சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
30. அமைப்புகளைக் காப்போம்!
செய்யுள்:
கலஹாந்தானி ஹர்ம்யாணி குவாக்யாந்தம் ச சௌஹ்ருதம் |குராஜாந்தானி ராஷ்ட்ராணி குகர்மாந்தம் யசோ ந்ருணாம் ||
பொருள்:
பெரிய குடும்பங்கள் கூட கலகத்தால் வீழ்ச்சியடையும். ஒரு ஆத்திரச் சொல் கூட நட்பை குலைக்கும். தீய ஆட்சி அமைந்தால் நாடு நாசமாகும். ஒரு சிறிய பிழையால் நீண்டகாலப் புகழ் கெட்டுப் போகும்.
விளக்கம்:
குடும்பம், நட்பு, நாடு, கீர்த்தி எல்லாம் நலமாக விளங்கவேண்டும். இந்த அமைப்புகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை இந்த ஸ்லோகம் எடுத்துக்கூறுகிறது. வீடானாலும் நாடானாலும் அவற்றின் நடைமுறை சீராக விளங்க வேண்டும் என்றால் இவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.
உட்பூசல் ஏற்படாத வரைதான் வீடு வீடாக இருக்கும். வார்த்தைக்கு வார்த்தை பேசாத வரைதான் நட்பு நிலைத்திருக்கும். தீயவன் அரசனாகாத வரைதான் நாடு நிலைபெற்றிருக்கும். மனிதனின் கீர்த்தி அவன் தீய செயல் புரியாத வரை மட்டுமே நிற்கும்.
பரஸ்பர கலகங்கள், தலைமை குணம் இல்லாமல் இருப்பது, அண்ணன் தம்பிகள் இடையே சச்சரவுகள் போன்றவற்றால் குடும்பம் நிலை குலைகிறது. சினச் சொல்லால் மனதைத் துன்புறுத்துவதால் நட்பு கெடுகிறது. தீய அரசாட்சியால் நாடு வீழ்கிறது. ஒரு சிறிய பிழை செய்து அந்த குற்றத்தால் புகழையும் மதிப்பையும் இழந்த மனிதர்களின் கதைகளை நாம் தினமும் பார்க்கிறோம். மகதம், விஜயநகரம், கிரேக்கம், எகிப்து போன்ற நாகரீகங்கள் சரியான அரசன் இல்லாததால் மறைந்து போயின.