சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
34. உருவத்தைப் பார்த்து ஏமாறாதே!
செய்யுள்:
காக: க்ருஷ்ண: பிக: க்ருஷ்ண: கோ பேத: பிக காகயோ: |
வசந்த காலே சம்ப்ராப்தே காக: காக: பிக: பிக: ||
பொருள்:
காகம், குயில் இரண்டும் கருமையாகவே இருக்கும். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? வசந்த காலம் வரும்போது தெரியும். காகம் காகமே! குயில் குயிலே!
விளக்கம்:
உருவத்தைப் பொறுத்து எவரையும் கணக்கிடக் கூடாது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவர்களின் மதிப்பு வெளிப்படும். சந்தர்ப்பத்தை காலம்தான் தீர்மானிக்கும் என்ற செய்தியை அளிக்கும் புகழ்பெற்ற ஸ்லோகம் இது.
படித்த அறிவாளியைப் போல ஜரிகை வேஷ்டி, துண்டு அணிந்தால் போதுமா? சபை நடுவில் பேசும்போது அறிஞருக்கும் அல்லாதவருக்கும் வேறுபாடு தெரிந்துவிடும் அல்லவா? கவி வேமனா கூறியதுபோல உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போலவே இருந்தாலும் ருசியை பொறுத்து வேறுபடுகிறது அல்லவா? அவ்விதமாக வசந்தகாலம் என்பது காகம் எது? குயில் எது? என்று தெரிவிக்கும் ஊடகம்.
காகம் கர்ண கொடூரமாகக் கத்தும். குயில் இனிமையாகப் பாடும். அதேபோல் ஒரேமாதிரி தென்படும் மனிதர்களில் யார் உயர்ந்தவர்? யார் அல்லர்? என்ற விஷயம் வாய்ப்பு வரும்போதுதான் வெளிப்படும். காலத்திற்கு உள்ள முக்கியத்துவம் அது. ஏதாவது உதவி தேவைப்படும் போது முகத்தை தூக்கி வைத்துக் கொள்பவன் நண்பனாக இருக்க முடியுமா? உண்மையான நண்பனா? இல்லையா? என்பது சந்தர்ப்பம் வாய்க்கும்போது வெளிப்பட்டு விடும்.