செந்நெல்லரிசி, மாவடு, கீரை அமுது செய்வித்த அரிவாட்டாய நாயனார்!

Published:

arivattayanayanar - 2026

சேக்கிழார் அருளிய பெரியபுராணம்: எம்பிரான் அரிவாட்டாய நாயனார் [12/13/17-21 – 06/02/20]
குறிப்பு: இன்று “தைமாதம் – திருவாதிரை” நாள், எம்பிரான் அரிவாட்டாய நாயனார் திருநட்சத்திரம்

திருத்துறை பூண்டிக்கு அருகே தண்டலை நீள்நெறி என்னும் தலத்து இறைவருக்கு நாளும் செந்நெல் அரிசியும் மாவடுவும் கீரையும் அமுது செய்விக்கும் திருத்தொண்டு செய்விக்கும் விரதம் பூண்டவர் இந்நாயனார்

அவருக்கு இறைவன் அருளால் வறுமை வந்து எய்திய காலத்தே “அரிதினில் பெற்ற செந்நெல் அரிசியும் மாவடுவும்” கோயிலுக்கு கொண்டு செல்லும் வழியில் நாயனார் கால் இடறி விழ, நிலத்தின் வெடிப்பில் கொட்டி வீணானது

ஆதலால் இறைவனுக்கு திருவமுது செய்ய இயலவில்லையே, என்று அரிவாளால் தன் முதுகு தண்டு வரை அறுபடுமாறு கழுத்தினை அரிந்து உயிர்விட துணிந்தனர் நாயனார்

அந்நிலையில் வெடுப்பில் இருந்து “இறைவனது கரம் தோன்றி நாயனாரது கரத்தினை பற்றியதுடன், மாவடுவினை தாம் அமுது செய்தமையை நாயனார் அறியும் வண்ணம் “விடேல் விடேல்” என்று மாவடு கடிபடும் ஓசையும் கேட்பித்தார் இறைவர்

அது பற்றி மகிழ்ந்த நாயனாரையும் அவரது நன்னுதல் மனைவியாரையும் எம்பெரும் உலகத்திற்கு வருக என்று அழைத்துச் சென்று முத்தியருளினர் இறைவர்,

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இறைவனது திருக்கரங்களால் தீண்டப்பெற்ற சில நாயன்மார்களில் இவரும் ஒருவர் என்பது அறிந்து இன்புறத் தக்கதாம், இக்காட்சிகளை காட்டும் பாடல்கள் இவை

பாடல்

ஆட்கொள்ளும் ஐயர் தாமிங்கு அமுது செய்திலர் கொலென்னாப்
பூட்டிய அரிவாள் பற்றிப் 
புரையற விரவும் அன்பு
காட்டிய நெறியின் உள்ளந் தண்டறக் கழுத்தினோடே 
ஊட்டியும் அரியா நின்றார் 
உறுபிறப்பு அரிவார் ஒத்தார்.

மாசறு சிந்தை அன்பர் 
கழுத்தரி அரிவாள் பற்றும்
ஆசில் வண் கையை மாற்ற்அம்பலத்து ஆடுமையர்
வீசிய செய்ய கையும் 
மாவடு விடேல்வ விடேலென்று ஓசையுங் கமரின் நின்றும் 
ஒக்கவே எழுந்த அன்றே

திருக்கை சென்று அரிவாள் பற்றுந் 
திண்கையைப் பிடித்த போது வெருக்கொடங்கு ஊறு நீங்க 
வெவ்வினை விட்டு நீங்கிப்
பெருக்கவே மகிழ்ச்சி நீடத் 
தம்பிரான் பேணித் தந்த
அருட்பெருங் கருணை நோக்கி அஞ்சலி கூப்பி நின்று.

அடியனேன் அறிவிலாமை 
கண்டும் என்னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங்கு அமுதுசெய் பரனே போற்றி!!
துடியிடை பாக மான 
தூயநற் சோதி போற்றி!!
பொடியணி பவள மேனிப் 
புரிசடைப் புராண போற்றி!!

என்றவர் போற்றி செய்ய 
இடப வாகனராய்த் தோன்றி 
நன்றுாநீ புரிந்த செய்கை 
நன்னுதல் உடனே கூட
என்றும் நம் உலகில் வாழ்வாய் 
என்றவர் உடனே நண்ண
மன்றுளே ஆடும் ஐயர் 
மழவிடை உகைத்துச் சென்றார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

பொருள்

என்னை ஆட்கொள்ளும் பெருமானார் இன்று அமுது செய்திடப் பெற்றிலரே! என்று, கழுத்தில் பூட்டிய அரிவாளினைக் கையால் பிடித்துத் தம்மிடம் உள்ள குற்றம் அற்ற அன்பு இது எனக் காட்டிய அந்நெறியில், உள்ளிருந்த முதுகெலும்புத் தண்டு கழுத்தினோடு அறுந்திட அரிந்து நின்றார்; இதனால் தமக்கு உற்ற பிறப்பினை அரிந்திடும் தன்மை உடையர் போன்றார்.

குற்றம் அற்ற சிந்தையுடைய அன்பர், தமது கழுத்தை அரிந்திட, அரிவாளைப் பிடிக்கும் குற்றம் இலாத அக் கையைத் தடுத்து மாற்றிட, அம்பலத்து ஆடும் பெருமானது வீசி நின்றாடிய இடத் திருக்கையும், மாவடுவைக் கடித்திடும்போது விடேல் விடேல் என்று எழும் ஓசையும் அங்குள்ள நிலவெடிப் பினின்றும் ஒருங்கு எழுந்தன

இறைவனின் திருக்கை சென்று, தாயனாருடைய அரிவாளைப் பிடித்திடும் திண்ணிய கையினைப் பற்றும்போது, அவர் அற்புதம் உற, வாள்பட்டதால் அவருடைய கழுத்தில் ஏற்பட்ட புண் நீங்க, அவரிடத்திருந்த கொடிய வினையும் நீங்க, பெருகும்படியான மகிழ்ச்சி நீடித்திட, தம் பெருமான் தமக்காக அருளிய பெருங் கருணையினைத் தாயனார் நேரில் கண்டு தாம் தம் கைகளைக் கூப்பி நின்று

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

அடியேனின் அறிவிலாமை கண்டும், என் அடிமை வேண்டி, இந்நிலத்தின் கண் உள்ள வெடிப்பில் வந்து, இங்குச் சிந்திய அமுதினை உண்டருளிய செல்வனே! வணக்கம். உடுக்குப் போன்ற சிறிய இடையையுடைய உமையம்மையாரை ஒரு மருங்கில் கொண்ட தூய நல்ல பேரொளியே! வணக்கம். நீறணிந்த பவளம் போன்ற திருமேனியையும் முறுக்கிய மென்மையான சடையையு முடைய முன்னைப் பழம் பொருட்கும் முன்னவனே! வணக்கம்

என்று அவர் போற்றி வணங்க அவர்முன், ஆனேற்றின்மீது தோன்றியருளி, நீபுரிந்த செயல் நன்று. நல்ல நெற்றியினையுடைய உனது மனைவியுடன் என்றும் நீங்காது நமது உலகில் வாழ்வாயாக என அருள் புரிந்து, அவரும் தம்முடன் வந்திடத் திருமன்றுள் ஆடியருளும் முதல்வனாய பெருமானும் அறக்கடவுளாம் ஆனேற்றின் மீது எழுந்தருளிச் சென்றார்.

Related articles

Recent articles

spot_img