spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்புத்தகத்தின் உள்ளடக்கத்தை அட்டை முடிவு செய்யாது !

புத்தகத்தின் உள்ளடக்கத்தை அட்டை முடிவு செய்யாது !

- Advertisement -

அரங்கனை தினம் காலை மாலை இருவேளையும் தரிசித்து வரும் பக்தர் குழுவில், வயதான பண்டிதரும் ஒருவர். ஆர்வம் மிக இருந்தும், வயது மூப்பு காரணமாய், அவரால் மற்றவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் பல நேரங்களில் கருடன் சந்நிதியுடன் நின்று விடுவார்.

அரங்கன் திசை நோக்கி வணங்கிவிட்டு கருட மண்டபத்தில் சற்று இளைப்பாறி, மற்றவர்கள் திரும்பி வரும்போது தானும் திரும்பி விடுவார். பலவித விமர்சனங்கள், கேட்டும் கேளாதது போல், தினம் தினம் வருவதும் ஒரு சில நாட்கள் அரங்கன் கோயில் உள்ளே சென்று தரிசித்து வருவதுமாக இருந்த அவர், ஒரு நாள் கையில் பாகவதம் புத்தகத்துடன் வந்து, கருட மண்டபத்தின் கீழ் பகுதியில் ஓரமாய் அமர்ந்து, சிறிது நேரம் படித்து விட்டு, வீடு திரும்புவது என வழக்கத்தை ஏற்படுத்துக் கொண்டார். ஆக அரங்கனை சென்று சேவிப்பது என்பது அபூர்வமாகி விட்டது.பலரும் அவர் புத்தகம் படிப்பதை பார்த்துவிட்டு செல்வார்கள். பண்டிதர்கள் சிலர் நின்று சற்று நேரம் கேட்டு விட்டு செல்வார்கள். அதில் ஒரு சிலர் இவர் சில வரிகளை விட்டு விட்டு சில வரிகளை படித்து பக்கங்களை புரட்டுவதை பார்த்து, வயது மூப்பு காரணமாய் ஒரு ஒழுங்கை கடைபிடிக்க இயலாது ஆர்வம் ஒன்றே முதலாய் கொண்டு ஏதோ வயதான காலத்தில் படிக்கிறார் – பாவம்! தவறை தெரிந்தா செய்கிறார்? போகட்டும் என நினைத்து அவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டனர்.

அங்கும் இங்கும், அவரவர் பேச, பண்டிதர் படிக்கிறாரே தவிர ஒரு ஒழுங்கும் இல்லை. பக்கத்தில் பாதி படிப்பது, மீதி விழுங்குவது என எதோ படிக்கிறார். அவ்வளவுதான்! மூப்பு காரணமாய் புத்தி சரியாக வேலை செய்யவில்லை, என பேசி கடைசியில் ‘அதுவா! அது ஒரு அரைப்பைத்தியம்’ என பட்டம் கட்டி விட்டார்கள்.

எது எப்படியோ! பண்டிதர், தான் தினமும் பாகவதம் படிப்பதை நிறுத்தவில்லை.

ஒரு நாள் அரங்கனை சேவிக்க, வெளியூரிலிருந்து, ஆச்சாரியார் நிலையில் உள்ள பெரிய பண்டிதர் ஒருவர் வரப்போவதாய் சேதி வந்தது. உள்ளூர் பண்டிதர்கள் கூடி அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்தனர்.மேளதாளத்துடன், வேத கோஷத்துடன், பூர்ண கும்ப மரியாதையோடு வரவேற்க வேண்டுமென முடிவு செய்யும் போது, கருட மண்டபத்தில் தினம் பாகவதம் படிக்கும் பண்டிதரைப் பற்றியும் பேச்சு வந்தது. அரைகுறையாக பாகவதம் படிக்கும் இவரை வெளியூர் பண்டிதர் பார்த்தால், இவர் படிப்பதைக் கேட்டால் உள்ளூர் பண்டிதர்கள் அனைவருக்கும் அவமானம். இதைத் தவிர்க்க என்ன செய்வது என்று கேள்வி பிறந்தது.

