“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”
(‘மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம்’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அன்றைய தினம் நேரில் கண்டு உணர்ந்தேன்.)
சொன்னவர்-புலவர் ந.வேங்கடேசன்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(கட்டுரையில் ஒரு பகுதி)
நான் சென்ற ஒரு சோம வாரத்தில், சிதம்பரம் தீட்சிதர்கள்சிலர்வந்துகும்பாபிஷேகப்பத்திரிகையை சமர்ப்பித்து ஆசி கோரி நின்றார்கள்.
பெரியவாள் கும்பாபிஷேகப் பத்திரிகையைப் படித்தார்கள்.பத்திரிகையின் இறுதிப் பாராவில் சர்மகஷாயத்தால் திருமுழுக்குச் செய்யப்பெறும்’ என்ற வரி காணப்பட்டது.
“சர்மகஷாயம் என்றால் என்ன?” என்று பொதுவாக கேள்வியைக் கேட்டார், பெரியவர்
மடத்துத் தொண்டர்,’அது,தமிழ்ச் சொல்..’ என்று பதில்கூறினார்.(ஆழமாகத் தமிழ் படித்தவர் எவரும் இங்கு இல்லை-என்ற மறைமுகமான பதில் உள்ளே இருந்தது)
உடனே பெரியவர், “இங்கே தமிழ் படிச்சவா யாராவது இருக்காளா?” என்று கேட்டார்.
நண்பர்கள் என்னை முன்னுக்குத் தள்ளி, ‘இதோ இருக்கிறார்’ என்றார்கள்.
அப்போது மகாசுவாமிகள் என்னை விளித்துக் கூறிய சொல், என்னை சிலிர்க்க வைத்தது.
“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”
‘சுவாமி, அது வடமொழிச் சொல், நான் பொருள் அறியேன்”
“அது சம்ஸ்கிருதச் சொல்தான். அந்தக் கஷாயம் எப்படிச் செய்கிறார்கள்?…
தொடர்ந்து பெரியவா; ‘பால்துளிர்க்கும் மரங்களின் பட்டைகளைச் சேகரித்து,இடித்து, தண்ணீரில் போட்டு, ஒரு மண்டலம் நன்றாக ஊற வைப்பார்கள். அந்த கஷாயத்தைக் கலசங்களில் நிரப்பி, வேதிகையில் வைத்து, ஒவ்வொரு கால வழிபாட்டிலும் பூஜிப்பார்கள். அந்த மரப்பட்டைக் கஷாயத்தைக் கொண்டு,சில மூர்த்தங்களையும், கும்பங்களையும் அபிஷேகம் செய்வார்கள்….”
ஒவ்வொரு வாக்கியத்திலும் இடைவெளி விட்டு, பாலகரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பெரியவர் விளக்கிய தன்மையை என்னென்று சொல்வது!
“பால் துளிர்க்கும் மரம் என்றால்,தெரியுமோ?…
ஆலமரம்,அரசமரம்,அத்தி,பலா…இதெல்லாம்!” என்று மேலும் விளக்கினார்கள்.
‘மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம்’ என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
அன்றைய தினம் நேரில் கண்டு உணர்ந்தேன்



