29-03-2023 10:14 AM
More
  Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்தை புனர்பூசம்: ஸ்ரீராமானுஜரின் இளவல் எம்பாரின் 995வது திருநட்சத்திரம்!

  To Read in other Indian Languages…

  தை புனர்பூசம்: ஸ்ரீராமானுஜரின் இளவல் எம்பாரின் 995வது திருநட்சத்திரம்!

  embar temple - Dhinasari Tamil

  இன்று.. 07/02/2020,தை புனர்பூசம், ஸ்ரீ எம்பார் ஸ்வாமியின் 995ஆவது திருநட்சித்திரம். இவர் ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் உள்ள மழலைமங்கத்தில் -தற்போது-மதுரமங்கலம்.(சுங்குவார்சத்திரம்)அவதரித்தார்.

  கோவிந்த பட்டர் என்னும் இயற்பெயருடைய இவர் ஸ்ரீராமாநுஜருடைய சித்தியின் புத்திரர். அங்கு எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீவைகுண்டநாதப் பெருமாள் சந்நிதியில் இவர் தகப்பனாருடன் சேர்ந்து திருவாராதனம் செய்து வந்தார். சிறுவயதிலேயே ராமானுஜரின் தேஜஸால் ஈர்க்கப்பட்டு, அவருடன் இருந்தார்.இருவரும் யாதவப்பிரகாசரின் வேதபாட சாலையில்பயின்றனர் .

  ஸ்வாமி தனியன்: (பராசர பட்டர் இயற்றியது)

  “ராமாநுஜ பதச்சாயா, கோவிந்தாஹ்வா அனபாயிநி,
  ததாயத்த ஸ்வரூபா ஸா ஜீயான்,மத் விஸ்ரமத்ஸலி”

  ‘ராமாநுஜரின் திருவடித்தாமரை நிழல் போல் பிரியாதவரும், அடியேன் துயரங்களை நீக்கி இளைப்பாற்றும் நிழலுமான கோவிந்தப் பெருமாளின் (எம்பார்) புகழ் ஓங்குக!”

  எம்பெருமானார் வைபவங்களும்,எம்பார் வைபவங்களும் மிகஅற்புதத் தொடர்புடை யவை; அவற்றை அனுபவிப்போம்:

  1.ராமாநுஜரை ஆபத்திலிருந்து மீட்ட கோவிந்தர்!

  திருப்புட்குழியில் யாதவப் பிரகாசரின் வேத பாடசாலை யில் இருவரும் பயின்று வந்த காலத்தில், வித்யார்த்திகள் அனைவரும் காசி யாத்திரை சென்றனர்.அங்கு யாதவப் பிரகாசர் ராமானுஜரை கங்கையில் மூழ்கடித்துக் கொல்லத் திட்டமிட்டுள்ளார் என்பதை அறிந்த கோவிந்தர், ராமானுஜரை எச்சரித்துத், தப்பிச் சென்று விடும்படி கூறினார். அப்படியே ராமாநுஜர் விந்திய மலைக் காட்டுக்குள் சென்று, பேரருளாளர்,பெருந்தேவித்தாயாரால்(வேடன், வேடுவச்சி யாக வந்து) வழிகாட்டப்பட்டு காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டார்.

  2.”உள்ளங்கை கொணர்ந்த நாயனார்” ஆக மாறிய கோவிந்தர்!

  கோவிந்தர் யாதவப்பிரகாச ரோடும்,மற்றவர்களோடும் தொடர்ந்து யாத்திரை சென்றார்.யாதவப்பிரகாசர் போதித்த அத்வைத சித்தாந்த த்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஒரு முறை கங்கையில் முழுகி நீராடிய போது,கோவிந்தர் கையில்,ஒரு பாண சிவலிங்கம் அகப்பட்டது,மிக மகிழ்ந்த கோவிந்தர் அந்த லிங்கத்தை அப்படியே உள்ளங்கையில் வைத்து, மேலே கொண்டு வந்தார்.அனைவரும் அவரை சிவனருள் பெற்றவர் என்று கொண்டாடினர்;”உள்ளங்கை கொணர்ந்த நாயனார்”என்று போற்றினர்.இப்படியாக அவர் ஒரு சிவாசார்யார் ஆகி விட்டார், காளஹஸ்தி வந்து அங்குள்ள சிவன் கோவிலில் கைங்கர்யங்கள் செய்து வந்தார்.

  embar - Dhinasari Tamil

  3.நாயனாரைத் திருத்திப் பணிகொண்ட,உடையவர்.

