
நம் எல்லார் மனதிலும் எழும் கேள்விகள் ஏறக்குறைய மிருகத்தின் வாழ்க்கையைப் போலவே வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை கடவுளை ஏற்றுக் கொள்வாரா? நாம் நம்முடைய பெரும்பாலான சக்தியையும் நேரத்தையும் காலத்தையும் சம்பாதிப்பது செலவிடுவது என வீணடித்துக் கொண்டிருக்கிறோம்.
மீதி இருக்கும் நேரத்தை தூக்கத்தில் கழித்து விடுகிறோம் இறைவனின் அளவு கடந்த பக்தி கொண்டு ஆன்மீக வாழ்க்கையை தேடாத நாம், கடமை தவறிய நாம் எப்படி மிருகங்களை காட்டிலும் வித்யாசமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லமுடியும்.
ஆதி சங்கர பகவத்பாதாள் எழுதிய சிவபுஜங்க ஸ்தோத்திரத்தில் சிவனிடம் கேட்கிறார் நாம் ஒரு மிருகத்திற்கு சமமாக வாழ்க்கையை நடத்தி வந்தாலும் சிவன் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நந்தி சிவபெருமானுடைய வாகனம் மிருகம் தானே அதாவது ஒரு காளை மாட்டை சிவன் ஏற்றுக்கொண்டார் என்றால் மிருகத்தைப் போல் உள்ள பக்தன் ஏற்றுக்கொள்வதில் சிவனுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்க முடியாது.
ஆகையால் மிருகத்தை தனதாக்கிக் கொண்டுள்ள சிவனால் எப்படி ஒரு பக்தனை பார்த்து மிருகத்தைப் போல வாழ்க்கை நடத்திக் கொண்டு இருக்கிறாயே என்று கூறமுடியும்? மிருகத்தை போல் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும் பாவங்கள் புரிந்தவனாக வேறு இருந்தால் அப்படிப்பட்ட பக்தனைப் பாவியை சிவன் ஏற்றுக்கொள்வாரா?
ஆதிசங்கரர் அடுத்த ஸ்லோகத்தில் அந்த பக்தன் மீது அன்பை பொழியத் தான் வேண்டும் என்று கூறியுள்ளார் மகா பாதகச் செயலை புரிந்த சந்திரனையே தமது தலையில் சிவன் வைத்துக் கொண்டிருக்கவில்லையா? சந்திரனின் குரு பிரகஸ்பதி அவருடைய மனைவி தாராவை சந்திரன் தீண்டி அவள் மூலமாக ஒரு குழந்தையை வேறு பெற்றுக் கொண்டான். இத்தகைய செயல் புரிந்த சந்திரனையே சிவன் தனது தலையில் வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பக்தனின் பாவங்களை காரணம் காட்டி அவனை புறக்கணிக்க சிவனால் முடியுமா?

ஒரு மிருகத்தைப் போல இருந்தாலும் பாவியாக இருந்தாலும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பார்த்தோமானால் இறைவனிடம் முறையிடும் பிரார்த்தனை ஆனது கபடம் இன்றி இருக்கவேண்டும் அல்லவா? உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இரட்டை நாக்கு கொண்ட மனிதனாக ஒரு பக்தன் இருக்கக் கூடாது என்றால்
அதுவும் தேவையில்லை என்று கூறும் பகவத்பாதாள் இப்படி இரட்டை நாக்கு கூடியதாக இருக்கக் கூடும் என்று சொன்னால் சிவன் இரட்டை நாக்கைக் கொண்ட பாம்பை உனது கழுத்தில் நன்றாக வைத்துக் கொண்டிருக்கிறாய். ஒரு பாம்பிற்கு இடம் கொடுத்து நீ என்னை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது? என்று கேட்கிறார். முடிவாக ஒருவனது உண்மை நிலைமை எப்படி இருந்தாலும் சிவன் அவனை ஏற்றுக் கொண்டதும் அவன் நிச்சயம் சிவனால் நல்வழிப்ப்டுத்தப்படுவான் என ஆதிசங்கரர் துதிக்கிறார்

அந்த பிரார்த்தனையின் கருத்து இறைவனிடம் நாம் எப்படி சென்றிருந்தாலும் அவர் தனது அளவற்ற கருணையினால் தமது கொள்கைகளையும் வரையறைகளையும் பொருட்படுத்தாமல் நம்மை ஏற்றுக் கொள்கிறார் என்பதே ஆகும்.


