மாசி கருட சேவை ஸ்பெஷல் ! (1.3.20) ! மோக்ஷமளிக்கும் கருட சேவை !
மஹா விஷ்ணுவிற்கு வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவது கருடன். புள்ளரையன், பக்ஷி ராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் திருவைகுந்தத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நித்ய சூரி.
எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானாவ்ர் எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் பெரிய திருவடி என்றழைக்கப்படுகின்றார். மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து , ஒரு காலை முழங்காலிட்டு மடித்தும் மற்றோரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் , இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களைத் தாங்குவதற்காக நீட்டி பெரிய இறக்கைகளுடன் கருடாழ்வாரின் அழகே ஒரு அழகு.
பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
அனைத்து ஆழ்வார்களும் ( தன் ஆச்சாரியரை மட்டுமே பாடிய மதுரகவியாழ்வார் தவிர ) மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் திருவரங்கம் ஆகும். இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷம் சித்திரை பௌர்ணமியன்று காவிரி நதிக்கரையில் அம்மாமணி மண்டபத்தருகில் நடைபெறுகின்றது.
பெருமாள் அன்று தங்க கருடனில் சேவை சாதிக்கின்றார். மேலும் தை மாசி பங்குனி மாத உற்சவங்களின் போதும் நம்பெருமாள் கருட சேவை தந்தருளுகிறார்.
இவற்றுள் மாசி கருட சேவை மிகவும் சிறப்பு பெற்றது. மாசி கருடன் காசிக்குப் போனாலும் கிடைக்காது என்பது வழக்கு அக்கருட சேவையை கண்டு மகிழுங்கள்.
பெரியாழ்வார் பாசுரம் ( கருடன் மற்றும் திருவரங்கம்)
செருவாளும்புள்ளானன்மண்ணாளன் செருசெய்யும்நாந்தகமென்னும்
ஒருவாளன் மறையாளனோடாத படையாளன் விழுக்கையாளன்
இரவாளன்பகலாளனென்னையாளன் ஏழுலகப்பெரும் புரவாளன்
திருவாளனினிதாகத் திருக்கண்கள் வளர்கின்றதிருவரங்கமே.
தனியொருவராகப் போர் செய்யும் ஆற்றல் உடைய புள்ளினத் தலைவனான கருடாழ்வாரை வாகனமாகக் கொண்டவனும்,இவ்வுலகை நடத்தி வருபவனும், நாந்தகம் என்னும் வலிமையுடைய வாளைக் கொண்டு தீயவர்களை அழிப்பவனும், வேதங்களை ஆளுகின்றவனும்,என்றும் புறமுதுகைக் காட்டாத போர்ப்படையை வைத்துள்ளவனும் , அடியார்களுக்கு அள்ளித்தரும் ஆழகிய திருக்கைகளை உடையவனும், இரவு பகல் ஆகியவற்றை தோற்றுவிப்பவனும், ஏழுலகை மட்டுமின்றி என்னையும் ஆள்கின்றவனும்,திருமகளைத் தன்னகத்தே கொண்டுள்ளவனுமான
பரந்தாமன் ஆனந்த மயமாக யோகநித்திரை செய்யும் இடம்
திருவரங்கமாகும்…
– ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்






