
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
71. த்ரிகரணத் தூய்மை!
ஸ்லோகம்:
மனஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மனாம்|
மனஸ்யன்யத் வசஸ்யன்யத் கர்மண்யன்யத் துராத்மனாம்||
–ஹிதோபதேசம் (1-102)
பொருள்:
மனம் சொல் செயல் மூன்றும் ஒன்று போலிருப்பவர் சான்றோர். இம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி நடந்து கொள்பவர் தீயோர்.
விளக்கம்:
யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்? என்று எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதை விளக்கும் ஸ்லோகம் இது.
திரிகரணத் தூய்மையோடு விளங்குபவர்கள் மகாத்மாக்கள் என்று தெளிவாகக் கூறுகிறது இந்த ஸ்லோகம்.
மனதில் ஒன்று வைத்து வெளியில் வேறொன்று பேசி செயலில் இன்னொன்று செய்யும் மனிதர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். எண்ணம் சொல் செயல் மூன்றும் ‘த்ரி கரணங்கள்’ எனப்படும். இம்மூன்றின் இடையே ஒற்றுமை இருப்பதே திரிகரணசுத்தி. இந்த நற்குணம் உள்ளவர்களே மகாத்மாக்கள். அவர்களே சாத்துவிக குணம் பொருந்திய சாது சத்பருஷர்கள்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்றார் வள்ளலார்.
“யதா சித்தம் ததா வாசோ யதா வாசஸ்ததா க்ரியா
சித்தே வாசி க்ரியாயாம் ச சாதூநாமேகரூபதா” என்றனர் பெரியோர். இவ்விதம் சிந்திப்பவர்களை மகாத்மாக்கள் என்கிறார் கவி.
இவ்விதம் எண்ணம் சொல் செயல் மூன்றும் ஒன்றுபட்டு அவர்கள் செய்யும் செயல்கள் சமுதாய நலனுக்கு உதவக்கூடியவை. சமூகம் மற்றும் அரசியல் நோய்களுக்குக் காரணம் எண்ணம் சொல் செயலில் இசைவு இல்லாமல் இருப்பதே.
தேர்தலுக்கு முன்னர் ஒரு பேச்சு… ஆட்சிக்கு வந்தபின் முழுவதும் மாறுபட்ட பேச்சைக் கொண்ட பல தலைவர்களைப் பார்க்கிறோம். அவர்களால் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் என்ன பயன்?
இத்தகைய முக்கரண இசைவு என்ற பழக்கம் சிறு வயதிலிருந்தே வரவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் இது குறித்து சிரத்தை வகிக்கவேண்டும். பேச்சுப் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்கள் தாம் நம்பும் கொள்கைகளுக்கு எதிராகப் பேசுவது கூட நல்லதல்ல. சேனல்களில் இந்த விதமான சர்ச்சைகளைப் பார்த்து வருகிறோம். தன் எண்ணத்தை மறைத்து இவ்விதம் விவாத மேடைகளில் அமர்ந்து பேசுபவர்களைத் தீயோர் என்கிறார் இந்த சுலோகத்தில்.