  ஶ்ரீரங்கத்தில்,ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த ராமானுஜர்,கோவிந்தரை ஶ்ரீவைஷ்ணவத்துக்குக் கொண்டுவர விழைந்தார்.
  தங்கள் இருவரின் தாய்மாமா வும்,சிறந்த ஶ்ரீ வைஷ்ணவ ஆசார்யருமான பெரிய திருமலை நம்பிகளிடம் கோவிந்தரைத் திருத்திப் பணி கொள்ளுமாறு வேண்டினார்.

  திருமலை நம்பிகளுக்கும் அந்த சிந்தனை இருந்ததால், உடனே காளஹஸ்திக்கு சென்றார்; அங்கு குளக்கரையில் மலர் பறிக்கச் சென்று கொண்டிருந்த கோவிந்தரைக் கண்ட, நம்பிகள் அவரிடம் ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்னமாலை யிலிருந்து ஸ்லோகங்களை எடுத்துச் சொன்னார்.ஸ்தோத்ர ஸ்லோகங்கள் எழுதிய ஓலைச் சுவடியை அவர் கண்படும்படி அவர் வரும் வழியில் இட்டார். அதைப் பார்த்த கோவிந்தர் “ஸ்ரீவைஷ்ணவர்கள் பொருளை நழுவ விடலாமோ?”என்றார். நம்பிகள்”நாங்கள் எதையும்/யாரையும் நழுவ விட
  மாட்டோம்!!”என்றார்.கோவிந்தர் ஒன்றும் பேசாமல் சென்று விட்டார்.சில நாட்கள் கழித்து மீண்டும் காளஹஸ்திக்கு சில சீடர்களோடு சென்ற நம்பிகள் கோவிந்தர் வரும் வழியில், ஒரு ஓலைச்சுவடியில் , திருவாய்மொழிப் பாசுரம்:

  “தேவும்,எப்பொருளும் படைக்கப்
  பூவில் நான்முகனைப் படைத்த
  தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
  பூவும்,பூசனையும் தகுமோ?” (2-2-4) எழுதிப் போட்டார்.

  அதை எடுத்துப் படித்த கோவிந்தர் அங்கேயே போட்டுவிட்டுச் சென்று விட்டார், திரும்பி வரும்போது,மீண்டும் அதை எடுத்துப் படித்தார். நின்று சுற்று,முற்றும் பார்த்தார். சற்றுத் தொலைவில் ஒரு மரத்தடியில் நம்பிகள் காலட்சேபம் செய்து கொண்டி ருந்ததைக் கவனித்தார். மெல்ல அங்கு சென்று, பின்னால் நின்று செவி மடுத்தார். மேற்சொன்ன பாசுர வியாக்யானத்தைக் கேட்ட கோவிந்தர், ஒடிச் சென்று நம்பிகளின் திருவடிகளில் விழுந்தார். நம்பிகள் அவருக்கு மேலும்வேதம்,உபநிஷத்,பகவத்கீதை முதலியவற்றிலிருந்து பிரமாணங்களை எடுத்துக் கூறினார்.அவருடன் திருமலைக்கு அழைத்து வந்து, பஞ்ச சம்ஸ்காரம் செய்து, தம் சீடராக்கிக் கொண்டார்.

  திருமலையில் நம்பிகளுடன் இருந்து அவருக்கு எல்லாக் கைங்கர்யங்களையும் செய்து வந்தார்.
  (உள்ளங்கையில் கொணர்ந்த பாணலிங்கம் இன்றும் திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் உள்ள பாபஹரீஸ்வரர் கோவிலில், மூலவருக்கு அருகில் வைத்துப் பூஜை செய்யப்படுகிறது. அந்த ஊரில் எம்பார் ஸ்வாமிக்கும் (கோவிந்தர்)ஒரு தனிக் கோவில் உள்ளது.)

  4. ஆச்சர்யமாக, ஆசார்ய அபிமானத்தை வெளிக்காட்டிய கோவிந்தர்:

  கோவிந்தர் பெரிய திருமலை நம்பிகளிடம் கைங்கர்யம் செய்து வந்த காலத்தில், ஒவ்வோர் நாளும் இரவில் ஆசார்யருக்குப் படுக்கை விரித்துச் சரி செய்து வைப்பார். அந்தப் படுக்கையில் அவரே ஒருமுறை படுத்துப் புரண்டு எழுவார்.ஒரு நாள் இதைப் பார்த்து விட்ட ராமாநுஜர், திருமலை நம்பிகளிடம் கூற,நம்பிகள் அவரிடம், ஆச்சார்யருக்கு இட்ட படுக்கை யில் அவர் படுத்தது,பெரிய அபச்சாரமல்லவோ?ஏன் இப்படிச் செய்தீர் என்று கேட்டார்.அவர், இந்த அபச்சாரத்திற்குத், தமக்கு நரகம் தான் கிடைக்கும் என்ற தெரிந்திருந்தாலும்,படுக்கையில் ஏதாவது ஊசி,முள், குப்பை இருந்து அவை ஆசார்யர் திருமேனிக்கு வலி ஏற்படுத்துமே, என்றே தாம் படுக்கையில் முதலில் படுத்துப் பார்த்ததாகவும் கூறினார்!!

