ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை
விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்
எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய். (15)
பொருள்
‘ஏண்டி இளங்கிளியே, எவ்வளவு நேரமாகக் காத்திருக்கிறோம். இன்னும் உறங்குகிறாயே?’
‘நான் ஏற்கெனவே தயார். இதோ வந்துகொண்டே இருக்கிறேன். கடுப்படிக்காதீர்கள்.’
‘இவ்வளவு நேரம் தூங்குவாயாம். இப்போது எங்களைப் பார்த்து கடுப்படிக்கிறோம் என்பாயாம். நன்றாகத்தானம்மா இருக்கு உன் பேச்சு.’
‘சரிசரி, உங்க பேச்சுத் திறமை எனக்கு வராது. அதனால, நான் சொன்னது பொய்யின்னே வச்சுக்கலாம்.’
‘அடியே! நாங்களெல்லாம் சீக்கிரமா வந்து உனக்காகக் காத்திருக்கணுமாம்? நீ பாட்டுக்கு இஷ்டத்துக்கு எழுந்திருப்பாயாம். அப்படி என்னடீ நீ மட்டும் உசத்தி?’
‘என்னவோ நான் மட்டும்தான் எழுந்திருக்காதது மாதிரி பேசுகிறீர்களே! எல்லோரும் வந்தாச்சா?’
‘நீயே வெளியே வந்து எல்லோரையும் எண்ணிப் பார்த்துக்கொள். பேசியது போதும். பெரும் பலம் கொண்ட குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவன், எதிரிகளை முழுமையாக அழிக்கும் வல்லமை படைத்தவன், மகா மாயக்காரன் அப்படிப்பட்ட கண்ணனைப் போற்றிப் பாடக் கிளம்பலாம், ஓடி வா.’
அருஞ்சொற்பொருள்
எல்லே – ஏண்டி
உறங்குதியோ – உறங்குகிறாயோ
சில்லென்று – சுள்ளென்று, கடுகடுப்புடன்
அழையேன்மின் – அழைக்க வேண்டாம்
நங்கைமீர் – பெண்களே (தோழிகளே)
போதர்கின்றேன் – வருகிறேன்
உன் கட்டுரைகள் வல்லை – நீ கருத்துகளைக் கோர்வையாகச் சொல்லும் திறன் படைத்தவள்
பண்டே – ஏற்கெனவே
வாய் – வாய்ச் சவடால், பேச்சுத் திறமை
பண்டே உன் வாயறிதும் – உன் பேச்சுத் திறமை ஏற்கெனவே எங்களுக்குத் தெரியும்
வல்லீர்கள் நீங்களே – திறமைசாலி நீங்கள் எல்லோரும்தான்
நானேதான் ஆயிடுக – சரி, நானேதான் என்று சொல்லிவிட்டுப் போங்கள், எனக்கென்ன ஆச்சு?
ஒல்லை – விரைவாக
நீ போதாய் – நீ வருவாயாக
உனக்கென்ன வேறுடையை – நீ மட்டும் விதிவிலக்கா?
எல்லாரும் போந்தாரோ – எல்லாரும் வந்து விட்டார்களா?
போந்தார் – வந்து விட்டார்கள்
போந்தெண்ணிக்கொள் – வந்து எண்ணிப் பார்த்துக் கொள்
வல்லானை – வலிமையான யானை
கொன்றான் – சம்ஹாரம் செய்தவன்
மாற்றார் – எதிரிகள்
மாற்றழிக்க வல்லான் – பகைவர்களின் ஆற்றலை அழித்தொழிக்கும் வல்லமை உடையவன்
தோழிகளைத் துயிலெழுப்பும் பாசுரங்கள் (6 முதல் 15 வரை) அனைத்துமே உரையாடல் வடிவில் இருப்பதாகத்தான் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக, உறங்கும் தோழியைத் துயிலெழுப்பும் தோழிகள் ”கீழ்வானம் வெள்ளென்று” (கீழ்வானம் வெளுத்தது) என்று சொன்னதும், உள்ளே படுக்கையில் இருக்கும் தோழி, ”அது வானத்தின் வெளுப்பு அல்ல, கிருஷ்ணனுக்குக் கைங்கர்யம் பண்ணுவதால் உங்கள் அனைவரின் முகங்களிலும் உள்ள தேஜஸ் கூட்டாகப் பிரதிபலிப்பதால் ஏற்பட்ட ஒளி. எனவே, இதை வைத்துப் பொழுது விடிந்து விட்டது என நம்ப முடியாது” என்று சொல்கிறாளாம். உடனே இவர்கள், ”எருமைகள் சிறுவீடு மேய்கின்றனவே. பொழுது விடியாமலா மேய்ச்சலுக்கு அனுப்புவார்கள்?” என்று கேட்கிறார்களாம். இப்படியே ஒவ்வொரு பாசுரத்திலும் உரையாடல் நடைபெறுவதாகப் பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்.
ஆயினும், உறங்கும் தோழி எழுப்பும் வினாக்கள் பாசுரத்தில் இல்லை. அது உள்ளுறை பொருளாக இருக்கிறது. நாமாக யூகித்துக் கொள்ள வேண்டும். ஆனால், எல்லே இளங்கிளியே பாசுரம் விதிவிலக்கு. இதில் துயிலெழுப்பும் தோழியரும், துயிலெழுப்பப்படும் தோழியும் பேசிக் கொள்ளும் விஷயங்கள் முழுவதும் பாசுரத்தில் இடம் பெறுகின்றன. எனவே, தோழியரின் வாயாடித்தனமும் துடுக்குத்தனமும் கொஞ்சலும் இந்தப் பாசுரத்தில் மிகவும் தூக்கலாக இருக்கின்றன.
மொழி அழகு
முதலில் வரும் வல்லானை என்பது யானையைக் குறித்தது. அடுத்து வருவது வல்லமை உடையவனை (பகவானை) குறித்தது.
ஆன்மிகம், தத்துவம்
கீழோரை மேல்நிலைக்கு இட்டுச்செல்வதே மேலோர் இயல்பு. அவர்கள் எங்கேயோ உயரத்தில் இருப்பவர்கள் அல்ல. மாறாக, நம்மை உயர்த்துவதற்காகக் கீழே இறங்கி வந்தவர்கள். எனவே, அவர்கள் நம்முடன் சரிசமமாகப் பழகுபவர்கள். அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டால் நாமும் உயர்ந்த நிலையை அடையலாம்.