
சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
41. நிகழ்காலத்தில் வாழ வேண்டும்.
செய்யுள்:
கதே சோகோ ந கர்தவ்ய: (வ்யோ) பவிஷ்யம் நைவ சிந்தயேத் !
வர்தமானேன காலேன ப்ரவர்தந்தே விசக்ஷணா !!
–விக்ரமாதித்ய சரிதம்.
பொருள்:
கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருபவரே புத்திசாலி.
விளக்கம்:
காலத்தோடு கூட நாமும் நகர வேண்டும். எங்கனம்…? முக்காலங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் ஸ்லோகம் இது.
கடந்து போன காலத்தை எண்ணி வருந்துவது வீண். எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவதும் வீண். நிகழ்காலத்தில் வாழ்வதே சிறந்தது! சோகத்தினால் மனம் குழப்பம் அடைகிறது. யோசிக்க முடியாமல் செய்கிறது. சித்தம் அமைதியாக இருந்தால்தான் புத்தி நிலையாக வேலை செய்யும். நிகழ்காலத்தில் வாழும் ஸ்திதப்ரக்ஞை உள்ளவர்கள் அறிவாளிகள்.
ஒரு மாணவனுக்கு வரிசையாக மூன்று தேர்வுகள். முதல் தேர்வு நேற்று நடந்து முடிந்தது. நேற்று தேர்வு சரியாக எழுதவில்லை என்ற வீண் கவலையை விட்டொழிக்க வேண்டும். நாளைய தேர்வு குறித்த அச்சம் தேவையற்றது. இன்றைய தேர்வு குறித்து யோசிப்பதே சிறந்த அறிவுடைமை என்கிறது இந்த சுபாஷிதம்.