
காஞ்சி மகானின் அருள் மொழி வடமாநிலங்களில் ஒலிக்கும்
தமிழகத்தில் தோன்றி உலகளவில் போற்றப்பட்ட காஞ்சி மகானின் வாழ்க்கை சரித்திர ஓவிய கண்காட்சி சென்னையில் தொடங்க இருக்கிறது. தமிழ் மக்களால் அன்புடன் பெரியவர் என்று போற்றப்பட்ட காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஓவிய கண்காட்சியை , வருகிற செவ்வாய் , ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் ஜி பாகவத் திறந்து வைக்கின்றார். தவத்திரு ஓம்காரானந்தா ஸ்வாமிகள் கலந்து கொள்கிறார்.
சாமானியர்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காக உயர்ந்த தத்துவங்களை இனிய தமிழில் எளிய நடையில் எடுத்துரைத்த அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ ஹிந்தியில் வெளியிடப்படுகிறது!
ஆங்கிலம், மராட்டி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏற்கெனவே இந்த பள்ளியை நடத்தும் ட்ருஸ்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சி மஹாசுவாமிகள் அபார திறமை பெற்றிருந்தார். அவர் இசைத்துறைக்கு சென்றிருந்தால் சிறந்த இசைக் கலைஞர் ஆகியிருப்பார். அவர் அறிவியல் படிக்க சென்றிருந்தால் சிறந்த விஞ்ஞானி ஆகியிருப்பார்.

ஆனால் அனைத்து திறமைகளையும் நம் தர்மத்திற்காகவும் சாமான்ய மக்கள் முதல் அனைவரின் நண்மைக்காகவும் அர்ப்பணித்த அவரது தவ வாழ்கையின் அம்சங்கள் ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன..
நம் நாட்டினை நடந்தே வலம் வந்து, கடுமையான சூழ்நிலையில் காஞ்சி மடத்தை நிர்வகித்து அதன் மூலம் பல தொண்டு வேலைகள் தொடங்கியது போன்றவை 56 ஓவியங்களாக சித்திரிக்கப்பட்டுள்ளன.
காஞ்சி மடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். எளிய தமிழில் அனைத்து சம்ஸ்கிருத வேதாந்த பாடங்களை கற்று தரும் தவத்திரு ஸ்வாமி ஓம்காரானந்தா கலந்து கொள்வது மற்றொரு சிறப்பான அம்சமாகும்.
திரு ஆர் ஏ சங்கர நாராயணன் , M.D & CEO , கனரா வங்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஹிந்தி மொழியில் தெய்வத்தின் குரல் வெளிவருவது காஞ்சி மகானின் அற்புத சிந்தனைகளை வட மாநிலத்தவர்கள் படித்து பயன் பெறுவார்கள் என்பது தமிழ் மக்களுக்கு பெருமையும் ஆனந்தமும் தருகிறது!