
சிவபெருமானை பல வடிவங்களில் வணங்கி வந்தனர் நம் முன்னோர்கள். லிங்க வடிவம் அவற்றில் முக்கியமானது. இறைவன் உருவமாகவும் அருவமாகவும் இருந்து உலகைக் காக்கிறான். ஞானம், ஐஸ்வர்யம், சக்தி, கீர்த்தி முதலானவைகளைத் தந்தருள்கிறான். அப்படி, சிவபெருமானின் உருவத் திருமேனிகளில் போற்றிக் கொண்டாடப்படும் ஒன்றாக விளங்குவதுதான் தட்சிணாமூர்த்தி திருவடிவம்.
கைலாச நாதனான சிவபிரான் கைலாயத்தில் எழில் மிகுந்த அரியணையில், அழகான மண்டபத்தின் நடுவில் வீற்றிருக்கிறார். சிவபெருமானை தரிசித்து அருள் பெறவேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்டு, பிரம்மதேவனின் குமாரர்களாகிய சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் கைலயங்கிரிக்கு வருகிறார்கள். திருக்கைலாயத்தின் ஓர் ஓரத்தில் எவ்விதத் தொந்தரவுகளுக்கும் உட்படாத வகையில் தனியாக, அழகுற அமைக்கப்பெற்ற பர்ணசாலையில் அன்னை பார்வதிதேவி தவம் இயற்றுகின்றார்.
அன்னையைத் தரிசித்து அனுமதி பெற்று, பிறகே அப்பனை தரிசிக்கச் செல்லவேண்டும் என்பது மரபு. எனவே சனகாதியர் நால்வரும் அன்னை பார்வதிதேவியை வணங்கி அனுமதிபெற்று பிறகு நந்தி தேவரை வணங்கி நிற்கிறார்கள். அவரின் அனுமதி பெற்று, கைலாச நாதனை தரிசிக்கச் செல்கிறார்கள். சிவபிரானின் திருமுன்பு நின்று வணங்கி, கண்களில் பக்தி மேலீட்டால் நீர் பெருக, தொழுத கைகளுடன் துதித்து நின்றார்கள்.

பின் சிவபிரானின் திருவடிகளைப் போற்றி வணங்கி, பிரானிடம், பல கற்றும் தெளிவு பிறக்கவில்லை ஆதலால், உண்மையை நாங்கள் உணரும்பொருட்டு எங்களுக்கு தகுந்த உபதேசம் நல்க வேண்டும்; எங்களுக்கு தெளிவு பிறக்க வழி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். சிவபெருமான் அவர்களின் வேண்டுகோளைச் செவிமடுத்து, மனமிரங்கி அவர்களுக்கு உபதேசம் செய்யும்படியாக, குருவடிவாக எழுந்தருளினார். அப்படி எழுந்தருளிய காட்சியே, தட்சிணாமூர்த்தி திருவுருவம்.
சிவபெருமான் போகம், யோகம், வேகம் என மூன்று வடிவங்களைத் தாங்கி, அன்பர்களுக்கு அருள்புரிகிறார். அவற்றில் யோக வடிவாகக் காட்சி தந்து, யோகத்தின் தன்மைகளை அன்பர்களுக்கு வழங்கி, யோகம் புரிவதற்குரிய ஞானத்தைத் தந்து, யோகத்தை உபதேசிக்கும் கோலம்தான் தட்சிணாமூர்த்தி கோலம்.
தட்சிணம் என்றால் தெற்கு. தென்முகமாய் அமர்ந்து, காட்சி தருவதால் இவரைத் தென்முகக் கடவுள் என்கிறார்கள்.திருத்தலங்களுக்கும் கோயில்களுக்கும் பெயர்பெற்ற தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில், இந்தத் தென்முகக் கடவுளுக்கும் உரிய சிறப்பினைத் தந்திருக்கிறார்கள்.
நாம் சிவாலயங்களில் சிவபெருமானின் மூலஸ்தான சன்னிதியைச் சுற்றிலும் தேவ கோஷ்ட மாடங்களில் மூன்று விதமாக விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்தப் பிரதிஷ்டையானது, கருவறைக்கு வெளியில் தென் திசையிலிருந்து தொடங்கி மேற்கு வடக்கு திசைகள் என மூன்று புறங்களிலும் மூன்று விதமாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.

