
மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒட்டகத்தின் சாணத்திலிருந்து சிமென்ட் தயாரிக்கப்படும் நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
மாட்டுச்சாணம் உள்ளிட்ட விலங்களின் கழிவுகள், மனிதா்களுக்கு பயன்படும் வகையில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் அரபு நாடுகளில் பாலைவன போக்குவரத்திற்கு பால் தேவைகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்படும் ஒட்டகங்களும் சேர்ந்துள்ளன.
ராஸ் அல் கைமா என்ற இடத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் உளளன.
விவசாயிகள் தாங்கள் வளா்க்கும் ஒட்டகங்கின் சாணத்தை சேகரித்து சிமென்ட் ஆலையில் கொடுத்து பயன்பெறுகின்றனா்.
அமீரக அரசின் கழிவு மேலாண்மை அமைப்பும் இத்திட்டத்திற்காக ஒட்டகச் சாண சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு ஒட்டகம் நாள் ஒன்றுக்கு சுமார் 8 கிலோ வரையிலான கழிவை வெளியேற்றும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், கால்நடைகளின் கழிவுகளை வீணாகாமல் பயன்படுத்தும் நோக்கத்திலும் ஒட்டகத்தின் சாணத்தை பயன்படுத்துவதாக சிமென்ட் உற்பத்தி செய்யும் ‘கல்ப் சிமென்ட் கம்பெனி“ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாது இரண்டு டன் ஒட்டகச் சாணத்தால் ஒரு டன் நிலக்கரி மிச்சமாவதாகவும் கூறப்படுகிறது.
உடனுக்குடன் சாணத்தை தொழிற்சாலைக்கு கொண்டு சேர்ப்பதால் ஒட்டங்களின் இருப்பிடமும் இத்திட்டத்தால் துாய்மையாக இருப்பதாக அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
பத்தில் ஒரு பங்கு ஒட்டகச் சாணம், மீதமுள்ள ஒன்பத பங்கு நிலக்கரியைச் சேர்த்து ஆயிரத்து 400 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சூடாக்கப்படும்போது சிமென்ட் கலவை கிடைக்கிறது. தினமும் சுமார் 50 டன் ஒட்டகச் சாணம் சிமென்ட் தயாரிப்புக்கு பயன்படுகிறது.
இதனால் 2021 ஆம் ஆண்டுக்குள் 75 சதவிகித ஒட்டகக் கழிவு குப்பையில் சேராமல் அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தப்படும் என்கிறது ஐக்கிய அமீரக அரசு.



