” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா”
(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)…பெரியவா.
(பெண்ணின் மானம் காத்த கலியுக கண்ணனா பெரியவா)
சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
மறு தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
கர்நாடகம் – மகாராஷ்டிரம் எல்லைப் பகுதியில் யாத்திரை செய்து கொண்டிருந்தோம். ராமதுர்க என்ற ஊரின் அருகில்,வெள்ளம் பெருகி ஓடிக்கொண்டிருந்த ஒரு நதியில் ஆனந்தமாக நீராடினோம். பெரியவாள் நதிக்கரையில் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு ஜப-அனுஷ்டானங்களை செய்யத் தொடங்கினார்கள்.
அனுஷ்டானம் முடிந்து எழுந்திருந்ததும், தன் அருகிலிருந்த இரண்டு சிஷ்யர்களைக் கூப்பிட்டு, “உங்கள் மேல்துண்டுகளை கீழே போடுங்கள்” என்றார்கள்.
மிகவும் புதுமையான உத்திரவு!
ஆனாலும் நிறைவேற்றப்பட வேண்டிய உத்தரவு.
பெரியவா, சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மக்கள் நடமாட்டமே இல்லாத அந்தப் பகுதியில் ஒரு சிறுவன் காணப்பட்டான். ஏழெட்டு வயது இருக்கும். பெரியவா அவனை அருகில் அழைத்தார்கள்.
அந்த நதி, மேற்கிலிருந்து கிழக்காக ஓடிக் கொண்டிருந்தது, இருகரைகளையும் தொட்டுக்கொண்டு, அசாத்திய வெள்ளம். சுழித்து சுழித்திக் கொண்டு படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
பெரியவா, அந்தச் சிறுவனிடம் கன்னடத்தில் சொன்னார்கள்;
” இ இரடு பட்டகளை ஹத்ர நதி ஓரதல்லி இதாளே, அந்த யங்குஸ்தர்கிட்டே கொடப்பா”(இந்த இரண்டு வஸ்திரங்களையும் ஆற்றோரம் உட்கார்ந்திருக்கும் பெண்ணிடம் கொடு)
அந்தச் சிறுவன், இரண்டு மேல் துண்டுகளையும் எடுத்துக் கொண்டு, மேற்கு நோக்கிச் சென்று,கழுத்தை மட்டும் வெளியே வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தான்.
அந்தப் பெண்,அரைமணிக்கு மேலாகவே உடல் முழுவதையும் தண்ணீரில் மறைத்துக்கொண்டு, ஆற்றோரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.!
ஆமாம், வெள்ள வேகத்தில்,கட்டியிருந்த ஆடைகள் போயே போய்விட்டன. வெட்கம். எப்படி வெளியே வருவது” எப்படி வீட்டுக்குப் போவது? படிப்பறியா மக்கள்தான் என்றாலும் பண்பாடு மறக்கவில்லையே?
‘இந்த சனங்களெல்லாம் எப்பத்தான் போய்த் தொலைவாங்களோ?’ என்று ஸ்ரீமடம் சிப்பந்திகளைப் பார்த்து அந்தப் பெண் நொந்து போயிருக்கக் கூடும்.
ஆனால், யாத்திரைக் குழுவினரின் பார்வை, நூறு அடிக்கு அப்பால் செல்லவில்லை; செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.’
இந்த இக்கட்டான சூழ்நிலை பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது? தொலை நோக்கு (அல்லது, தலை நோக்குப்) பார்வை என்பது இது தானோ?
அரண்மனைவாசியான திரௌபதி, கண்ணனைக் கேட்டு பெற்றாள் ஆடை. இந்தக் கிராமவாசிக்கு மகாசுவாமிகள் தானே வழங்கினார் ஆடை.
அந்தப் பெண்,மேல்துண்டுகளை உடம்பில் சுற்றிக்கொண்டு அங்கிருந்தபடியே ஒரு கும்பிடு போட்டு விட்டு, வீட்டை நோக்கி ஓடிப்போனாள்.
யாத்திரை கோஷ்டி நதி ஓரமாகவே கிழக்கு நோக்கி நகர்ந்தது.
ஆற்றில், வெள்ளம் இன்னும் வடியவில்லை



