
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
79. முதல் அடி!
ஸ்லோகம்:
யோஜனானாம் சஹஸ்ரம் து சனைர்கச்சேத் பிபீலிகா !
அகச்சன் வைனதேயோ௨பி பதமேகம் ந கச்சதி !!
பொருள்:
மெதுவாக ஊர்ந்தாலும் எறும்பு நகர்ந்து கொண்டே இருந்தால் எப்போதேனும் ஆயிரம் யோஜனை தூரமானாலும் கடந்துவிடும். வேகமாக பயணிக்கக் கூடியதாக இருந்தாலும் கருடன் பறக்கத் தொடங்காவிட்டால்… முதல் அடியை எடுத்து வைக்காவிட்டால் ஒரு அடிகூட முன்னால் செல்ல இயலாது.
விளக்கம்:
மனிதன் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். சோம்பேறியாக அப்படியே கிடக்கும் மண் போல இருக்கக்கூடாது. இயற்கை யிலிருந்து பாடம் கற்றுக் கொள் என்று கூறும் சுலோகம் இது.
புத்திசாலி என்று கர்வம் கொண்டு படிக்காமல் இருந்தால் பயனில்லை என்பது கூட இந்த ஸ்லோகத்தின் உட்பொருள்.
எறும்பு மிகச்சிறிய உயிர். நிலத்தின் மீது மெதுவாக ஊர்ந்து செல்லும். கருடன் வேகத்தில் ஒப்புவமை இல்லாத பறவை. வானில் பறக்கும் பட்சிராஜா. ஆனாலும் என்ன? பணி புரிபவனுடையதே வெற்றி.
செயல் வீரர்களுக்கு நிரந்தர முயற்சி என்பது இன்றியமையாதது. எத்தனை வலிமையுள்ளவனாக இருந்தாலும் முதல் அடி எடுத்து வைக்காவிட்டால் இலக்கை எட்ட முடியாது அல்லவா? தன் சக்திக்கேற்ப முயற்சி செய்யும் வலிமையற்றவன் அவனைவிட மேல் அல்லவா? வலிமையும் சாமர்த்தியமும் தன்னம்பிக்கை அளிக்க வேண்டுமே தவிர கர்வத்தை அளிக்கக்கூடாது.
“சரைவேதி” keep moving… என்று கூறுகிறது சாஸ்திரம்.
உறங்காமல் நடந்து கொண்டே இருந்த ஆமை வெற்றி பெற்றது. அகம்பாவத்தோடு உறங்கிய முயல் தோல்வியுற்றது. இந்தக் கதையை அறியாதவர் யார்?