சென்னை, மயிலாப்பூரில் உள்ள பாடல் பெற்ற தலமான ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய, தற்போது பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை நகரின் பிரதான இடத்தில் இருப்பதால், கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். மேலும், அருகில் ஷாப்பிங் மால்கள், மெரீனா கடற்கரை என பொழுது போக்கு அம்சங்கள் அதிகம் இருப்பதால், இவற்றுக்கு வரும் மக்கள் சுற்றுலா பயணிகள் போல், கோயிலுக்கும் தரிசனத்துக்கு வருகின்றனர். இது கோயிலுக்கு வரும் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது. பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கறாராக இருக்கும் பக்தர்கள், ஆலயத்தின் தூய்மையைப் பராமரிக்க அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், ஆலய இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பெயரில் கோயிலில் ஓர் அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டது. அதில், பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிப்பு குறித்து குறிப்பிடப் பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில்…
ஆண்கள் பாரம்பரியமான வேட்டி சட்டை, முழுக்கால் பேண்ட், சட்டை, ஷர்வாணி ஆகிய பாரம்பரிய உடைகளை உடுத்தி வரவேண்டும். கைலி, அரைக்கால் பேண்ட் போன்ற உடைகளை உடுத்தி வரக்கூடாது.
பெண்கள் பாரம்பரியமான சேலை, ரவிக்கை, பாவாடை, தாவணி, சுடிதார் துப்பட்டாவுடன் அல்லது பஞ்சாபி உடை அணிந்து வரவேண்டும். டி-ஷர்ட், பனியன், ஸ்கர்ட், மினி ஸ்கர்ட், லெக்கின்ஸ் போன்ற உடைகளை உடுத்தி வரக்கூடாது. துப்பட்டா அணியாமல், குர்தா மேல் சட்டை மட்டும் அணிந்து வரக்கூடாது. கண்டிப்பாக மேல் துப்பட்டா அணிய வேண்டும்.