
சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
68. நண்பனின் இயல்பு!
ஸ்லோகம்:
பாபான்னிவாரயதி யோஜயதே ஹிதாய
குஹ்யம் நிகூஹதி குணான் ப்ரகடீகரோதி |
ஆபத்கதம் ச ந ஜஹாதி ததாதி காலே
ஸன்மித்ரலக்ஷணமிதம் ப்ரவதந்தி சந்த:||
– பர்த்ருஹரி -66
பொருள்:
தீய செயல்கள் செய்யாமல் தடுப்பது, நல்ல செயல்கள் செய்யும்படி ஊக்குவிப்பது, நண்பனைப் பற்றி வெளியிடக்கூடாத செய்திகளை சொல்லாமல் மறைப்பது, அவனிடமுள்ள நற்குணங்களை பிரச்சாரம் செய்வது, ஆபத்து நேர்ந்த போது விட்டு விலகாமல் அருகில் இருப்பது, தேவையான போது பொருளுதவி செய்து ஆதரிப்பது… இவை நல்ல நண்பனுக்கு இருக்கவேண்டிய குணங்கள்.
விளக்கம்:
நண்பனுக்கு இருக்க வேண்டிய இயல்புகளை விவரிக்கும் ஸ்லோகம் இது. அப்படிப்பட்ட நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் அது போன்ற குணங்களை நாம் வளர்த்துக் கொள்வதற்கும் ஊக்கம் அளிக்கும் ஸ்லோகம் இது.
தற்கால திரைப்படங்களால் நண்பர்கள் குறித்த புரிதல் இளைய தலைமுறையில் குழப்பமாக உள்ளது. நண்பன் தீய வழியில் செல்லாமல் தடுக்க வேண்டுமே தவிர ‘கம்பெனிக்காக’ தானும் தீய பழக்கங்களை பழகக்கூடாது.
நல்லவற்றை ஒலிபெருக்கியிலும் கெட்டவற்றை செவியிலும் கூற வேண்டும் என்பார்கள். நண்பனின் நற்குணங்களை பலரிடமும் கூறவேண்டும். நண்பன் திருத்திக்கொள்ள வேண்டிய தீய குணங்களை நேராக அவனிடமே கூறி நல் வழிப்படுத்த வேண்டும்.
பதவியில் இருக்கும் போதும் செல்வம் சேரும் போதும் கூடிச் சேர்ந்து புகழ்பாடி விட்டு கஷ்டத்தில் இருக்கும்போது விட்டோடி விடுபவன் நண்பன் அல்ல. வெறும் ஈர்ப்பினை நட்பு என்ற பிரமை படக்கூடாது. வியப்பு மறுப்பாக மாறும்போது ஆசிட் ஊற்றுபவன் நண்பனா?
உண்மையான நட்புக்கு உதாரணம் ஸ்ரீ கிருஷ்ணனும் அர்ஜுனனும். போரிலிருந்து விலகிப் போக நினைத்த அவனை நிறுத்தி வைத்தார். உயிருக்குயிராக காத்து நின்றார். ஆட்சியில் இருந்தாலும் அடவியில் இருந்தாலும் மாறாத ஸ்நேகம் அவர்களுடையது!