
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ரங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில், இராப்பத்து பத்து ஒன்றாம் திருநாளான இன்று (6.1.2020), நம்பெருமாள் விருச்சிக லக்கினத்தில் புறப்பாடாகி, பரமபத வாசலை கடந்து திருகொட்டகையில் பிரவேசம் கண்டருளினார்.

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருவரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 26ஆம் தேதி இரவு திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 27ஆம் தேதி முதல் பகல்பத்து உத்ஸவம் நடைபெற்று வந்தது. திருமொழித் திருநாள் நிறைவு நாள் அன்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலித்தார். இன்று வைகுண்ட ஏகாதசி தொடங்கி திருவாய்மொழித் திருநாள் உத்ஸவம் நடைபெறுகிறது.

பகல்பத்து உத்ஸவத்தின் கடைசிநாளான நேற்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் ஸேவை சாதித்தார். பின்னர் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவில் அர்ச்சுன மண்டபத்தில் மாலை வரை ஸேவை சாதித்தார். மாலை 5 மணிக்கு மேல் கருட மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் கண்டருளினார்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, இன்று காலை, 4.45 மணிக்கு நடந்தது. இதற்காக இன்று அதிகாலை 3.30 மணிக்கு ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட ஆபரணங்கள் அணிந்து கருவறை உள்ளிருந்து புறப்பாடு கண்டருளினார் நம்பெருமாள்.

பின் இரண்டாம் பிராகாரம் வழியே நாழிகோட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிராகாரத்துக்கு நம்பெருமாள் வந்தார். அங்கிருந்து துரைபிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்து காலை சரியாக 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன்வழியாக பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை நம்பெருமாள் கடந்து வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா, ரங்கா கோஷம் எழுப்பினர்.

பின்னர் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரம் கால் மண்டபம் அருகே உள்ள திருக்கொட்டகைக்கு நம்பெருமாள் எழுந்தருளினார்

அங்கு ஒரு மணிநேரம் பக்தர்களுக்கு சேவை சாதித்த பின் சாதரா மரியாதை ஆகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் நகரே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. நேற்று மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர்.

பரமபதவாசல் திறப்பை முன்னிட்டு அரங்கநாதர் கோவில் ராஜகோபுரத்துக்கு 216 அடி உயர மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.











