட்டு நிலையங்களைக் கட்டி தருதல் போன்றவற்றைச் செய்து வரும் அரசியல் தலைவர்கள் நாட்டில் குறைந்த பட்ச வசதிகள் கூட இல்லாத எத்தனையோ இடங்கள் இருப்பதைக் கண்டு கொள்வதே இல்லை.
வெறும் ஹிந்துகள் மட்டுமின்றி உண்மையை பாரபட்சமின்றி அறிந்து கொள்ளக் கூடிய சமுதாயத் தலைவர்கள் அனைவரும் ஹிந்து கோயில் பாதுகாப்பு போராட்டங்களை அனுதாபத்தோடு புரிந்து கொண்டு உதவ முன்வர வேண்டும்.
-தெலுங்கில்- பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
-தமிழில்- ராஜி ரகுநாதன்.
(Source:- தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், ஏப்ரல் 2019)



