
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
60. தென்னை மரம் கூறும் பாடம்!
சுலோகம்:
ப்ரதமவயசி பீதம் தோயமல்பம் ஸ்மரந்த:
சிரசி நிஹிதபாரா நாரிகேலா நராணாம் |
சலிலமம்ருதகல்பம் தத்யுராஜீவிதாந்தம்
ந ஹி க்ருதமுபகாரம் சாதவோ விஸ்மரந்தி ||
பொருள்:
செடியாக இருக்கும்போது நாம் ஊற்றும் நீரைக் குடித்து தென்னை மரம் வளர்கிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தன் வாழ்நாள் முழுவதும் தலைமீது தேங்காய்களின் பாரத்தை சுமந்து அமுதம் போன்ற இளநீரை நமக்கு அளிக்கிறது. நல்லவர்கள் பிறர் செய்த உதவியை மறக்க மாட்டார்கள்.
விளக்கம்:
இயற்கை நமக்கு கற்றுத் தரும் பாடங்கள் பல உள்ளன. நன்றியறிதல் என்ற உயர்ந்த குணத்தை தென்னை மரத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியை அளிக்கும் ஸ்லோகம் இது.
சிறுவயதிலிருந்து நம்மை பாலூட்டிச் சீராட்டி வளர்த்த பெற்றோருக்கும், நாம் வளர்ந்து ஆளாவதற்கு உதவிய சமுதாயத்திற்கும் நன்றி காட்டுவது நல்லவர்களின் இயல்பு. தென்னை மரத்தைப் பார்க்கும் போது இந்த நன்றி காட்டும் குணம் நினைவுக்கு வரவேண்டும்.