1. தலத்தின் விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை என்ற முறையில்…
2. தலத்தின் விநாயகர், நடராஜர், தட்சிணார்மூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரமன், கங்காவிசர்ஜனர், துர்க்கை என்ற முறையில்…
3. அகத்தியர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு அல்லது யோக சிவன், பிரமன், துர்க்கை என்ற முறையில் இந்த அமைப்பு காணப்படுகிறது.
தட்சிணாமூர்த்திப் பெருமான் இந்த வகையில் கோஷ்ட தெய்வமாக வழிபடப்படுகிறார். சிவாலயங்களின் மூலஸ்தான சன்னிதியின் தெற்கு பிராகார வலத்தின்போது, தென்புற சன்னிதி கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி திருவுருவை நாம் சிவாலயங்களில் தரிசிக்கின்றோம்.தட்சிணாமூர்த்தியின் சன்னிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முகமாக, சில தலங்களில் பெருமான் திரு முன்பு சுற்றிலும் தூண்கள் நிறுத்தப்பட்டு, தனி சன்னிதியாகக் காணும் வகையில் மண்டபம் போல் எழுப்பியிருப்பார்கள்.
ஞானமே வடிவாக அமர்ந்து, யோகத்தைத் தந்தருளும் தட்சிணா மூர்த்தி திருவுருவை, கற்சிற்பங்களாகவும், சுதைச் சிற்பங்களாகவும், கோபுரங்களிலும் சன்னிதிகளிலும் நாம் தரிசிக்கலாம்.
இந்த தட்சிணாமூர்த்திப் பெருமான், கல்லால மரத்தின் நிழலில் எழில் மிகுந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக வேத ஆகம புராணப் பாக்கள் கூறுகின்றன…
தட்சிணாமூர்த்திப் பெருமான், கல்லால மரத்தின் கீழ் வீராசனம் கொண்டு அமர்ந்துள்ளார். சனகாதியர் நால்வருக்கு உபதேசம் செய்யும் முகமாக யோகத்தில் வீற்றிருக்கிறார். இவருக்கு நான்கு கரங்கள். பின் கரங்களில் அக்னியும், உடுக்கையும் இணைந்த சர்ப்பமும் இருக்கும். முன் இடக்கரத்தில் வேதச் சுவடி இருக்கும்.
அப்படி இல்லையென்றால், கரம் கீழ் நோக்கிக் காணப்படும். முன் வலக்கரம், சின்முத்திரையைக் கொண்டு விளங்கும். இப்பெருமானுக்கு யோகிக்குரிய அனைத்து லட்சணங்களும் பொருந்த எழுந்தருள்கிறார். சில தலங்களில் மிருகங்களும் பறவைகளும்கூட காணப்படுகின்றன. சில தலங்களில் முனிவர்களின் கூட்டமும் காணப்படுகின்றன.

மான முனிவோர் அதிசயிப்ப வடநீழல்
மோன வடிவாகிய முதற்குரவன் எண்ணான்கு
ஊனமில் இலக்கண உறுப்பு அகவை நானான்கு
ஆன ஒரு காளை மறையோன் வடிவமாகி… – என்று காட்டுவதன் மூலம் தட்சிணாமூர்த்திப் பெருமானின் தத்துவத்தை நாம் அறிகிறோம்.
முனிவர்கள் அதிசயிக்கும் வண்ணம், வட ஆலமரத்தின் நிழலின்கீழ், மோன வடிவம் தாங்கி, குருநாதன் உருவில் வீற்றிருக்கும் பிரான், எண்ணான்கு.. அதாவது முப்பத்திரண்டு சாமுத்திரிகா லட்சணங்களும் கொண்ட, நானான்கு … அதாவது பதினாறே வயது நிரம்பிய காளை போன்ற இளைய உருவமுடையவனாய், அந்தண உருக்கொண்டு விளங்குகிறான்…. என்று காட்டுவதன் மூலம் தட்சிணாமூர்த்தி உருவின் எழிலை மனத்தில் தரிசிக்கலாம்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்க முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்தபூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனைஇருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்…
– என்று இந்தப் பாடலில் பரஞ்சோதி முனிவர் தட்சிணாமூர்த்திப் பெருமானின் திருவடிவை விளக்குகிறார்…
இப்படி தட்சிணாமூர்த்திப் பெருமான் கோஷ்ட தெய்வமாக மட்டும் இல்லாமல், சில தலங்களில் தனியாக சந்நிதி கொண்டு, தலத்துக்கே சிறப்பு சேர்க்கிறார்.