“மகா-பெரியவா-காலைப்-பிடிச்சிட்டேன்!-வினுசக்கரவர்த்தி
மறைந்த வினுசக்கரவர்த்தியின் பழைய கட்டுரை
நன்றி-கல்கி
மிக்ரி கலைஞர்கள், சினிமா ஹீரோக்களுக்கு இணையாக குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தியின் குரலை மிமிக்ரி செய்வார்கள். இவரின் கம்பீர உருவமும், பேஸ் வாய்ஸும், ரசிகர்களால் மறக்க முடியாதது. கடந்த சில வருடங்களாக வெள்ளித் திரையில் தோன்றாவிட்டாலும், பழைய குரலும், கம்பீரமும் மாறவில்லை. சென்னை சாலிக்கிராமத்தில் வசித்து வருகிறார் வினுசக்கரவர்த்தி.
நான் கடைசியா நடிச்ச படம் முனி. எனக்கு இப்ப 65 வயது. என் அறுபதாம் கல்யாணத்துக்கு அப்புறம் மூணு வருஷம் கழிச்சு, மதுரை பக்கத்துல எங்க சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்தை முடிச்சிட்டு கார்ல வந்துகிட்டு இருக்கறப்ப ஒரு லாரி மோதிச் சின்ன விபத்து. என்னை சோதிச்சுப் பார்த்த டாக்டர்ஸ் ‘மூணு வருஷம் ரெஸ்ட் எடுக்கணும்’னு சொல்லிட்டாங்க. நான் வணங்கும் காமாட்சி அம்மனை மனசுல நினைச்சுக்கிட்டு, காமாட்சி, காமாட்சின்னு அவளோட திருநாமத்தைச் சொல்லிக்கிட்டே மூணே நாள்ல எழுந்திருச்சு உட்கார்ந்தேன்.
சினிமாவில் பரபரப்பாய் இயங்கிக்கிட்டிருந்த காலங்களில் என் குடும்பத்துக்கு அதிகமான நேரம் ஒதுக்கலை. இந்த விபத்து குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவு செய்ய வழிசெய்து கொடுத்தது. பொண்ணோட அமெரிக்காவில் ஆறு மாசம், பையனோட லண்டனில் ஆறு மாசம்னு இந்த மூணு வருடங்கள் கழிந்தன. மருமகனும், மருமகளும் ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க. பேரப்புள்ளைங்க ‘தாத்தா, தாத்தா’ன்னு அன்பா நம்மளைச் சுத்திவர்றது இருக்கே, எவ்வளவு சம்பாதிச்சாலும் இதுக்கு ஈடாகாது. ‘உங்களுக்கு 62 வயசில் இப்படி விபத்து நடக்கணுமா’ன்னு என் மனைவி கேட்பாங்க. அதுக்கு ‘இந்த விபத்தால் நான் எதையும் இழந்திடலை. ஆனால் 32 வயதில் நடந்திருந்தா என்னை சினிமாவில் பார்த்திருக்க முடியாது’ என்று மனைவிக்குப் பதில் சொல்வேன்.
நான் சிறு வயதில் உசிலம்பட்டியிலிருந்து சென்னை வந்து கல்வி பயின்று, ரயில்வே மற்றும் போலீஸ் டிபார்ட்மெண்ட்ல வேலை செய்து, பிறகுதான் டைரக்டர் புட்டண்ணா கனகலிடம் உதவியாளராய் சேர்ந்தேன். ரோசாப்பூ ரவிக்கைக்காரி மூலமா தமிழ் சினிமாவில் கதை- வசனகர்த்தாவாக நுழைந்தேன். பல படங்களுக்கு கதை- வசனம்; பிறகு 1,200 படங்களில் நடிப்பு. இதில் இருபது மலையாளப் படங்கள். இந்த அனுபவங்களைக் கொண்டு, சிறந்த பத்து கதைகளைத் தேர்ந்தெடுத்து, என்னுடைய இயக்கத்தில் இயக்க உள்ளேன். இளைய ராஜாவின் இசையில் என் இயக்கத்தில் ‘வேலிகாத்தான்’ என்ற படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் எதிர்பார்க்கலாம். இந்தக் கதையை மம்முட்டி அல்லது மோகன்லாலை வைத்து மலையாளத்தில் செய்ய இருக்கேன்.
இதற்கான டிஸ்கஷன் என் வீட்டிலேயே நடக்கிறது. டிஸ்கஷன் நேரம் போக மீதி நேரங்களில் இறை வழிபாட்டில் ஈடுபடுவேன். தெரியாமல் செய்த பாவங்களைப் போக்க, இறைவனைப் பிரார்த்தித்து, மன்னிப்பு வேண்டி உடலை நீரால் கழுவ வேண்டும். மனத்தால் செய்த நமது அந்தரங்கப் பாவங்களைப் போக்க, இறைவன் சன்னிதானத்தில் மனமுருக பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.”
அடிக்கடி காமாட்சி அம்மனின் பெயரை உச்சரிக்கிறீர்களே, ஏன்?
நாற்பது வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிபுரத்தில் ஒரு அக்ரஹாரத்தின் வழியாய் காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய்க்கிட்டிருந்தேன். திடீரென பெரியவர் வர்றார்ன்னு குரல் கேட்டது. பரபரப்பாய் மக்கள் இங்கேயும், அங்கேயும் போய்க்கிட்டிருந்தாங்க. நானும் ஏதோ வயசான பெரியவர் வர்றார்ன்னு திரும்பிப் பார்த்தா, மஹா பெரியவா. நான் சடார்ன்னு அந்த ஞானியின் காலைப் பிடிச்சிட்டேன். அப்புறம் அவர் அந்த இடத்தை விட்டுப் போயிட்டார். நான் ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்னேன். அக்ரஹாரத்து அய்யர்களெல்லாம், ‘நாங்க கூட-இவரைத் தொட்டது கிடையாது. நீ காலையே பிடிச்சுட்டியே’ன்னாங்க. நான் ரொம்பப் பயந்து போயி, கோயிலுக்குள் நுழைந்தேன்
.
கோயிலுக்குள் மஹா பெரியவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டிருந்தார். தூரத்தில் நின்ன என்னை ‘வா’ன்னு சைகையால கூப்பிட்டார். ‘சாமி தெரியாமல் காலைப் பிடிச்சுட்டேன்’னேன். அதற்குப் பெரியவர் ‘ஏதோ பூர்வஜென்ம வாசம், என் காலைப் பிடிச்சுட்ட. பரவாயில்லை, என்ன பண்றே’ன்னு கேட்டார். ‘சினிமாவுல இருக்கேன்’ என்றேன். ‘அதனால என்ன? எங்க இருந்தாலும் ஒழுக்கமாக இரு’ என்று சொல்லி தமது கைகளை எனது கைகள் மீது வைத்து ஆசீர்வாதம் பண்ணினார். அன்றிலிருந்து இன்று வரை காமாட்சின்னு சொல்லும்போது, அந்த மஹா பெரியவர் என்னை ஆசீர்வதிக்கிறதா உணர்றேன்.“



