‘கடுக்காய் பிள்ளையார்’ குறித்து விளக்கின-பெரியவா
( கடுக்காய் எல்லாம் ஜாதிக்காயாக மாற்றி அருள் புரிந்த விநாயகர்)
. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் திருக்காரவாசல் 119-வது ஆலயமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான், ‘கடுக்காய் விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.
நன்றி-தினமலர்-ஒரு பகுதி
திருவாரூருக்குத் தெற்கில் உள்ள ஊர் திருக்காறாயில். இந்த ஊரில் விற்பனை செய்ய ஜாதிக்காய் மூடைகளை கொண்டு வந்தார் ஒரு வியாபாரி. சுங்கச் சாவடியில் ஜாதிக்காய்க்கு வரி விதிக்கும் நடைமுறை அப்போது இருந்தது. அதை தவிர்க்க எண்ணிய வியாபாரி, அதிகாரிகளிடம் ‘கடுக்காய் மூடைகள்’ என பொய் சொன்னார். இதற்காக வண்டியின் முன்னும், பின்னும் கடுக்காய் மூடைகளையும், நடுவில் ஜாதிக்காய் மூடைகளையும் அடுக்கியிருந்தார். சோதனை செய்த அதிகாரிகளும் அதைக் கண்டு ஏமாந்தனர். வியாபாரியும் மூடைகளுடன் ஊருக்குள் நுழைந்தார்.
இத்தலத்தில் உள்ள விநாயகர் தன் திருவிளையாடலைத் தொடங்கினார். சம்பந்தப்பட்டவர் திருந்தும் விதமாக இரவோடு இரவாக வேடிக்கை காட்டினார். வண்டியிலுள்ள ஜாதிக்காய் மூடை எல்லாம் கடுக்காயாக மாறின.
மறுநாள் காலையில் மூடைகளைப் பிரித்த போது அதிர்ந்து போனார். தவறை உணர்ந்தார். ”அப்பனே! விநாயகா! பணத்திற்கு ஆசைப்பட்டு வரிஏய்ப்பு செய்த என்னை மன்னிக்க வேண்டும்” என தோப்புக்கரணம் இட்டார். முன்பு போல கடுக்காய் எல்லாம் ஜாதிக்காயாக மாறினால், அதற்குரிய வரி, அபராதம் கட்டுவதாக ஒப்புக் கொண்டார். இரக்க சுபாவம் கொண்ட விநாயகரும் ஜாதிக்காயாக மாற்றி அருள்புரிந்தார். மனம் நெகிழ்ந்த வியாபாரி கண்ணீர் சிந்தினார். தவறு செய்தவரை திருத்திய இத்தல விநாயகர் ‘கடுக்காய்ப் பிள்ளையார்’ என பெயர் பெற்றார்.



