
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
74. நான்கு வித அனர்த்தங்கள்!
ஸ்லோகம்:
யௌவனம் தன சம்பத்தி: ப்ரபுத்வமவிவேகிதா |ஏகைகமப்யனர்தாய கிமு யத்ர சதுஷ்டயம் ||
– ஹிதோபதேசம் 1-11
பொருள்:
இளமைப் பருவத்தில் வயது, (தேவைக்கதிகமான) செல்வம், அதிகாரம், விவேகமின்மை இவை ஒவ்வொன்றும் ஆபத்தானவை. இப்படிப்பட்ட நான்கும் சேர்ந்து இருந்தால் எத்தகைய ஆபத்து?
விளக்கம்:
அனர்த்தம், அகம்பாவம் இரண்டிற்கும் விவேகமின்மை துணை போனால்…? கவனம்…! என்று எச்சரிக்கிறது இந்த ஸ்லோகம்.
இளமைப் பருவம் என்பது கற்பனையான பொய் உலகில் சஞ்சரிக்கும் காலம். எவரையும் பொருட்படுத்தாத மனநிலை. இந்த வயதில் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் ஆச்சாரியார்.
கர்வம் தலைவிரித்தாடும் பருவம் அது. முதுமையில் வரும் அமைதி ஒரு அமைதியா என்ன? புலன்கள் அடங்கியபின் மனிதனும் அடங்கித்தான் போவான். அதனால் இளமைப் பருவத்தை முதல் அனர்த்தமாகக் கூறுகிறார்.
இரண்டாவது அனர்த்தம், செல்வம். இளமைச் செருக்கோடு அளவுக்கதிகமான செல்வமும் சேர்ந்து கொண்டால்…? இன்னும் கவனமாக இருக்க வேண்டும். தான் கஷ்டப்பட்டு உழைக்காமல் மூதாதையர் சேர்த்து வைத்த செல்வத்தை அனுபவிப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிறார். கெட்ட பழக்கங்கள் இருக்கும் இடத்திலும் நெறிமுறையற்ற இடங்களிலும் கூடாநட்பு வந்து குவியும் வாய்ப்புள்ளது. கர்வம் பெருகித் தலைவிரித்தாடும். நல்லவர்களை அவமதிக்காமல் கவனமாக இருக்க வேண்டிய வயது அது.
மூன்றாவது, பதவி, அதிகாரம். இந்தப் பகட்டினால் கர்வம் கண்ணை மறைக்கும். சொந்த மனிதர்களே பகைவராகத் தெரிவர். புதிய நட்புகள் பழக்கமாகும். முட்டாளின் கையில் இருக்கும் கத்தி போல அவனுக்கும் உடனிருப்பவருக்கும் கூட அனர்த்தம் விளைவிக்கும் என்று எச்சரிக்கிறார்.
நான்காவது விவேகமின்மை. நன்மை எது? தீமை எது? என்று எதையும் புரிந்து கொள்ள இயலாத நிலை. நன்மை பயக்கும் சொற்கள் தலையில் ஏறாது. மிகப் பெரும் நஷ்டம் ஏற்படுத்திய விவேகமின்மைக்கு துரியோதனனை விட பெரிய உதாரணம் யார் இருக்கமுடியும்?
இவ்விதமாக இளமை, உழைக்காமல் வரும் செல்வம், பதவி இம்மூன்றும் உள்ளவருக்கு விவேகமின்மை துணை சேர்ந்தால் ஆபத்து என்று எச்சரிக்கிறார்.
உயர் பதவியிலிருக்கும் தலைவர்களின் புதல்வர்கள் இளமை, செல்வம், அதிகாரம் இவற்றின் கர்வத்தால் செய்த விவேகமற்ற செயல்கள் வரலாற்றில் நிலைத்து விட்டன.