ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
பிப்ரவரி 15-ம் தேதி, பணிமுடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், மூன்று இளைஞர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அந்தப் பெண்ணை மிரட்டி கடுமையாகத் தாக்கிய கும்பல், அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மங்கலகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதுகுறித்துப் பேசிய மங்கலகிரி காவல்துறை அதிகாரிகள், ‘இந்தப் பெண் விஜயவாடாவில் உள்ள கல்வி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். கடந்த பிப்ரவரி 14-ம் தேதி, பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது இளைஞர் ஒருவர் லிஃப்ட் கேட்டுள்ளார். அந்த நபர், தன் பெயர் சைதன்யா என்றும் ஐடிஐ படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு, வேலைக்கு ஏதாவது உதவ முடியுமா எனக் கேட்டுள்ளார். தன்னால் முடிந்த உதவியைச் செய்வதாகக் கூறி செல்போன் எண்ணை வழங்கியுள்ளார்.
இதையடுத்து, அடுத்த நாள் ஒரு எண்ணிலிருந்து இவருக்கு அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர், தன்னை சைதன்யா என அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் நேற்று உங்களிடம் லிஃப்ட் கேட்டேன். வேலை தொடர்பாக நேற்று கேட்டிருந்தேன் பதிலளிக்கிறேன் எனச் சொன்னீர்கள். சான்றிதழ்கள் தொடர்பாக உங்களிடம் பேச வேண்டும் என அந்த நபர் கூறியுள்ளார்.
அதற்கு இந்தப் பெண்ணும் சம்மதித்துள்ளார். பணிமுடிந்து திரும்ப கொஞ்சம் தாமதமானதால், இரவு 8 மணியளவில் லெனின் சென்டர் பகுதியில் சந்தித்துள்ளனர்.
என்னுடைய நண்பர்கள் ஆசீர்வாதம், நாகேஷ்வரராவ் இருவருக்கும் சான்றிதழ் வேண்டும் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் எனக் கூறி அழைத்துச்சென்றுள்ளார்.
சர்வீஸ் சாலையில் வைத்து இருவரையும் அறிமுக செய்துவைத்துள்ளார்.
இதையடுத்து, சைதன்யாவும் அந்தப் பெண்ணும் இருசக்கர வாகனத்தில் செல்ல, இரண்டு இளைஞர்களும் இவர்களை ஆட்டோவில் பின்தொடர்ந்து வந்துள்ளார். சைதன்யா திடீரென ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வாகனத்தைத் திருப்பியுள்ளார்.
அங்கு வைத்து அந்தப் பெண்ணை மிரட்டி, மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரிடமிருந்த செல்போனையும் பறித்துச் சென்றுள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் திரும்பிய பெண், சாலையில் ஒருவரிடமிருந்து செல்போனை வாங்கி தன் சகோதரனுக்கு விவரத்தை தெரிவித்துள்ளார்.
அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றனர்.