மூத்த பண்டிதர்கள் பலரும், அவர் ஒரு ஓரமாய் வயதான காலத்தில் ஏதோ ஆர்வத்துடன் படிக்கிறார்; அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்ல, சில இளவட்டங்கள் பிரச்சனையை வேறு விதமாக தீர்ப்பதாக சொன்னார்கள்.

“பெரியவரே! அரங்கனை தரிசிக்க வெளியூர் பண்டிதர் ஒருவர் வரப்போகிறார். மேளதாளம் என கூட்டம் அதிகம் கூடும். தாங்கள் பாகவதம் பக்தி சிரத்தையுடன் படிப்பதற்கு இங்கு இடைஞ்சலாய் இருக்கும். ஆகையால் ஒரு நாள் மட்டும், கிழக்கு கோபுரவாசல் பக்கம் மணல் வெளியில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து, எவ்வித தொந்தரவும் இல்லாமல் படிக்க வேண்டும்”, என பவ்யமாய் அவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அந்த அரைப் பைத்தியம் முரண்டு பிடித்தால் என்ன செய்வது என்ற பயமும் கூடவே இருந்தது.

ஆனால், அவரோ “ரொம்ப சங்தோஷம். முன்கூட்டியே சொன்னதற்கு மிக்க நன்றி. எல்லம் கண்ணன் கிருபை”, எனக் கூறி மறு நாள் தான் நேராக கிழக்கு கோபுரவாயில் வழியாய் வந்து, அங்கு மண்டபத்தில் பாகவதம் படிப்பதாக உறுதி கூறி விடை பெற்றார்.

இளைஞர்களுக்கு சந்தேகம். ஞாபக மறதி காரணமாய் பெரியவர் கருட மண்டபம் வந்து விட்டால் என்ன செய்வது என யோசித்து அன்று காலை தெற்கு கோபுர வாயிலில் இருவரும், கிழக்கு கோபுர வாயிலில் இருவரும் பெரியவரை எதிபார்த்து நின்றனர்.

பெரியவரும் சொன்னபடி கிழக்கு கோபுர வாசல் வழிவந்தார். அவரை உபசரித்து, மணல்வெளி மண்டபத்தில் அமர்த்த வந்த இளைஞர்களிடம், ‘நீங்கள் வெளியூர் பண்டிதரை வரவேற்க செல்லுங்கள். நான் இங்கு உட்கார்ந்து கொள்கிறேன்’, எனக் கூறி மண்டபத்தின் தூண் ஓரமாய் புத்தகத்தை வைத்து விட்டு, முன்னால் உள்ள மணல் வெளியில் பத்து அடி சதுரத்திற்கு சமன் செய்ய ஆரம்பித்தார். மேலாக தென்பட்ட சிறு கற்கள், தூசு தும்புகளை அகற்றி கைகளால் நன்றாக தட்டி மணலை அவர் சீர் செய்வதைப் பார்த்த அந்த இளைஞர்களுக்கு சிரிப்பு வந்தது. ஏதோ வரப்போகும் பண்டிதர் நேராக இங்கே வந்து, இவர் முன்னால் உட்கார்ந்து பாகவதம் கேட்கப் போவது போல, தன் முன்னால் மணலை சீர்செய்து விட்டு, அவர் புத்தகம் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்ததும், இனி இவர் எழுந்து வர மாட்டார் என சொல்லிக் கொண்டு வேகமாய் தெற்கு வாசலுக்கு, வெளியூர் பண்டிதரை வரவேற்கும் கூட்டத்தில் சேர விரைந்தனர்.

வெகு விமரிசையாக வரவேற்கப்பட்ட அந்த வெளியூர் பண்டிதர் கருட மண்டபம் வந்ததும், சற்று நேரம் காது கொடுத்து உற்று கேட்டு விட்டு, எல்லோரையும் சற்று அமைதியாக இருக்கும்படி சொல்லி தொடர்ந்தார்.