  5.ராமானுஜருக்கு, கோவிந்தரை ‘நாடு புகழும் பரிசாக’த் தந்த திருமலை நம்பிகள்:

  குருவுக்கு.சீடர் தட்சிணை தருவது போல,சிறந்த சீடருக்கு குருவும் பரிசு கொடுப்பார ல்லவா?திருமலை நம்பிகளிடம்
  ஶ்ரீராமாயணத்தை வெகு நன்றாகக் கற்றுத் தேர்ந்த ராமானுஜரிடம்,தாம் அவருக்கு எதேனும் பரிசு கொடுக்க விரும்புவதாகக் கூறினார் நம்பிகள்.உடனே ராமானுஜர் கோவிந்தரைத் தம்முடன் ஶ்ரீரங்கத்துக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டினார்.அவ்வாறே நம்பிகள் கோவிந்தரை அழைத்து,”கோவிந்தரே! நமக்கு எப்படிக் கைங்கர்யம் செய்தீரோ,அப்படியே எம்பெருமானாருக்கும் செய்து கொண்டிரும், உம்மை அவருக்குத் தானமாகக் கொடுத்தேன்”என்று ராமானுஜரோடு செல்லுமாறு பணித்தார்.

  அங்கிருந்து ஶ்ரீரங்கம் செல்லும் வழியில் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர்.கோவிந்தர் எதிலும் ஆர்வமில்லாமல்,மேனி இளைத்து, சோகத்துடனே இருந்தார்.இதைக் கவனித்த உடையவர்,அவரை திருமலை நம்பிகளின் பிரிவு வாட்டுகிறது என்பதை உணர்ந்தார்.உடனே அவரை திருமலை சென்று நம்பிகளுடன் சில காலம் இருந்து வருமாறு சொல்லி,
  துணைக்கு இரு சீடர்களையும் அனுப்பி வைத்தார்.

  கோவிந்தர் தாய்ப்பசுவிடம் செல்லும் கன்று போலத் துரிதமாகச் சென்றார். திருமலை சென்றதும்,நம்பி களின் திருமாளிகை முன்பு தணடனிட்டு நின்றார்,மற்ற இருவரும் சென்று நம்பிகளிடம் கோவிந்தர் வரவைத் தெரிவித்தனர். உள்ளே இருந்து கோபமாக “அந்தப் பைத்தியக் காரனை யார் இங்கே வரச்சொன்னது. போகச் சொல்லுங்கள்”என்றார்.

  நம்பிகளின் மனைவியார் அத்தனை தூரம் வந்திரு க்கும்,கோவிந்தருக்குப் பிரசாதம் கொடுத்து, நல்வார்த்தை கூறி அனுப்பலாமே என்று கூற நம்பிகள்”தானம் கொடுத்த மாட்டுக்குப் புல் இடுவார் உண்டோ?யாரிடம் கொடுத்தோமோ அவரே பராமரிக்கட்டும்.கொடுத்ததைத் திரும்பிப் பெறும் வழக்கம் ஶ்ரீவைஷ்ணவனிடம் கிடையாது”என்றார்.இதைக் கேட்டுப் புரிந்து கொண்ட, கோவிந்தர் மீண்டும் ஒரு முறை திருமாளிகை வாசலில் தண்டனிட்டுவிட்டு, உடனே திரும்பினார்.காஞ்சி வந்து எம்பெருமானாரிடம் நடந்ததைக் கூறினார்.உடையவர் திருமலை நம்பிகளின் மேதாவிலாசத்தை
  யும்,ஶ்ரீவைஷ்ணவ ஆதார ஞானத்தை எடுத்துக் காட்டியதையும்ஏற்று,கோவிந்தரைக் கண் குளிரக் கடாட்சித்து, அவருக்கு எல்லாமாக இருந்து நன்றாகத் திருத்திப் பணி கொண்டார்.

  embar2 - Dhinasari Tamil

  6..கோவிந்தரை”எம்பார்” ஆக்கிய ‘எம்பெருமானார்’!

