
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
70. சந்தன மரம் போன்ற சான்றோர்!
ஸ்லோகம்:
மூலம் புஜங்கை: சிகரம் விஹங்கை:
சாகா ப்லவங்கை: குசுமானி ப்ருங்கை: |
சம்சேவ்யதே சந்தனபாதபோ௨யம்
பரோபகாயாய சதாம் ப்ரவ்ருத்தி: ||
– சாரங்கதரர்
பொருள்:
சந்தன மரத்தின் அடியில் பாம்புகள் வசிக்கும். மரத்தின் மேல் பறவைகள் வசிக்கும். கிளைகளில் குரங்குகளும் பூக்களில் வண்ணத்துப்பூச்சிகளும் அமரும். பரோபகாரம் சான்றோரின் இயல்பு.
விளக்கம்:
மகனீயர்கள் அனைவருக்கும் அடைக்கலம் அளிப்பர். பரமசிவன் கழுத்தில் அணிந்த பாம்புகள் போல யாருமே அருகில் சேர்த்துக் கொள்ளாது துரத்தி விடுபவர்களைக் கூட மகனீயர்கள் ஆதரவளித்து வருத்தம் களைவர். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களை, மரங்களிலெல்லாம் மதிப்பு வாய்ந்ததும் சுகந்த பரிமளம் வீசுவதுமான சந்தன மரத்தோடு ஒப்பிட்டு கவி அளித்துள்ள ஸ்லோகம் இது.
ஒவ்வொரு மனிதனும் யாரையும் புறக்கணிக்காமல் அனைவரையும் தன் உள்ளத்திற்குள் வரவேற்கவேண்டும். அடிக்கடி வந்து மகரந்தம் எடுத்துச் செல்லும் வண்ணத்துப் பூச்சிகள், மரத்தை உலுக்கி கிளைக்குக் கிளை தாவும் குரங்குகள், பழங்களைத் தின்று சலசலப்பை ஏற்படுத்தும் பறவைகள், அடிமரத்தை அண்டி வந்து அலையும் பாம்புகள்… இவ்விதம் அனைத்தையும் அருகில் சேர்த்துக்கொள்ளும் சந்தன மரத்தை மகாத்மாக்களோடு ஒப்பிடும் சுபாஷிதம் இது.
தன், பிற என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் அடைக்கலம் அளிப்பது நன் மக்களின் இயல்பு.
சமுதாயத்தில் பல்வேறுபட்ட மனிதர்கள் இருப்பார்கள். செல்வர், ஏழை, ஊனமுற்றோர், பலவீனமானவர்… அனைவருக்கும் கௌரவமாக வாழும் உரிமை உண்டு.
சமுதாயம் அல்லது தேசம், சந்தன விருட்சத்தைப் போல் அனைவருக்கும் அடைக்கலம் அளிக்க வேண்டும். யாரையும் இழிவாக பார்க்கக்கூடாது. உயர்வாகவும் பார்க்கக்கூடாது. அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்ற செய்தியை இந்த ஸ்லோகத்தில் இருந்து அறியலாம்.