“எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!”
(பெரியவாளைப் பார்த்து ஓர் இஸ்லாமியர்)
(இது போன்ற நிகழ்ச்சிகள்,பெரியவா பரமாத்மா என்பதற்கு சாட்சியாகின்றன.)
சொன்னவர்-எஸ்.கணேச சர்மா
புத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்
மறு தட்டச்சு-வரகூரான் நாராயணன்
பெரியவா ஒரு முறை கரம்பக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் போனார். ஒரு கிழவர் அவர் பின்னாலேயே ஓடிவந்தார். நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியவா அவருக்காகவே நின்றார்
. அவரும் பழம், புஷ்பங்களை பெரியவா காலடியில் வைத்து தரிசனம் செய்தார்.
அவர் கரம்பக்குடியைச் சேர்ந்தவரென்று தெரிந்ததும் பெரியவா, ” நான் இத்தனை நாள் அங்கேதானே இருந்தேன்.அங்கேயே பார்த்திருக்கலாமே! எதற்கு இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டு என் பின்னால் வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு அவர்,”நான் அங்கேயும் பார்த்தேன் .அதனால்தான் உங்களைப் பிரிய மனமில்லாமல் ஓடி வரேன்” என்றார்.
‘இப்படிச் சொன்ன பெரியவர், ஓர் இஸ்லாமியர்!’
மேலும் அந்த இஸ்லாமியர், “என்னையும் மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்; எதைச் சொன்னாலும் செய்வேன் உங்கள் அருகிலேயே இருக்க ஆசைப்படுகிறேன்!”என்றார்.
சிரித்தபடியே பெரியவா,”உனக்கு என்னைப் பார்த்துக்- கொண்டே இருக்கணும்ணு தோணித்து என்றால் நீ இருக்கும் இடத்திலேயே இருந்து என்னை நினைத்துக்கொள். உன் நினைவில் நான் வந்தால் உன்னோடு இருப்பது போல்தானே! அதற்காக மடத்திலெல்லாம் சேரவேண்டாம்!” என்றார்.
பெரியவருக்குக் கண்ணீர் பெரிகியது.
“எங்கள் மதத்தில் அல்லாவுக்கு உருவம் சொல்லவில்லை. அவர் இப்படித்தான் உங்களைப் போல் இருப்பாரென்று நினைக்கிறேன்!” என்றாராம்
இது போன்ற நிகழ்ச்சிகள்,பெரியவா பரமாத்மா என்பதற்கு சாட்சியாகின்றன.