  கோவிந்தபட்டருக்குத்திருமணம்ஆகியிருந்தாலும்,இல்லற வாழ்க்கை வாழவில்லை.அவர் திருத்தாயார் ராமானுஜரிடம் வந்து, தங்கள் வம்சம் வளர கோவிந்தனுக்குத் தகுந்த அறிவுரை வழங்குமாறு வேண்டினார்.ராமானுஜர் கோவிந்தரிடம் இரவில் மனைவியோடு தனியாக இருக்குமாறு அறிவுறுத்தி னார்.சரி என்று சென்ற கோவிந்தர் மறு நாள் வந்து ராமானுஜரிடம் அரஙகன் என்னும் பெரும்ஜோதி எப்பொழுதும் தம்முடன் இருப்பதால், இரவையும், தனிமையையும், என்றும் ஒரு நொடிப்பொழுதும், உணர வில்லை என்றும்,எனவே ஆசார்யர் அறிவுரைப்படி இருக்க முடியவில்லை என்றும் கூறினார். (எம்பாருக்கு இருளேதெரியாததாலும்,எங்கும் எப்போதும் ஒளியே தெரிந்ததால்,கண்பார்வைக் குறைபாடுள்ளவர்கள் எம்பாரை வணங்கினால் நன்மை அடைவார்கள் என்று ஐதீகம் உண்டு.மதுரமங்கலம் எம்பார் கோவில் ‘நேத்ர பரிகார ஸ்தலம்’என்று அழைக்கப்படுகிறது!)

  கோவிந்தரின் பக்தியையும், ஞானத்தையும் போற்றிய ராமானுஜர் அவருக்கு சந்யாசம் வழங்கிவிட்டார். சந்யாசியான அவருக்குத் தம் பெயரான ‘எம்பெருமானார்’என்னும் பெயரில் உள்ள முதல்/கடைசி ஒலிகளை வைத்து “எம்பார்” என்று பெயரிட்டார். கோவிந்தரின் மனைவியும் தம் கணவரின் மேன்மையைப் புரிந்து கொண்டு, சந்யாசியாகி ராமானுஜரின் மடத்தில் தொண்டராகிவிட்டார்!!

  7)எம்பார் காட்டிய, எல்லையற்ற ஜீவகாருண்யம்:

  ஒரு நாள் எம்பார் தோட்ட வழி யில், சென்று கொண்டிருந்த போது ஒரு பாம்பின் வாயில் முள் குத்தி,வலியால் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, அதன் வாய்க்குள் விரல்களை விட்டு முள்ளை எடுத்து விட்டு, பாம்பின் தலையை நீவி அதன் வழியில் அனுப்பினாராம். எதேச்சையாக இதைப் பார்த்த ராமாநுஜர்,பதறி,என்ன கார்யம் செய்தீர்? என்று வினவ,தாம் ஒரு சாதாரண வைஷ்ணவன் செய்வதைத் தான் செய்ததாகக் சொன்னார்.எந்த ஜீவராசியும் ஒரு சிறு துன்பமும்/துயரமும் அடைவதைப் பார்த்து, அதைத் தம் துன்பமாகக் கருதி,அதைப் போக்க வேண்டும் என்பதே வைஷ்ணவ லட்சணம் என்கிறது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம்!

  8) எம்பார் காட்டிய அபிநவ நைச்யானுஸந்தானம்:

  ஸ்ரீவைஷ்ணவத்தில் நைச்யானுஸந்தானம்
  (நைச்யம்) என்பது மிகத் தேவையான பண்பாகும். எந்த வைணவரும் தற்புகழ்ச்சி செய்யக்கூடாது;வேறு யாராவது இவரைப் புகழ்ந்து பேசினாலும்(உண்மையான காரணங்களுக்காகவே) இவர் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது.தாம் அதற்குச் சற்றும் தகுதியில்லாதவன் என்று அறுதியிடவேண்டும். ‘நீசன், நிறைவொன்றும் இலேன், பாவியேன்,பேயன், மந்தமதியேன், அறிவொன்றும் இலாதவன்’ என்று பலவாறாக ஆழ்வார்/ஆசார்யர்களே தங்களைப் பற்றி உரைத்திருக்கிறார்கள்.

  ஆனால் ஒரு நாள் எம்பார் காலட்சேபத்தில் சிலர் அவரைப் பற்றி, பலவாறாகப் புகழ்ந்து பேசினார்கள். அவர்கள் அவ்வாறு பேசப்பேச, இவர் அவற்றை ‘ஒக்கும், ஒக்கும் (சரி, மிகச்சரி!) என்று உகந்து ரசித்தாராம். இது எப்படிச் சரியாகும் என்று நினைத்த ஒருவர் ராமானுஜரிடம் இதைப் பற்றிச் சொல்ல, அவர் எம்பாரை அழைத்து விசாரித்தார்.