“பண்டிதர்களே! இங்கு எங்கோ மிக மன அமைதியுடன் ஆத்ம சுகத்துடன் பாகவதம் படிப்பது என் காதில் விழுகிறது. அந்த யோகியை, பரம பாகவதரை, முதலில் தரிசித்து வணங்கி, பிறகு அரங்கனை சேவிக்கலாம். அந்த மகானை தாங்கள் எனக்கு காட்ட வேண்டும்”, என கை கூப்பி தொழுதார்.பண்டிதர்கள் பலருக்கும் ஆச்சர்யம்! கிழக்கு கோபுர வாயிலை ஒட்டி மணல் வெளியில் இருந்து கொண்டு பாகவதம் படிக்கும் அவர் குரல் இங்கு இவருக்கு எப்படி கேட்கிறது? ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, கிழக்கு கோபுர வாயிலில் இருந்து வந்த அந்த இளைஞர்களுக்கு மிக ஆச்சர்யம். ஆகா! அந்த பண்டிதர் பெரிய மகான் போலும்!இவர் அங்கு வந்து பாகவதம் கேட்பார் என நினத்துதானோ என்னவோ, தன் முன் மணலை சரி செய்து வைத்து விட்டு பாகவதம் படிக்கிறார் போலும் என நினைத்து உள்ளூர் பெரிய பண்டிதர்கள் வார்த்தையை எதிர்பார்த்து நின்றனர்.

உள்ளூர் பண்டிதர்களில் ஒருவர் தொடர்ந்தார். “ஸ்வாமி! இங்கு கருட மண்டபத்தில் உள்ளூர் பெரியவர், வேத சாஸ்திரங்களில் தேர்ந்தவர், தினம் இங்கு வந்து பாகவதம் படிப்பார். இன்று தாங்கள் வரும் போது கூட்டம் அதிகமாய் இருக்கும், அவருக்கு தொந்தரவு கூடாது என நினைத்து, இன்று மட்டும் அவரை கிழக்கு வாயிலில், அமைதியான சூழ்நிலையில் பாகவதம் படிக்கும்படி நாங்கள் தான் கேட்டுக் கொண்டோம். அவரும் சந்தோஷமாய் எல்லாம்
#கண்ணன்_கிருபை என சொல்லிப் போனார். அவர்தான் கிழக்கு வாயிலில் பாகவதம் படிக்கிறார் போலும்”.

இந்த வார்த்தைகளை கேட்டதும் வெளியூர் பண்டிதர், “ஆகா! நாம் எல்லோரும் அபச்சாரப்பட்டு விட்டோமே! இதற்கு நான் காரணமாகிவிட்டேனே! முதலில் அவரிடம் சென்று மரியாதை செலுத்தி விட்டு பிறகு தான் அரங்கனை சேவிக்க வேண்டும். பாகவத அபச்சாரம் கொடியது அல்லவா? அவரை சற்றே தள்ளியிரும் எனச் சொன்னது பாவம் அன்றோ? வாருங்கள், அவர் இருப்பிடம் போகலாம்” என விரைய, பலரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.உள் மணல் வெளியை தாண்டி, வெளி மணல் வெளியை அடந்த போது, எல்லோரையும் அங்கேயே சற்று நிற்கும்படி கையசைப்பின் மூலம் சொல்லி விட்டு, கூப்பிய கரங்களுடன் பாகவதம் படிக்கும் பண்டிதரின் வலது புறம் வந்து நின்றார். தனக்கு முன்னால் திரண்ட கூட்டத்தையோ, அல்லது வெளியூரிலிருந்து வந்திருந்த பண்டிதரையோ, பாகவதம் படித்துக் கொண்டிருந்த நம் உள்ளூர்
பெரியவர் கவனிக்கவில்லை. அவர் தமது வழக்கப்படி சில வரிகள் படிப்பதும், மெய்மறந்து தன் முன்னால் உள்ள மணல் பரப்பை மகிழ்வுடன் பார்ப்பதும், மாறி மாறி படிப்பதும், மெளனமாய் இருப்பதுமாக ஒருவாறு பாகவத புத்தகத்தை மூடி வைத்தார்.

