சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும்
108 ஞான முத்துக்கள்:
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
31. திருமணத்தில் கவனிக்க வேண்டியவை!
ஸ்லோகம்:
கன்யா வரயதே ரூபம் மாதா வித்தம் பிதா ஸ்ருதம் |
பாந்தவா: குலமிச்சந்தி ம்ருஷ்டான்னமிதரே ஜனா:||
பொருள்:
மணப்பெண் மணமகனின் அழகைப் பார்ப்பாள். தாய் மணமகனின் வருமானத்திற்கு முக்கியத்துவம் அளிப்பாள். தந்தை மணமகனின் கல்வி, நடத்தை போன்றவற்றை கவனிப்பார். குடும்பத்தினர் வம்ச பரம்பரை குறித்து ஆலோசிப்பர். பிற விருந்தினர்கள் கல்யாண விருந்தின் மேல் கவனம் செலுத்துவர்.
விளக்கம்:
திருமணம் என்பது வெறும் இரு மனிதர்களின் பந்தம் அல்ல. இரு குடும்பங்களின் இடையே ஏற்படும் அனுபந்தம். தாய், தந்தை, உற்றார், நண்பர்கள் இவ்விதம் பலரும் திருமணம் குறித்து ஆர்வம் காட்டுவர். இது புது மணத் தம்பதிகளுக்கு பக்கபலமாக அமையும். திருமணத்தில் ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும் முக்கியத்துவமும் எப்படி இருக்கும் என்பதை தெரிவிக்கும் ஸ்லோகம் இது.
மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகனின் அழகைப் பார்ப்பதோடு அறிவு குணம் பழக்கவழக்கம் தன்னம்பிக்கை போன்றவற்றின் மீதும் ஆர்வம் கொள்வர். உற்றார் உறவினர் மணமகனின் குடும்பத்தையும் தம்மோடு இணைத்துக் கொள்வர். நண்பர்களும் விருந்தினர்களும் விருந்துண்டு புதுமணத் தம்பதிகளை ஆசீர்வாதம் செய்வர்.
திருமணம் நன்றாக நடந்தது என்றால் சாப்பாடு நன்றாக இருந்தது என்று பொருள். இவ்விதம் திருமண விஷயத்தில் உறவினர்களும் நண்பர்களும் சமூகமும் சேர்ந்து ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் தற்போது இவை அனைத்தையும் மறந்து வெறும் குருட்டுக் காதலில் விழுந்து அதன் பிறகு தலையெடுக்கும் பிரச்சனைகளைத் தாங்க முடியாமல் விவாக உறவை மட்டுமின்றி வாழ்க்கையையே சின்னா பின்னம் செய்து கொள்கிறார்கள். தற்போது இவ்விதமான சம்பவங்கள் அதிகரிக்கும் காலமாக உள்ளது.
உலக மக்களின் பாராட்டைப் பெற்ற நம் தேசத்தின் திருமண அமைப்பு சாஸ்திரங்களால் நிரூபிக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் அத்தகைய அமைப்புக்கு அபாயச் சங்கு ஒலிப்பது போல தோன்றுகிறது. தஸ்மாத் ஜாக்கிரதை!