  எம்பார் “ஆம் ஸ்வாமி; அப்படித் தான் சொன்னேன். அடியேனுக்கு என்று, எந்தத் தகுதியும், ஞானமும், சொரூபமும் இல்லை. அடியேன் ஒரு அசத்துப்பொருள். அடியேனுக்கும் ஏதாவது இருந்தால் அவை அனைத்தும் தேவரீர் அளித்த அருட்கொடை. எனவே அடியேனைப் பற்றி சிலர் பேசியது அனைத்தும் தங்களைப் போற்றித்தானே ஆகும். அவை யாவும் தேவரீருக்கு உரித்தானவையே. எனவே அடியேன் அவற்றை உகந்து ஆதரித்தேன்”என்றார். இதைக் கேட்ட ராமாநுஜர் பேருவகை அடைந்தார்.

  9):பட்டரைப் பரிமளிக்க வைத்த பட்டர் (கோவிந்த):

  கூரத்தாழ்வானுக்குப் புத்திரர்கள் பிறந்த செய்தி கேட்டு, அவர்களைக் கடாட்சித்து, மங்களாசாசனம் செய்ய,
  உடையவர் தம் சீடர்கள் சிலருடன் ஆழ்வான் திருமாளி கைக்கு எழுந்தருளினார்.

  எம்பாரை உள்ளே சென்று குழந்தைகளை எடுத்து வருமாறு சொன்னார். எம்பார் இரண்டு குழந்தைகளையும் அணைத்து எடுத்துக் கொண்டு வந்தார். அவர்களைக் கடாட்சித்த உடையவர் “என்ன எம்பாரே? இவர்களிடம் துவய மந்திரம் பரிமளிக்கிறதே”என்றார்.

  எம்பார், குழந்தைகளுக்குக் கண்ணெச்சில்(திருஷ்டி) பட்டுவிடக் கூடாது என்று அவர்களிடம் துவய மந்திரம் அனுஸந்தானம் செய்து கொண்டே வந்ததாகக் கூறினார். அவரிடம் துவயம் செவியுற்றதால், அவரையே அவர்களுக்கு, ஆசார்யராக நியமித்தார். (குழந்தைகளின் திருத்தகப்பனார் கூரத்தாழ்வானே மிகச் ச்ரேஷ்டமான ஆசார்யர்; எனவே அவர்தான் முறைப்படி அவர்களுக்கு ஆசார்யராக இருந்திருக்க வேண்டும்!). அந்தத் திவ்யக் குழந்தைகளே சீர்மிகு ‘பராசர பட்டர்,வேதவியாச பட்டர்’ என்னும் ஆசார்யர்கள்.

  எம்பெருமானாருக்குப் பின், எம்பார் சிறிது காலம், ஸ்ரீவைஷ்ணவ பீடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். எம்பார் காலத்துக்குப் பின், பராசரபட்டர் அந்தப் பீடத்தை அலங்கரித்தார்.

  10. எம்பார்,எம்பெருமானார் வடிவழகைப் பாடிய பிரசித்தமான பாடல்:(அவயவப் பிரபாவம்):

  “பற்பமெனத் திகழ் பைங்கழல், உந்தன் பல்லவமே விரலும்,
  பாவனமாகிய பைந்துவராடை பதித்த மருங்கழகும்,
  முப்புரி நூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல் தன்னழகும், 
  முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலா அழகும், 
  கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலக் கண்ணழகும்,
  காரிசுதன் கழல் சூடிய முடியும், கனநற்சிகை முடியும் 
  எப்பொழுதும் எதிராசன் வடிவழகென் இதயத்துளதால் 
  இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிரே!”

  எதிராசர் வடிவழகை நம் இதயத்தில் நிலை நிறுத்திய, எம்பாரின் ஒளி படைத்த கடாட்சமும் சேர்வதால் நாமும் உரக்கச் பாடுவோம்:

  “இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!”

  • பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  thirteen − eleven =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Most Popular

  மக்கள் பேசிக்கிறாங்க

  ஆன்மிகம்..!

  Follow Dhinasari on Social Media

  19,033FansLike
  388FollowersFollow
  83FollowersFollow
  74FollowersFollow
  4,634FollowersFollow
  17,300SubscribersSubscribe

  சமையல் புதிது..!

  COMPLAINT BOX | புகார் பெட்டி :

  Cinema / Entertainment

  நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

  நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

  லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

  திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

  கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

  அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

  7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

  7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

  Latest News : Read Now...