
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
75. நட்புக்குத் தேர்வுகள்!
ஸ்லோகம்:
யதா சதுர்பி: கனகம் பரீக்ஷ்யதே
நிகர்ஷண – ச்சேதன – தாப – தாடனை: |
ததா சதுர்பி: புருஷ: பரீக்ஷ்யதே
த்யாகேன சீலேன குணேன கர்மணா ||
பொருள்:
தங்கத்தை சோதிப்பதற்கு நான்குவித சோதனைகள் செய்வர். உரைகல்லின் மீது உரசிப் பார்ப்பார்கள். துண்டுகளாக வெட்டுவார்கள். சூடாக்குவார்கள். சுத்தியால் தட்டுவார்கள். அதேபோல் மனிதர்களின் நல்ல குணத்தை நான்கு விதங்களில் சோதித்து அறியவேண்டும். அவனுடைய தியாக குணம், நடத்தை, பழக்க வழக்கங்கள், பிறருக்கு உதவும் குணம்… இவற்றைக் கொண்டு தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னரே நட்புக் கொள்ள வேண்டும்.
விளக்கம்:
ஏதாவது பொருள் வாங்க வேண்டும் என்றால் அவற்றின் நாணயத்தை சோதிப்போம். அப்படி இருக்கும்போது நல்ல நண்பனைத் தேர்ந்தெடுக்கையில் எந்த சோதனைகள் தேவை என்று தெரிவிக்கும் சுலோகம் இது.
நாம் ஏதாவது நிறுவனத்தில் சேர எண்ணினால் அவற்றின் நல்லது கெட்டதுகளைப் பற்றி விசாரிப்போம் அல்லவா?
பரிச்சயம் உள்ளவர்கள் எல்லோரும் நண்பர்களாக முடியாது. கஷ்டப்படும்போது உதவி அளித்து ஆறுதல் கூறுபவரே உண்மையான நண்பர். ஒரு வாகனம் வாங்க வேண்டும் என்றால் அதனை சோதனைக்கு உட்படுத்துவோம் அல்லவா? ஆபத்தில் உதவுபவனே நண்பன். காலத்தின் சோதனையில் தேர்ச்சி பெறுபவர்களே நிலையான நண்பர்கள். நம்பிக்கை ஏற்பட வேண்டுமென்றால் இந்த சோதனைகளில் வெல்வது முக்கியம்.
வெவ்வேறு கோணங்களில் பரிசீலித்து, நம் அனுபவத்தைத் துணை கொண்டு ஒருவர் மீது அபிப்ராயம் ஏற்படுத்திக் கொள்வோம். தங்கம் போன்ற நண்பர் யார் என்பது அப்போதுதான் புரியும்.