அதுவரை பக்கத்தில் நின்று கொண்டிருந்த வெளியூர் பண்டிதர் சற்று முன்பாக வந்து, பெரியவர் சமன் செய்து வைத்திருந்த மணல் திட்டை நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, மிகவும் பய பக்தியுடன் அந்த மணல் திட்டிலிருந்து, சர்வ ஜாக்கிரதையுடன் சிறிது சிறிதாக மணல் துளிகளை தன் மேல் உத்திரியத்தில் திரட்டி, பாகவத பண்டிதரிடம் இரு கைகளாலும், மிக பணிவுடன் கொடுத்தார்.

அவரும் எழுந்து நின்று ‘தங்களுக்கு தெரிந்தது எனக்கு தெரியவில்லையே’ என மன நெகிழ்வுடன் கூறி ‘தாங்கள் ஸ்வீகரித்தபின் அல்லவோ, நான் பெற வேண்டும்’, என்று கை கூப்பி நின்றார். வெளியூர் பண்டிதரோ, ‘தங்களால் கிடைக்கப் பெற்றது. தங்களுக்கு முதலில் சமர்ப்பித்த பிறகு அல்லவோ மற்றவர்களுக்கு’ எனக் கூறி மறுபடியும் மணல் துகள்களை உத்தரியத்துடன் காட்ட, உடனே பாகவதம் படித்த பண்டிதர் மிகவும் அடக்கத்துடன் சிறிது மணல் துளிகளை எடுத்து நெற்றியில் திலகமாய் இட்டுக் கொண்டு, சிரசிலும் தரித்துக் கொண்டு, சந்தனம் பூசிக்கொள்வது போல மார்பிலும் பூசிக் கொண்டார்.

இதைப் பார்த்த மக்களுக்கு ஏதும் புரியவில்லை. அதே சமயம் அவர்கள் மனத்தில் ஒரு தெளிவு. ‘இது நாள் வரையில் அரைப் பைத்தியம் எனக் கருதப்பட்ட பெரியவர், சாதாரண பண்டிதர் இல்லை; கண்ணனின்_கிருபை, அரங்கனின் அருள் பூரணமாய்ப் பெற்றவர். நாம் தவறு செய்துவிட்டோம்’ என்ற எண்ணத்துடன் அவர்கள் மெளனமானார்கள். கூட்டத்தினர் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கோண்டு இருக்கும் போது வெளியூர் பண்டிதரி தொடர்ந்தார்.

“ஸ்வாமி! தாங்கள் ஏன் பாகவத்தை தொடர்ச்சி விடாமல் படிப்பது இல்லை? சில பல இடங்களை விட்டுவிட்டு படிப்பதன் விபரம்தான் என்ன?”

பாகவதம் படித்த உள்ளூர் பண்டிதர் மிக அடக்கமாய் சிரித்துக் கொண்டே, “ஸ்வாமி! தாங்கள் எல்லாம் தெரிந்தும் தெரியாது போல் ஏன் கேட்கிறீர்கள்? பல நூறு மனிதர்கள் மன சந்தோஷத்துடன் உணவு உண்ணும் போது, அங்கே ஒரு பசித்தவன், அந்த விருந்தை பார்த்தாலும் அவன் பசி போகாதல்லவா? பசித்தவன் புசித்தால் அல்லவோ பசி போகும், வயிறு நிறையும், மனம் குளிரும்? அதே போல் பகவானை அனுபவிக்கும் போது, சுற்றிலும் பலர் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அந்த ருசி தெரியாதல்லவா? தாங்கள் ருசி தெரிந்து, கண்ணன் பாத துளியை சேகரித்து எனக்கு கொடுத்தீர்கள். கண்ணனை கண்டேனே தவிர, அவன் பாத துளியை தரிசிக்க மறந்தேன். தங்களால் அந்த பாக்கியம் கிடைத்தது. தங்களுக்கு தோன்றியது எனக்கு தோன்றவில்லை. இன்று தங்கள் வருகையால் அல்லவோ எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது. நான் ஏதும் சொல்லுவதற்கு பதில், தாங்களே ஏதும் சொல்ல வேண்டும் என்றால் சொல்லலாம். நானும் அதை உவப்புடன் கேட்பேன்.”

