”நான்தான் அந்தச் சுவாமிநாதன்!”
( கண் பார்வை இல்லாம போன பெண் குழந்தைக்கு பார்வை வந்த அதிசயம்)
தகவல் உதவி-நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள்,
நன்றி பால ஹனுமான்.
‘காஞ்சி மகா பெரியவாளை ஒரு மகானாக மட்டுமின்றி, தங்களின் கண்கண்ட தெய்வமாகவே போற்றித் துதித்த பக்தர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களது வாழ்வில் பல இக்கட்டான நேரங்களிலும், அவர்களுடைய அடுத்தகட்ட நகர்வுக்கான தருணங்களின்போதும் தம்முடைய தீர்க்க தரிசனத்தால்- தீட்சண்யத்தால் அந்த அன்பர்களின் பிரச்னைகளைக் களைந்ததோடு, அவர்களது வாழ்க்கையையும் செம்மைப் படுத்தியவர் என்பதால், மகாபெரியவாமீது அவர்களுக்கெல்லாம் அதீத அன்பு; மிதமிஞ்சிய பக்தி!” – பரவசத்துடன் விவரித்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அதற்கு உதாரணமாகச் சில சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை! ஒருநாள்,குழந்தையை எடுத்துக்கொண்டு நேரே மடத்துக்கு வந்துட்டார் சுவாமிநாதன். மகாபெரியவா முன்னால் குழந்தையைக் கிடத்தி, விஷயத்தைச் சொல்லி, ”பெரியவாதான் கருணை பண்ணணும்”னு கண்ணீர் விட்டுக் கதறினார்.”அது, 1950-ஆம் ஆண்டுன்னு நினைக்கிறேன். மடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அன்பர் சுவாமிநாதனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குக் கண்ணில் குறைபாடு; பார்வை இல்லாம போச்சு! சென்னையில் இருக்கும் பிரபல கண் ஆஸ்பத்திரி களுக்கெல்லாம் குழந்தையைக் கொண்டுபோய்க் காண்பிச்சார் சுவாமிநாதன். ஆனால், டாக்டர்கள் கைவிரிச்சுட்டாங்க. சுவாமிநாதன் மனசு ஒடிஞ்சு போயிட்டார்.
மகாபெரியவா மெள்ள அருகில் வந்து, குழந்தையின் கண்களை உற்றுப் பார்த்தார். கொஞ்சம் கற்கண்டு கொண்டுவரச் சொல்லி, குழந்தையில் மார்பில் வைத்தார். குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுவது போல் மீண்டும் ஒரு ஆழமான பார்வை. பிறகு, ”குழந்தையைத் தூக்கிட்டுப் போ. எல்லாம் சரியாயிடும்” என்று கருணை பொங்க உத்தரவு தந்தார்.
சுவாமிநாதன் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி! ‘இனி கவலை இல்லை. மகா பெரியவா சொல்லிட்டதால, குழந்தைக்கு நிச்சயம் பார்வை கிடைச்சிடும். ஏதோ கர்ம வினை… அதுவும் பெரியவாளோட அனுக்கிரகப் பார்வையால் சரியாயிடும்’ என்று மனப்பூர்வமாக நம்பினார் அவர். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. சில நாட்களிலேயே, குழந்தைக்கு மெள்ள மெள்ள பார்வை வந்துவிட்டது.
அதன்பிறகு, சுவாமிநாதன் சென்னை- பெருங்களத்தூரில் வந்து குடியேறினார். அவரோட குழந்தை வளர்ந்து பெரியவளாகி, அந்தப் பெண்ணுக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் ஆகி, இப்ப சுவாமிநாதனுக்கு ‘அனுராதா’ன்னு ஒரு பேத்தி இருக்கா. எல்லாம் மகா பெரியவாளோட அனுக்கிரகம்” என்று விவரித்து முடித்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அருகிலிருந்தவரைச் சுட்டிக்காட்டி, ”அதுசரி… இவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலையே, இவர் யாரு தெரியுமா?” எனப் பூடகமாகக் கேட்டார். அந்த அன்பரை அப்போதுதான் கவனித்தோம். கண்களில் நீர்மல்க அமர்ந்திருந்தவர், சிறு புன்னகையுடன் சொன்னார்: ”நான்தான் அந்தச் சுவாமிநாதன்!”



