
விஜயபதம் – வேத மொழியின் வெற்றி வழிகள் -12. Leadership
(சமஸ்கிருத இலக்கியம் அளிக்கும் தலைமைப் பண்புகள், அரசு தர்மங்கள், வெற்றிக்கான வழிமுறைகள்)
தெலுங்கில் – பி எஸ் சர்மா
தமிழில் ராஜி ரகுநாதன்
Leadership
ஊழியர்களிடம் பாசம் காட்ட வேண்டும்!
புனிதத் தலமான பிரயாக்ராஜில் 2019ம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த கும்பமேளாவில் உலகின் பல இடங்களில் இருந்தும் வந்த பக்தர்கள் சுமார் 25 கோடி பேர் புண்ணிய ஸ்நானம் செய்தனர். திரிவேணி சங்கமத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உதவியவர்களில் முக்கியாமானவர்கள் துப்புரவு தொழிலாளிகள், பாதுகாப்பு வீரர்கள், முடி திருத்துபவர்கள், ஆயிரக்கணக்கான தன்னார்வுத் தொண்டமைப்புகள். கும்பமேளா முடிந்த பின் இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி பிரயாக்ராஜில் ஏற்பாடு செய்யப்பட்டது.
“ஸ்வச் கும்ப் – ஸ்வச் ஆபார்” என்ற நிகழ்வில் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிஜி பங்கேற்றார். அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். துப்புரவு பணியில் ஈடுபட்ட்டவர்களை கௌரவிக்கும் விதமாக சில தொழிலாளர்களின் கால்களை பிரதமர் கழுவி தூய்மை செய்த காட்சி பலரை வியப்பில் ஆழ்த்தியது… ஊக்கமளித்தது. ஒரு எடுத்துக்காட்டான தலைவராக பாரதப் பிரதமரை அனைவரும் பாராட்டினர்.
தலைவனுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணம் தனக்காக பணி புரிபவரை தம் பிள்ளைகளாகக் கருதுவது, அவர்களின் நலன் கோருவது, அவர்கள் பெறும் சம்பள விஷயத்தில் அக்கறை காட்டுவது போன்றவை. உத்யோகிக்கு சம்பளம் கொடுப்பதில் தாமதம் காட்டினால் அவரை நம்பி உள்ள குடும்பத்தாருக்கு சிரமம் விளையும். இது தலைவனுக்கு கெட்ட பெயரை தேடித் தரும்.
ஸ்ரீராமன் தன் தம்பி பரதனிடம் கூறிய ராஜ தர்மங்களில் ஒன்று, “நம் கீழ் பணி புரிவோரை புறக்கணிக்காதே!” என்பது.
காலாதிக்ரமாணாஸ்சைவ பக்த வேதனயோர்ப்ருதா: !
பர்து: குப்யந்தி துஷ்யந்தி ஸோனர்த: சுமஹான் ஸ்ம்ருத: !!
(அயோத்யா காண்டம் –100-33)
பொருள்:- வீரர்களுக்கு கொடுக்கும் சம்பள விஷயத்தில் தாமதம் செய்யக் கூடாது. காலம் தாழ்ந்தால் ஊழியர்கள் அரசனை கோபத்தோடு நிந்திப்பர். அது பல தீங்குகளுக்கு வழி வகுக்கும்.

ஸ்ரீராமன் ராவணனை வதைத்தபின் உலகங்களனைத்தும் மகிழ்ந்தன. இந்திரன் பிரத்யேக விமனத்தில் வந்து பாராட்டினான். இந்திரன் ராமனை இரண்டு வரங்கள் கேட்டும்படி கூறினான். ஸ்ரீராமன் என்ன வரம் கேட்டான் தெரியுமா? தனக்காக போரில் பங்கு கொண்டு மரணித்த வானரங்களை உயிர் பிழைக்கச் செய்ய வேண்டுமென்று கேட்டான். குரங்குகள், மலைக் குரங்குகள், கரடிகள் போன்றவை எங்கு வாழ்ந்தாலும் அவற்றுக்கு அனைத்து காலங்களிலும் நல்ல பழங்கள் கிடைக்க வேண்டுமென்றும் சுத்தமான குடிநீர் நிறைந்த நதிகள் பிரவகிக்க வேண்டுமென்றும் ஸ்ரீராமன் வரம் கோரினான். சீதாப்பழம், ராமர் பழம், லட்சுமணன் பழம் போன்றவை அப்போது தோன்றியவை என்பர். எத்தகைய உயர்ந்த நன்றி காட்டும் குணம் ராமனுடையது!
தலைவன் தன்னோடு பணிபுரிபவரிடம் பாசத்தோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்து பொறாமைபடக் கூடாது. சிறிய விஷயங்களுக்கெல்லாம் எரிச்சலடைவதும் எரிந்து விழுவதும் தவறு. பொறுமையில்லாத தலைவனிடம் ஊழியர்கள் பணி புரிவது இயலாது.
அரசியலில் மட்டுமல்ல. நிறுவனங்களில் கூட… உதாரணத்திற்கு வங்கிகளிலோ, வணிக அமைப்புகளிலோ ஒரு தலைவன் அல்லது ஒரு அதிகாரி, பாஸ் என்ற தோரணையில் உன் தலை மேல் வந்தமர்ந்தால்… ஊழியருக்கு இருக்கும் அறிவு கூட இன்றி எதற்கெடுத்தாலும் திட்டிக் கொண்டிருந்தால்… நின்றால் தப்பு, உட்காந்தால் தப்பு என்று நடந்து கொண்டால்… ஊழியரின் திறமை மேல் பொறாமை அடைந்தால்… எத்தனைக் கஷ்டம்!
பர்த்ருஹரி எழுதிய இந்த சுலோகம் இதே கருத்தை பகடியாக கூறுகிறது:-
மோனான்மூக: ப்ரவசனபடு: வாசகோ ஜல்பகோ வா
த்ருஷ்ட: பார்ஸ்வே வசதி நியதம் தூரதஸ்சாப்ர கல்ப: !
க்ஷான்த்யா பீருர்யதி ந ஸஹதே ப்ராயஸோ நாபிஜாத:
சேவாதர்ம: பரமகஹனோ யோகிநாமப்யகம்ய: !!
பொருள்:- யஜமானரோடு உரிமை எடுத்துக் கொண்டு பேசினால் வாயாடி என்பார். மெளனமாக இருந்தால் ஊமை என்று முத்திரை குத்துவார். பொறுத்துக் கொண்டு போனால் திமிர் பிடித்தவன் என்பார். விலகி இருப்போம் என்றால் கையாலாகாதவன் என்று நிந்திப்பார். ஊழியம் செய்வதென்பது மிகவும் ஆழமான, கடினமான பணி. யோகிகள் கூட புரிந்து கொள்வது கடினம்.
சேவை செய்து பாராட்டு பெறுவதென்பது யோகிகளுக்குக் கூட துர்லபம். சேவகன் எப்படி நடந்து கொண்டாலும் எஜமானிகளுக்கு தவறாகவே கண்ணில்படும். உண்மையான தலைவன் அப்படிப்பட்ட எஜமானி போல் நடந்து கொள்ளக்கூடாது.

தனக்காக் நூறு யோசனை தூரம் சமுத்திரத்தை தாண்டி வந்து ஸ்ரீராமன் பற்றிய நற்செய்தியைக் கொணர்ந்த ஹனுமான் மேல் சீதா தேவிக்கு புத்திர வாத்சல்யம் ஏற்பட்டது. ஹனுமனிடம் இன்னும் ஒரு நாள் தங்கும்படி கேட்கிறாள் சீதை.
யதி வா மன்யசே வீர வசைகாஹ மரிந்தம !
காஸ்மிம்ஸ்சித்ஸம்வ்ருதே தேசே விஸ்ராந்த: ஸ்வோ கமிஷ்யஸி !!
(சுந்தர காண்டம் -39-19)
மிகுந்த பாசம் உள்ளவரே இவ்வாறு பேசுவார்.
தலைவன் எடுத்துக்காட்டாகத் திகழும் ஊழியர்களை தோள் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும். தன்னிடம் பணி புரிபவர்களின் நேர்மை குறித்து அவர்களை மெச்சிப் பாராட்ட வேண்டும் அவர்களுக்கு சன்மானம் அளிக்க வேண்டும். அதே போல் ஒழுக்கமற்றவர்களை விரட்டி விட வேண்டும். நாட்டு நலன், உரிமையாளர் நலன், நிறுவனத்தின் நலன் இவற்றுக்காக் உடலை வருத்தி வியர்வை சிந்தி உழைப்பவர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பவனே தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவன். அப்போதுதான் ஊழியர்கள் துணை நிற்பர். மகாபாரதம் இது விஷயம் குறித்து பேசுகிறது.
அபிப்ராயம் யோ விதித்வா து பர்து:
சர்வாணி கார்யாணி கரோத்யுதந்ரீ !
வக்தா ஹிதாநாமநுரக்த ஆர்ய:
சக்திஜ்ஞ ஆத்மேவ ஹி சோனு கம்ப்ய: !!
(உத்யோக பர்வம் -37-25)
பொருள்:- எஜமானனின் அபிப்பிராயத்தைத் தெரிந்து கொண்டு கவனத்தோடு அனைத்து பணிகளையும் செய்பவரை, மென்மையாக நன்மை கோரி உரையாடும் பணியாளர்களை, எஜமானியிடம் பக்தி, நல்ல நடத்தை உள்ளவரை, தன் திறமையை அறிந்திருப்பவரை, ஆட்சியாளர் பிரத்யேக சிரத்தையோடு ஆதரிக்க வேண்டும்.
யத்யதாசரதி ஸ்ரேஷ்ட ஸ்தத்த தேவேதரோ ஜன:
ஸ யத் ப்ரமாண்ம் குருதே லோகஸ்த தனுவர்ததே !!
(பகவத் கீதை 3-21)
பொருள்:- உத்தம மனிதன் செய்யும் செயல்களையே பிறரும் செய்வர். அவர் ஆதாரமாக ஏற்றவற்றையே சமுதாயம் பின்பற்றும்.
இப்படிப்பட்ட உத்தம மனிதர் ஒரு தேசத்திற்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ தலைவராக இருக்கலாம். உலகமென்றால் மக்கள். தன்னோடு பணி புரியும் ஊழியர்களுக்கு தலைவன் எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும். மக்கள் தன்னை எடுத்துக்காட்டாக ஏற்றுக் கொள்ளும் நடத்தை கொண்டிருக்க வேண்டும் மேற்பார்வையாளர் என்ற பதவியில் இருப்பவரே அலுவலகத்துக்கு தாமதமாக வந்தால்? ஒழுக்கம் தவறினால்? வேலியே பயிரை மேய்ந்தால்? அதனால் தலைவன், குரு, மேதைகள், பெற்றோர்… ஆகியோர் தம்மைப் பார்த்து பின்பற்றுபவர் உள்ளனர் என்ற நினைவோடு நடந்து கொள்ள வேண்டும்.
சுபம்!




அருமை. மிக அருமை. தெரிந்த விஷயங்களையே மீண்டும் மீண்டும் எடுத்துச் சொனால்தான் பின்பற்றத் தோன்றும்.