உடனே வெளியூர் பண்டிதர் கூட்டத்தினரைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

“திருவரங்கவாசிகளே! நீங்கள் எல்லோரும் அரங்கனை தினம் தினம் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். பரம பக்தரான இந்த பண்டிதர் பாகவதம் படிக்கும் போது, என்ன நடந்தது என்று பலருக்கும் தெரியாது. ஆனால் பேரருளாளன் கண்ணன் அறிவான். அவனை இவருக்கு தெரியும். இன்று காலை நான் வந்தவுடன் மேளதாள ஆரவாரத்திற்கும், வேத கோஷத்திற்கும் நடுவில் பாகவதம் படிப்பது என் காதருகில் மிக தெளிவாகக் கேட்டது. படிப்பது நின்றபோது சதங்கை ஒலி மட்டும் கேட்டது. ஆக பரமபாகவதாரன பெரியவர் முன் கண்ணன் களி நடனம் ஆடுகிறான். அதை அவர் அனுபவிக்கும்போது படிப்பதை நிறுத்தி விடுகிறார். கண்ணன் லீலை தொடற்கிறது. கண்முன் நின்ற கண்ணன் மறைந்ததும், பாகவதம் அங்கு தொடர்கிறது. மறுபடி கண்ணன் இவர் படிப்பதற்கு ஏற்ப நடனம் ஆட, கண்ணனை இவர் பார்ப்பதும், விட்டு விட்டு பாகவதம் படிப்பதும் தொடர்கிறது.

ஆக பாகவதம் எந்த குறையும் இல்லாமல் தொடர்கிறது. கருட மண்டபத்தில் இவர் தன் மேல் துண்டினால் தினமும் தன் முன்பாக சுத்தம் செய்துவிட்டு பிறகு பாகவதம் படிப்பது நம்மில் யாரும் அவர் முன்வந்து அமர்ந்து பாகவதம் கேட்போம் என்ற எண்ணத்தில் அல்ல. பாகவதம் படிக்க ஆரம்பித்ததும், கண்ணன் அவர் முன் தோன்றி, படிப்பதற்கு ஏற்ப நடனம் ஆடுகிறான். அவன் கால்படும் இடம் சுத்தமாக இருப்பதற்காகத்தான் தனது வஸ்திரத்தைக் கொண்டு சுத்தம் செய்கிறார். அதேபோல் இங்கு மணல் வெளியில் இவர் கையால் செய்த மணல்மேட்டில் கண்ணன் பாத சுவடுகள் படிந்திருப்பதைப் பாருங்கள். கண்ணன் இவர் முன் நடனம் ஆடியதற்கு அதுவே சாட்சி. அவர் தினமும் காணும் காட்சியைத்தான் நான் கண்டேன். இவர் தயவால் கண்ணன் களிநடனம் கண்டேன். அவன் பாதம்பட்ட இடத்திலிருந்து பாத துளி சேகரித்தேன். அதுதான் இந்த திருமண். திருவரங்கத்தில் பரம பாகவதர் இவர் வழிகாட்ட அரங்கனை சேவிக்க அனைவரும் செல்வோம்.”

அரைகுறை பைத்தியம் என அதுவரை ஊரால் கருதி வந்த அந்த உள்ளூர் பரம பக்தர் முன் செல்ல, அரங்கனை தரிசிக்க பின் தொடர்ந்தார் வெளியூர் பண்டிதர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe