
கலியுகம் ஆரம்பமான போது ஒரு கையால் நாவினையும் மறு கையால் மர்ம அவயவத்தையும் பற்றிக் கொண்டு கோரமான உருவத்தோடு கலி புருஷன் பிரவேசித்தான்.
“கலியுகத்தில் அனைவரையும் உணவில் நப்பாசை கொண்டவர்களாகவும் காமுகர்களாகவும் செய்வேன்” என்று சபதம் எடுத்தான்.
யுக புருஷனே இவ்விதம் கூறினால், மக்கள் நன்மையடைய வழி ஏது? ஆனால் படைப்புக் கடவுள் அபயமளித்தார். பகவானுடைய நாமத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். இரட்சிக்கப் படுவீர்கள்” என்றார்.
சுகப் பிரம்மம் ஸ்ரீமத் பாகவதத்தினை பூர்த்தி செய்யும் தருவாயில் பரீட்சித்து மகாராஜா சுக முனிவரிடம் கேட்டான், “மகா பிரபோ! கலியுக மக்களுக்கு நல்ல கதி எப்படி வாய்க்கும்?”.
சுகர் கூறினார், “கலியுகத்தில் யக்ஞ யாகங்களைச் சரிவரச் செய்து உய்வடைவதென்பது மிகக் கடினம். ஆனால் பகவானின் நாம சங்கீர்த்தனம் மூலம் உய்வடைய முடியும்” என்றார்.
‘ந அஹம் வஸாமி வைகுண்டே ந யோகி ஹ்ருதயே ரமௌ
மத் பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத’ என்றான் ஸ்ரீமன் நாராயணன் நாரதரிடம்.
‘நான் வைகுண்டத்திலும் இருப்பதில்லை. ஆத்ம விசாரம் செய்யும் யோகிகளின் இதயத்திலும் இருப்பதில்லை. என் பக்தர்கள் எங்கு நாம சங்கீர்த்தனம் செய்கிறார்களோ அங்கு நின்று கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்’ என்கிறான் பகவான்.
நெருப்பு தெரிந்தோ தெரியாமலோ தொட்டாலும் சுடும். அது போல் ஹரி நாமம் சொன்னால் நிச்சயம் சுபம் கிடைக்கும். பகவானின் நாமத்தை விட உயர்ந்த உபாயம் கலியுகத்தில் வேறொன்றும் கிடையாது.
உண்மையில் பிரார்த்தனை, ஜபம் இவற்றை எதற்காக செய்ய வேண்டும்?

ஸ்ரீ ராமச்சந்திர டோங்க்ரே மகராஜ், ஸ்ரீமத் பாகவத ரஹஸ்யத்தில் இது பற்றி கூறுகிறார். “எந்த செயலானாலும் மனதால் நினைக்கப் படாமல் செயலுருவம் எடுப்பதில்லை. ஒரு வேளை சொல்லாக வெளிப்படாவிட்டாலும், தீய எண்ணங்கள் காரியமாக மாறும்முன் சில வினாடிகள் முன்பாவது மனதாலோ நாக்கினாலோ உச்சரிக்கப் படுகிறது. இதனைத் தடுப்பதற்கே இறைவனின் திருப்பெயரை உச்சரிப்பதை மகான்கள் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
இறை நாமம் நம்மைப் பாவச் செயல்கள் செய்வதிலிருந்து தடுக்கிறது. மனிதப் பிறவி அரிதான வரம். அதனை உயர்வாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 84 லட்சம் ஜீவ ராசிகளுள் மனிதன் ஒருவனே உய்வடையும் வழி கொண்டுள்ளான்.
மனதினை அதிகாரம் செய்யும் தகுதியை நாம் பெற்றால்தான், நம்மோடு எப்போதும் நடந்து வரும் அன்புக்குரிய இறைவனின் அடிச் சுவடுகளை நம் கண்கள் பார்க்கப் பழகும். இறைவன் நம்முடன் பேசும் மிருதுவான சொற்களைக் கேட்க நம் செவிகளும் பழகும்” என்று அறுதியிட்டு உறுதி கூறியுள்ளார்.
எங்கேயோ காட்டுக்குச் சென்றால்தான் தவம் செய்ய இயலும் என்பதில்லை. நம் உடல் எங்குள்ளது என்பதை விட நம் மனம் எங்குள்ளது என்பதே முக்கியம்.
“மனிதன் துன்பம் வரும்போது இறைவன் மீது தவறு கண்டுபிடிக்கிறான். நம் துன்பங்களுக்குக் காரணம் நம் சொந்த இயல்பே. சுபாவத்தை மாற்றுவதென்பது கடினம். தீர்த்த யாத்திரையோ, யக்ஞ, யாகங்களோ சுபாவத்தை மாற்றமாட்டா. பிரார்த்தனையாலும் பரமாத்மாவின் தியானத்தாலும் மட்டுமே சுபாவம் சரி செய்யப் படுகிறது. பல பிறவிகளாகப் பாவங்கள் செய்து பழகிய இயல்பு, இறைவனின் நாமத்தை ஜபிப்பதன் மூலம் இறைவனின் அருளால் சரி செய்யப் படுகிறது” என்று பெரியோர் திடமாகக் கூறியுள்ளனர்.
நான் நல்லவனாக இருக்கிறேன். சமூக சேவை செய்கிறேன். இறைவனோடு எனக்கென்ன வேலை? என்று நாம் நினைக்கிறோம். பரோபகாரத்தால் மட்டுமே பகவானை அடைய முடியாது. பரோபகரமே முடிந்த முடிவல்ல. பரோபகாரத்தால் மனம் தூய்மை அடைகிறது. மனத்தூய்மை மட்டுமே சேர வேண்டிய இலக்கல்ல. சில சமயங்களில் இச்சேவை மனப்பான்மையே இறைவனை அடைவதற்கு தடையாகி விடுகிறது. ஜடபரதரின் கதை இதனை அழகாக விளக்குகிறது.
அரசனாகப் பிறந்து நல்லவிதமாக அரசாண்டு இறுதியில் சன்யாசம் மேற்கொண்டு காட்டிற்குச் சென்று தவமியற்றுகையில் ஒரு நாள் மாலை நதிக் கரைக்குச் சென்றார். அங்கு நிறைமாத கர்ப்பமான மான் ஒன்று நீரருந்திக் கொண்டிருந்தது. எங்கிருந்தோ திடீரென்று சிம்ம கர்ஜனை கேட்டது. பயந்து போன மான், குட்டியை ஈன்று விட்டு நதியில் அடித்துச் செல்லப்பட்டு இறந்து போனது.
பரிதாப உணர்ச்சியால் தூண்டப்பட்ட அந்த அரசனான சந்நியாசி மான் குட்டியை எடுத்து வந்து வளர்க்கத் தொடங்கினார். அதற்கு உணவளிப்பதும் மற்ற விலங்குகளிடமிருந்து காப்பதுமாக அவருடைய தினசரி அட்டவணை மாறியது. தவத்தை மறந்தார். அதே நிலையில் உயிர் துறந்தார்.
மானை நினைத்தவாறு உயிரை விட்டதால் மறுபிறவி எடுக்க வேண்டியதாயிற்று. மானாகவே பிறப்பெடுத்தார். ஆனால் முற்பிறவி தவம் வீண் போகவில்லை. அவருக்குத் தன் பிறப்பு ரகசியங்கள் நினைவுக்கு வந்தன. அத்தனை தவம் செய்த பின்னும் உய்வடையும் வாய்ப்பை இழந்தோமே என்று பச்சாதாபப்பட்டார். கவனத்துடன் இருந்து இறை நினைவுடனே மரணமடைந்து மறு பிறவியில் ஒரு அந்தண குமாரனாக ஜென்மமெடுத்து மீண்டும் தவம் இயற்றத் தொடங்கினார். அவரே ஜடபரதர்.
உயிர் துறக்கும் சமயத்தில் எதனை நினைக்கிறோமோ அப்பிறவி கிடைக்கிறது. எனவே தான் இறை நாமத்தை எந்நேரமும் உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று பெரியோர் எச்சரித்துள்ளனர். சதா சர்வ காலமும் பகவானின் நினைவு இருந்தால்தான் மரண சமயத்திலும் அந்நினைவு வரும். எனவே தான் மரணப் படுக்கையில் கிடப்போரின் அருகில் இருப்பவர்கள் வீண் பேச்சு பேசாமல் பகவானின் நாமங்களை உரக்கச் சொல்ல வேண்டுமென்று கூறப் படுகிறது.
ஒருவன் நடக்கும் போது ஒரு காலை முன்வைத்து, அடுத்த காலை எடுத்து வைப்பது போலத் தான் உயிர் பிரியும் தருணத்தில் அடுத்துச் சேர வேண்டிய இடம் தீர்மானிக்கப் படுகிறது.
புண்ணியச் செயல்கள் செய்வதால் கர்வம் தலைக்கேறும் அபாயம் உள்ளது. புகழின் மீது மனம் லயிக்கிறது. ஆகையால்தான் நாம் செய்த நற்செயல்களையும் உதவிகளையும் மறந்து விட வேண்டுமென்ற எச்சரிக்கை உள்ளது. மகாபாரதத்தில் வர்ணிக்கப்படும் யயாதி மகாராஜாவின் கதையை டோங்க்ரே மகராஜ் இதற்கு எடுத்துக்காட்டாக விவரிக்கிறார்.
தான் செய்த புண்ணியங்களின் பலனாக யயாதி உடலோடு சொர்க்கம் சென்றான். அங்கு சென்ற பின், இந்திரனின் அரியணை மேல் ஆசை கொண்டான். அதன் மேல் அமர விரும்பினான்.

இந்திரன் பயந்து தன் குரு பிரஹச்பதியிடம் சென்று முறையிட்டான். பிரகஸ்பதி இந்திரனிடம், “நீ யயாதியிடம் சென்று, அவன் பூமியில் இருக்கையில் என்னென்ன நற்செயல்கள் செய்தானென்று கேள். எப்புண்ணிய பலனால் இந்திரனின் அரியணை மேல் ஆசை கொண்டான் என்று விசாரி. செய்த புண்ணியங்களை வாய் விட்டுக் கூறுவதன் மூலம் அப்புண்ணியங்கள் அழியும்” என்றார்.
இந்திரன் பிரகஸ்பதியின் உபதேசப்படி, யயாதியிடம் சென்று விசாரித்தான். யயாதி, தான் செய்த நற்செயல்களின் பட்டியலை வெளியிட அப்புண்ணிய பலன் நசித்து, சுவர்கத்திலிருந்து கீழே விழுந்தான்.
அதிகப்படியான பாவம் மனதினால் செய்யப் படுகிறது. உடலால் அல்ல. ஆகவே மானசீக தியானமும் மானசீக சேவையும் உயர்ந்த சாதனைகளாக உரைக்கப் படுகின்றன.இதனை விளக்க பாகவத ரஹச்யத்தில் ஸ்ரீடோங்க்ரே மகராஜ் ஒரு அழகிய கதை கூறுகிறார்.
“ஒரு வணிகன் பாகவதர் ஒருவரிடம் சென்று,” மகராஜ்! எனக்கு இறைச் சேவை செய்யும் விருப்பமுள்ளது. ஆனால் என்னிடமுள்ள கஞ்சத்தனம் கொஞ்ச நஞ்சமல்ல.ஆகவே செலவில்லாத சேவை உபாயம் எதாவது உள்ளதா’? என்று வினவினான்.
அப்பாகவதர், மானசீக சேவையின் வழி முறைகளை விளக்கிக் கூறி, “மனதாலேயே இறைவனுக்கு அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்யம் அனைத்தையும் சமர்பித்து இறைத்தொண்டில் ஈடுபடு. உனக்கு இறைவனின் எந்த வடிவின் மேல் அதிக ஆசை?” என்று கேட்டார்.
வணிகன் தனக்கு பாலகிருஷ்ணன் என்றால் மிகவும் பிடிக்கும் என்றான். பாகவதர், “நல்லது. நீ உன்னை யசோதையாக பாவனை செய்து கொள். விடியற்காலையில் எழுந்து யமுனையிலிருந்து நீர் எடுத்து வந்து லேசாக சுட வைத்து வெது வெதுப்பான வென்னீரில் குழந்தை கிருஷ்ணனுக்குக் குளிப்பாட்டுவதாக பாவித்துக் கொள். பட்டுப் பீதாம்பரம் அணிவித்து அலங்கரித்து அழகு பார். ஆனால் தினமும் சின்னி கிருஷ்ணனிடம் கேட்டு அவன் விரும்பும் உடையைத்தான் அணிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவனுக்குக் கோபம் வந்து விடும். முரண்டு பிடிப்பான். பாலும் வெண்ணெய்யும் கொடுத்து வளர். அவன் அவற்றை உண்பதைப் பார்த்தது ஆனந்தம் கொள். ஆரத்தி எடுத்து, தவறுதல்களுக்கு மன்னிப்பு வேண்டு. பட்டு மெத்தையில் படுக்கச் செய்து தாலாட்டுப் பாடி தூங்கச் செய். காலையில் மீண்டும் மங்கள கீதம் பாடி துயிலெழுப்பு. பகவானின் உபசாரத்திலும் அலங்காரத்திலும் மனம் லயித்து விட்டால் பிரம்மானந்தம் ஏற்பட்டு விடுகிறது” என்று அவனுக்கு உபதேசம் செய்தார்.
அவர் கூறிய விதமாக வர்த்தகன் பாலகிருஷ்ணனுக்கு அன்போடு மனதால் சேவை செய்யத் தொடங்கினான். ஒவ்வொரு பொருளும் பிரத்தியட்சமாக கண்ணுக்குத் தென்படுமளவிற்கு தன்மயம் அடைந்து ஆனந்தமடைய ஆரம்பித்தான். இவ்வாறு பன்னிரண்டாண்டுகள் கழிந்தன.
ஒரு நாள் கிருஷ்ணனுக்காக பால் எடுத்து வந்தான். அதில் சிறிது இனிப்பு அதிகமாக போட்டு விட்டோமோ என்ற ஐயம் ஏற்பட்டது. இயல்பாக கருமியானதால் அதிகம் உள்ள சர்க்கரையை எடுத்து வைத்துக் கொண்டால் வேறு எதற்காவது பயன்படும் என்று எண்ணினான். ஆனால் அங்குதான் பாலுமில்லை சர்க்கரையுமில்லையே! வியாபாரி மனதாலேயே சர்க்கரையை நீக்க எத்தனித்தான்.
ஸ்ரீ கிருஷ்ணன் பார்த்தான். ‘ இவன் எப்பேர்பட்டவனாக இருந்தாலும் எனக்கு இத்தனை ஆண்டுகளாக சேவை செய்து வருகிறான்’ என்று மகிழ்ந்து அவனுக்கு தரிசனமளிக்க தீர்மானித்தான்.
வணிகனின் எதிரில் தோன்றி அவன் கையைப் பற்றி, “சர்க்கரை அதிகமானால் என்ன? நீ தான் செலவொன்றும் செய்ய வில்லையே!” என்றான்.
பகவானின் அந்த ஸ்பரிசத்தால் வணிகன் தன்னை மறந்தான். இறைவனுக்கு நிரந்தர சேவை செய்பவனாக அவனோடு ஐக்கியமானான்.
பன்னிரண்டாண்டுகள் எந்த சாதனையையும் நியமத்துடன் கடைப் பிடித்தால் அதற்கு நிச்சயம் பலம் கிடைக்கும்.”
‘பார்ட் டைம்’ வேலை செய்துவிட்டு முழு சம்பளமும் எதிர்பார்ப்பது சரியாகுமா? நம் மனதின் ஒரு பாகத்தை மட்டும் இறைவனின் பக்கம் வைத்து, மீதியை உலகியல் விவகாரங்களில் ஈடுபடுத்தினால் இறைவனின் அருளை முழுமையாகப் பெற இயலுமா? மரம் வளரும் முன்பே கனியை எதிர்பார்க்கலாமா?
அனைத்திற்கும் ஒரு விலை உண்டு. சில பொருட்களைப் பெற வேண்டுமானால் வரி செலுத்த வேண்டியிருக்கும். மன நிம்மதியையும் ஆனந்தத்தையும் பெற விரும்பினால் தியானம் பிரார்த்தனை ஜபம் போன்ற வரிகளைக் கட்ட வேண்டும்.
‘தினமும் மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் நாம ஸ்மரணை செய்ய வேண்டும். இறைவன் நம்மிடமிருந்து நேரத்தைக் கேட்கிறான். செல்வத்தை அல்ல’ என்று பெரியோர் கூறியுள்ளனர்.
ஆன்மீக சாதனை மூலம் மனம் தூய்மை அடைகிறது. அரிஷட்வர்கங்களான காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யங்க்ளை நம் இதயத்தில் அமர்த்திக் கொண்டு இறைவனை அழைத்தால் அவன் எங்கு வந்து அமர்வான்? இவ்வறுவரில் யாராவது ஒருவனை வெளியே துரத்தி விட்டு இறைவனுக்கு நம் இதயத்தில் சிறிதாவது இடம் கொடுத்தால் மீதி உள்ளவர்களை அவனே துரத்தி விடுவான்.
சமர்த்த ராமதாசர் தன் சொந்த அனுபவத்தில் ‘தாச போதம்’ என்ற நூலில் பதின்மூன்று கோடி ஜபம் செய்தால் இறைவனின் தரிசனம் கிடைக்கும் என்று எழுதியுள்ளார்.
‘ஜபம் மனதை ஒருநிலைப்படுத்துகிறது. இறைவனை நோக்கி திருப்புகிறது’ என்கிறார் அன்னை சாரதா தேவி.
மந்திரங்கள் வெறும் அட்சரங்களல்ல. அவை தெய்வங்களின் சரீரங்கள்; சொரூபங்கள். மனனம் செய்பவரை காக்கும் சக்தி, சாமர்த்தியம் கொண்ட எழுத்துக்களுக்கு ‘மந்திரம்’ என்று பெயர்.
ஜபம் செய்ததன் பலன் உடனே கிடக்கவில்லை என்றால், முன்வினைப் பயன்கள் மிகுதி உள்ளன என்று உணர வேண்டும் அவை கூடத் தொலைய வேண்டுமானால் இன்னும் அதிகமாக ஜபம் செய்ய வேண்டும். இதற்கு சுவாமி வித்யாரண்யரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்சியை எடுத்துக்காட்டாக உரைக்கிறார் ஸ்ரீ டோங்க்ரே மகராஜ்.
சுவாமி வித்யாரண்யர் சிறு வயதில் மிகவும் ஏழ்மையில் வாடினார். செல்வத்தைப் பெற வேண்டி காயத்ரி மந்திரத்தை இருபத்து நான்கு முறை புரச்சரணம் செய்தார். இருபத்து நான்கு புரச்சரணம் என்றால் ஒவ்வொரு முறையும் இருபத்து நான்கு ஆயிரம் ஜபம் செய்து அதில் பத்தில் ஒரு பங்கு ஹோமம், அதில் பத்தில் ஒரு பங்கு பிராமண போஜனம், ….இவ்விதம் இருபத்தி நான்கு முறை செய்ய வேண்டும். ஆனால் அவருக்கு செல்வம் கிடைக்க வில்லை.
சோர்ந்து போய் தோல்வியடைந்து வைராக்கியம் வரப் பெற்று சன்யாசம் வாங்கிக் கொண்டார். அச்சமயத்தில் அவருக்கு காயத்திரி தேவியின் தரிசனம் கிடைத்தது.
தேவி கூறினாள்,”மகனே! நான் மகிழ்ந்தேன். உனக்குத் தேவையானதை கேள்”.
வித்யாரண்ய ஸ்வமிக்கு ஆச்சர்யமேற்பட்டது. அவர் அம்பாளை வணங்கி, “தேவி! எனக்குத் தேவை ஏற்பட்ட போது நீ வரவில்லை இப்போது எனக்கு எந்த கோரிக்கையும் இல்லை. ஆனாலும் அப்போது சந்தோஷமடையாத நீ தற்போது எதனால் மகிழ்ந்தாய்?” என்று கேட்டார்.
தேவி பதிலளித்தாள், ” கொஞ்சம் பின்னால் திரும்பிப் பார், மகனே!”
வித்யாரண்யர் திரும்பிப் பார்த்தார். அங்கு சற்று தொலைவில் இருபத்து நான்கு மலைகள் எரிவது போல் தெரிந்தது.
“தேவி! இது என்ன குதூகலம்?” என்று கேட்டார்.
“இவையனைத்தும் நீ முற்பிறவிகளில் செய்து கொண்ட பாவ மூட்டைகள். உன் தவத்தால் அவை எரிந்து சாம்பலாயின. இருபத்து நான்கு மலைகளுக்குச் சமமான உன் பாவங்கள் தீர்ந்து விட்டதால், நான் உடனே வந்து உனக்கு தரிசனமளித்தேன்”.
“தாயே! நான் இப்போது பவித்திரமாகி விட்டேன். எனக்கு எந்த ஆசையும் இல்லை”.
பிற்காலத்தில் இவர் ‘பஞ்சதசி’ எனப்படும் மிகப் பிரசித்தமான வேதாந்த நூலை இயற்றினார். இவரே ஹரிஹர, புக்கர்களை அரசர்களாக்கி ஹம்பியை தலைநகராகக் கொண்ட விஜயநகர சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்து மூன்று தலை முறை அரசர்களுக்கு ராஜ குருவாக விளங்கிப் புகழ் பெற்றார்.
நம் மனதிலிருந்து ‘ நான் ,எனது’ எனும் சிந்தனைகளின் தீவிரம் குறைந்து சிறிது சிறிதாக அவை நம்மை விட்டு விலக வேண்டுமானால் சாதனை தேவை. சிறைக் கைதியை ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்கு அழைத்துச் செல்கையில் இரு காவலர்கள் அவனுடைய இரு புறமும் நடந்து வருவார்கள்.
அதே போல் நமோடு எப்போதும் அகங்காரம், மமகாரம் என்னும் இரண்டு பந்தங்கள் நமக்கு விலங்கு பூட்டி கஷ்டங்கள் என்னும் சிறையில் அடைத்து வைத்துள்ளன. என்றைக்கு அவ்விரண்டு காவலர்களும் அக்கைதியோடு வரவில்லையோ அன்று தான் அவன் சுதந்திர மனிதனாக அறியப்படுவான். அதே விதமாக இவ்விரண்டு பந்தங்களும் நம்மை விட்டு விலகினால், நாமும் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுவோம். நம்மை விட்டு இவ்விலங்கு நீங்க வேண்டுமென்றால் பிரார்த்தனை அவசியம்.
பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டுமென்பதைப் பற்றி ஒரு கதை உண்டு. அக்பர் சக்ரவர்த்தியின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இதைப் பற்றி அழகாக விவரிக்கிறது.

அக்பர் ஒரு முறை வேட்டையாட காட்டிற்குச் சென்றார். மாலை நேரத் தொழுகை வேளை நெருங்கவே,அங்கேயே முழந்தாளிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். காலையில் காட்டிற்குச் சென்ற தன் கணவன் மாலை ஆகியும் திரும்பாததைக் கண்ட ஒரு விவசாயியின் மனைவி அவனைத் தேடத் தொடங்கி அவ்வழியே வந்தாள். அவள் தனக்கிருந்த கவலையில் அங்கிருந்த அரசரையோ பரிவாரத்தையோ கவனிக்கவில்லை. சரியாக அக்பர் முழந்தாளிட்டு அமர்ந்த இடத்தருகில் அவள் தடுக்கி விழுந்து பரபரப்போடு எழுந்து சென்றாள். காட்டில் நமாஸ் செய்து கொண்டிருந்த அக்பருக்கு அதைக் கண்டு கோபம் வந்தது. ஆனாலும் தெய்வப் பிரார்த்தனை செய்கையில் பேசக்கூடாது என்பதால் மீண்டும் கண்களை மூடிப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
தன் கணவனை காட்டில் சந்தித்து அந்த மகிழ்ச்சியோடு அதே வழியே திரும்பி வந்த விவசாயி மனைவி அப்போது தான் அரசனையும் வீரர்களையும் கவனித்தாள். பயமடைந்தாள்.
அக்பர் கோபத்தோடு கேட்டார், “அரசரென்ற பயம் கூட இன்றி கௌரவ மரியாதை இல்லாமல் என் பிரார்த்தனைக்கு இடைஞ்சல் விளைவித்தாய், இதற்குச் சரியான காரணம் கூறாவிட்டால் தண்டிக்கப்படுவாய்” என்றார்.
அப்போது அப்பெண்மணி தைரியமாக,”மகாராஜா! நான் என் கணவரைத் தேடிக் கொண்டு சென்றதால் தங்களை கவனிக்க வில்லை. அச்சமயத்தில் என் மனதில் என் கணவரைத் தேடுவதை தவிர வேறெந்த யோஜனையும் இல்லை. ஆயின், தாங்கள் இறைவன் மீது மனதை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறுகிறீர்கள். இறைவன் என் கணவரை விட உயர்ந்தவன். அப்படியிருக்க நீங்கள் என்னை எப்படி கவனிக்க முடிந்தது?” என்று கேள்வி எழுப்பினாள்.
அதை கேட்ட அக்பரால் பேச முடியவில்லை. பின்னர் தன் பரிவாரத்திடம் இவ்வாறு கூறினாராம். ‘இன்று ஒரு குடியானவப் பெண் பிரார்த்தனையும் ரகசியத்தை எனக்குப் புரிய வைத்தாள்” என்று.
சீன யாத்திரிகர் யுவான் சுவாங் சிறந்த புத்தமத தத்துவவாதி. அவர் ஒரு முறை மத்தியப் பிரதேச தண்டகாரண்ய காடுகளின் வழியே செல்கையில் ஒரு திருட்டுக் கூட்டத்திடம் சிக்கினார். காட்டு வாசிகளான அவர்கள் நர மாமிசம் தின்னும் கொள்ளையர்கள். யுவான் சுவாங்கை பலியிட விரும்பி அவரை சுற்றிலும் சேர்ந்து குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர்.
யுவான் சுவாங் சைகையாலும் தான் கற்றிருந்த சிறிதளவு இந்திய மொழிகளாலும் தான் இறைவனை பிரார்த்திக்க அனுமதி கோரினார். மனிதர்களையே கொன்று தின்னும் அக்கூட்டத்திடம் கூட தெய்வ பயம் இருந்தது போலும். அனுமதி யளித்தனர்.
தன்னைச் சுற்றி எழும்பும் ஒலிகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல் மனதை ஒருநிலைப்படுத்தி கீழே அமர்ந்து இறைப் பிரார்த்தனையில் ஈடுபட்டார் யுவான்சுவாங். இரண்டு நிமிடங்கள் கடந்தன. திடீரென்று பலத்த காற்று வீசியது. அது புயலாக மாறி, மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. தூசி எழும்பி இருள் சூழ்ந்தது. அக்கொள்ளையர்களில் இருவர் மரங்களின் கீழ் சிக்கி அங்கேயே இறந்தனர். மற்றவர்கள் பயந்தோடினர்.
ஆனால் யுவான் சுவாங் கவலையற்று அமைதியாக அமர்ந்திருந்தார். அரைமணி நேரம் சென்ற பின் இயற்கை சீற்றம் தணிந்தது. யுவான் சுவாங் எழுந்து தன் பயணத்தைத் தொடர்ந்தார். கி.பி. 644 ல் தாய் நாடான சீனாவிற்குத் திரும்பி பயணக் குறிப்புகளை எழுதி வைத்தார்.
பிரார்த்தனையால் சாதிக்க முடியாததென்று எதுவுமில்லை.
- கட்டுரை: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்-62