திருப்புகழ்க் கதைகள் 220
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
சீறல் அசடன் – பழநி
முறைமை இலி
அருணகிரியார் தன்னைத் தானே முறைமை இலி என்று குறைப்பட்டுக் கொள்கிறார். முறைமை என்றால் ஒழுங்கு எனப் பொருள். மனித வாழ்வு புனித வாழ்வாக அமைய வேண்டும். அது ஓர் ஒழுங்குமுறையில் அமைய வேண்டும். உண்ணுகின்ற உணவில் ஓர் ஒழுங்கு வேண்டும். நமக்குப் பொருந்திய உணவுகளையே உண்ணவேண்டும். பொருந்தாத உணவுகளை அறவே அகற்ற வேண்டும். பொருந்தாத உணவை அதனை உண்ணுகின்றவர்களே ‘அந்நிய பதார்த்தம்’ (foreign substance) என்கின்றார்கள்.
மாதப்பிறப்பு, கார்த்திகை, அமாவாசை, புரட்டாசி மாதம், சிவராத்திரி, ஏகாதசி, திருவாதிரை, தைப்பூசம், பித்ருக்களுடைய நாள் முதலிய தினங்களில் பொருந்தாத உணவை யாரும் உண்பதில்லை. அதனாலேயே அது புனிதம் இல்லாதது என்று விளங்குகின்றதல்லவா? பொருந்தாத உணவு மனிதனுடைய அமைதிக் குணத்தை யகற்றி வெறிகுணங்களை விளைவிக்கின்றது. ஆதலால் அதனை அகற்றி உணவில் ஒழுங்கு பெற வேண்டும்.
உணவு உண்ணுதலில் ஒரு முறைமை வேண்டும் என்பதை முதன்மையாகப் பார்க்கும்போது அதன் பின்னர் கழிவுகளை, மனிதக் கழிவுகளைப் பற்றியும் பேசவேண்டும். ஆடு மாடு முதலிய விலங்குகள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மலம் கழிக்கும். மனிதன் மலங்கழிக்கும் இடத்தை ஒருபுறம் அமைத்து ஒழுங்காக மலசலம் கழிக்கின்றான். அதுபோல் உடம்பில் எழும் இன்ப வேட்கையை இல்லறக் கிழத்தியாகிய மனைவியின் இடமே தணிக்க வேண்டும். அன்றிப் பலப்பல மாதர்களை நாடி அலைவது கண்ட கண்ட இடங்களில் மலங்கழிப்பது போலாகும். ஆகவே வேட்கையைத் தணிப்பதில் ஓர் ஒழுங்கு வேண்டும்.
ஆடுமாடுகள் தமக்கு ஒதுக்கிய பொது இடத்தில்தானே புல் மேய்கின்றன. பிறருக்கு உரிய நெல் வயல்களில் சென்று அவை மேய்ந்தால் அவற்றை மேய்ப்பவர் தடுப்பார். நாமும் பொருள் ஈட்டுவதில் நேர்மையைக் கடைபிடித்து நியாயமான முறையில் நடக்க வேண்டும். நெறியில்லாத நெறியில் பொருள் ஈட்டுவது பெரும் பிழை.
எனவே, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தையும், வாய், கண், மெய், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளால், விதிப்படி நுகர்வதே ஒழுங்கு. யானையை அங்குசத்தால் அடக்குவதுபோல, (கொல்வதன்று-அடக்குவது) நல் உணர்வினால் மெய், வாய், நாசி, கண், செவி என்ற ஐம்பெரும் யானைகளை, அவைகட்கு உரிய ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஓசை என்ற ஐம்புலன்கள் மீது செல்லாதவண்ணம் அடக்கவேண்டும். அங்ஙனம் அடக்கினவன் முத்தி வீட்டுக்கு முதலாக விளங்குவான்.
“உரன் என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்புக்குஓர் வித்து”
எங்கிறது திருக்குறள். ஆகவே இவ்வண்ணம் நமது கருவி கரணங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டு வாழ்வது ஒழுக்க முறைமை.
மேற்கூறியபடி பொறிபுலன்களை ஒழுங்கு படுத்தாமல், அவற்றின் போக்கில் விடுத்து, பாவங்களைச் செய்து வஞ்சனையாக நடப்பவனை தீமை புரி கபடி என்றழைப்பார்கள். வண்டி ஓட்டுகின்றவன், வண்டியில் பூட்டிய குதிரையை அடக்கி தன் இச்சைப்படி லெுத்தாமல், குதிரை போகும் போக்கில் விட்டு ஓட்டுவானாயின், அவன் குறித்த இடத்துக்குப் போக மாட்டானன்றோ?
பாதை தவறிய கால்கள் ஊர் சென்று சேர்வதில்லை என்று இரு திரைப்படப் பாடல் கூறும். அதுபோல் உடம்பாகிய வண்டியில் பூட்டிய கண் முதலிய பொறிகளை அதன் போக்கில் விட்டவன், முத்தி வீட்டினை அடைய மாட்டான் என உணர்க.
மேலும் இத்திருப்புகழில் அருணகிரிநாதர் தன்னை பவ நோயே தேடு பரிசி என்றும் குறிப்பிடுவார். பவம் என்றால் பிறப்பு; பரிசு என்றால் தன்மை என்று பொருள். பிறவி ஒரு பெரிய நோய். பவரோகம் என்று வட மொழியில் கூறுவர். பிறவிப் பெரும்பிணி எண்ணில்லாத காலமாக இந்த உயிரைப் பிடித்து வருகின்றது. அதனைத் தீர்ப்பவன் பிறப் பிறப் பில்லாத முருகன். அதனால் முருகன் வைத்தியநாதன் எனப்படுகிறான்.
அவர் தன்னை கனநீதி நெறி முறைமை சீர்மை சிறிதும் இலி என்றும் குறிப்பிடுவார். கனம் என்றால் பெருமை. கனம் கோர்ட்டார் அவர்களே என்பது உங்களுக்கு உடனே நினைவுக்கு வரலாம். மனிதனுக்கு அமைய வேண்டிய குணங்கள் பல; அவற்றுள் இந்த ஐந்தும் சிறந்தவை. பெருமை, நீதி, நெறி, முறை, சிறப்பு.
⦁ வாக்கிலும் நடையிலும் பெருமை தோன்ற வேண்டும்.
⦁ நீதி-ஒவ்வொருவரும் இப்படி இப்படி நடக்க வேண்டும் என்று வரையறுப்பது.
⦁ நெறி-அவ்வாறு வரையறுத்த வழியில் பிறழாது நடப்பது.
மநு, சுக்ரர் முதலியவர்கள் வடமொழியில் நீதி நூல்கள் செய்திருக்கின்றார்கள். அவை மநுநீதி, சுக்ரநீதி எனப்படும். தமிழிலேயும் அநேக நீதி நூல்கள் உண்டு. சுருக்கமாகக் குமரகுருபரர் “நீதி நெறி விளக்கம்” என்ற அரிய நூலை வழங்கினார். நீதிவெண்பா, நீதிசாரம், உலக நீதி முதலிய நூல்கள் தமிழ் மக்களுக்கு வற்றாத ஊற்றாக நீதிகளைச் சுரந்து கொண்டிருக்கின்றன, அவற்றைக் கற்று அதன்படி ஒழுகவேண்டும். இத்தகு நீதி நெறிகளை அழித்த படியால் தாரகன் முதலியோரை முருகப் பெருமான் அழித்தார்.