
சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
84. புல்லைத் தின்னாது!
ஸ்லோகம்:
வனே௨பி சிம்ஹா ம்ருகமாம்சபக்ஷிணோ
புபுக்ஷிதா நைவ த்ருணம் சரந்தி !
ஏவம் குலீனா வ்யசனாபிபூதா
ந நீசகர்மாணி சமாசரந்தி !!
பொருள்:
வனத்தில் வசிக்கும் சிங்கம் மான்களை வேட்டையாடி, தன் உணவை திருப்தியாகத் தின்கிறது. பசித்தாலும் புல்லை தின்னாது. அதேபோல் நல்ல பண்பாடு உள்ள குடும்பத்தில் பிறந்தவர் மிகுந்த நெருக்கடியில் இருந்தாலும், வாய்ப்பிருந்தாலும், சிரமத்தில் இருந்தாலும் பண்பாடற்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள்.
விளக்கம்:
தேவை, வாய்ப்பு இரண்டும் இருந்தாலும் உயர்ந்தோர் நேர்மையான நெறிமுறைகளை மீற மாட்டார்கள் என்ற கருத்தைக் கூறும் சுபாஷிதம் இது.
லஞ்சம் வாங்கும் சிலர் தம்மைத் தாமே சமாதானப்படுத்திக் கொள்வார்கள். தேவை ஏற்பட்டதால் லஞ்சம் வாங்கும்படி ஆயிற்று என்பார்கள். எல்லோரும்தான் வாங்குகிறார்கள் என்றும் வாய்ப்பு கிடைத்தால் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் என்றும் இப்படி பல சாக்குகள்…! நேர்மையான மனிதன் சூழ்நிலைக்கு அடிமையாக மாட்டான்.
அநீதி இழைத்த ஒரு அரசியல் தலைவருக்கு பெயில் கொடுக்க மறுத்து அவர்கள் அளித்த லஞ்சத்தையும் வாங்க மறுத்த ஒரு நீதிபதி இதற்கு உதாரணம்.
மனைவி, குழந்தைகளைப் பிரிந்து பல கஷ்டங்களை அனுபவித்த போதும் உண்மை பிறழாத ராஜா ஹரிச்சந்திரன் நமக்கு ஆதர்சம்.